SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கற்பித்தல் என்னும் கலை

2020-09-14@ 15:58:10

நன்றி குங்குமம் தோழி

‘மாணவர்கள்’ அல்லது ‘பிள்ளைகளிடம்’ நட்பாகப் பழகுவது நமக்கு பலவிதத் திலும் சந்தோஷத்தை ஏற்படுத்தித் தருவதுடன், நம் கவலைகளையும் மறக்க முடியும். குடும்பத்தில் பலர் ஒன்று கூடும்பொழுது பலவிதமான கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம். அப்பொழுது வாக்குவாதங்கள் எழலாம். ஒருவருக்கொருவர் மனஸ்தாபம்கூட வரலாம். ஆனால் நம் பிள்ளைகளிடம், நம்மிடம் கற்கும் மாணவச் செல்வங்களுடன் பழகும்போதும், பேசும்போதும் இருவருக்குமான இடைவெளி குறைந்து நட்பு மேலிடுகிறது. இன்னும் சொல்லப்போனால், அவர்களிடமிருந்து நாம் சிலவற்றை கற்றுக்கொள்ளக்கூட முடியும். உதாரணமாக, நாம் விளையாட்டுத் துறையில் அதிகம் அக்கறை காட்டாதவர்களாக இருக்கலாம். பிள்ளைகள் அதுபற்றி நிறையவே தெரிந்து வைத்திருப்பார்கள். சிலர் நிறைய கதைப்புத்தகங்கள் படிப்பதை பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நிறைய தெரிந்திருக்கும்.

அவர் களுடன் உரையாடும்பொழுது, அவர்கள் திறமை நமக்கு நன்றாகவே தெரியவரும். அதன்மூலம் அவர்களின் விருப்பப் படிப்பை நம்மால் அறிய முடியும். அவர்கள் மனதில் எழும் சில அச்சங்கள் பெற்றோர்களிடம் சொன்னால் கவலைப்படுவார்கள் அல்லது பயப்படுவார்கள் என்று நினைக்கலாம். கற்பிப்பவர் அவர்களை ஊக்குவித்துப் பேசும்பொழுது, மாணவர்களும், தான் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மனம் விட்டுப்பேசி நம்மிடம் பகிர்ந்துகொள்வார்கள். நாமும் அவ்விஷயத்தில் உதவலாம். இப்படிப் பழகி, பல மாணவர்களின் திறமையையும், அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பது பற்றியும் நிறைய தெரிந்து வைத்திருந்தோம். அப்பொழுதுதான் மிகப்பெரிய அளவிலான, பள்ளிகளுக்கிடையே நடத்தப்படும் எழுச்சி மிகுந்த போட்டி அறிவிப்பு வந்தது. திறமைசாலிகளான பிள்ளைகளை ஒன்றுகூட்டி, கலந்து பேசினோம்.

கிட்டத்தட்ட இருபது விதமான நிகழ்ச்சிகள். நாட்டியம், நாடகம் போன்றவை மட்டுமல்லாமல், வினாடி - வினா, சங்கீதக்கலை, நகைச்சுவை நிறைந்த அம்சங்கள் மற்றும் பட்டிமன்றம் உட்பட பலப்பல நிகழ்ச்சிகள், அதிலும் பிரபலமான தொலைக்காட்சியில் என்றால் கேட்கவா வேண்டும்? பிள்ளைகள் எனக்கு உற்சாகம் கொடுத்த பின் மேலிடத்திலிருந்து அனுமதியும் பெற்றுவிட்டோம். கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் நாங்கள் குடும்பமாகவே செயல்பட்டோம். அத்தகைய காலகட்டம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நாட்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளி முடிந்து இரண்டு மணி நேரம் தினமும் ஒத்திகை. கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சிக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ‘ஓடி ஓடி உழைப்பது’ என்பார்களே! அதைத்தான் செய்துகொண்டிருந்தோம். உதவி செய்ய இரண்டு, மூன்று ஆசிரியர்கள் தானாகவே முன்வந்தார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு மாணவத்தலைவி அல்லது தலைவனை நியமித்தோம். அவர்கள் நன்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் ஒவ்வொன்றையும், அலசி ஆராய்ந்து குறைகளைப் போக்கி, சரிப்படுத்த உதவினோம்.

இதில் ஆசிரியர்கள்-மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோரும் நிறைய உழைத்தார்கள். நிகழ்ச்சிக்குத் தேவையான உதவிகளை செய்ய முன்வந்தார்கள். ஒருசில வேலைக்குப் போகாத பெற்றோர்கள் தினமும் பயிற்சி நேரத்தில் வந்து, எங்களுக்கு உதவினார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சி குழுவிற்கும் தேவையான ஆடை, அணிகலன்கள், அலங்காரப் பொருட்கள் என அத்தனையும் சேர்ப்பதில் மிகவும் அக்கறை காட்டினார்கள். எங்களுக்குள் நிறைய நெருக்கம் ஏற்பட்டது. ‘ஆடிஷன்’ என்னும் முதல் ஒத்திகை பள்ளியில் நடந்தது. நிலையத்தார் நேரில் வந்து அனைத்தையும் படம் பிடித்தனர். அனைத்தும் நன்றாக இருப்பதாகக்கூறி, ஒருசில குறிப்புகள் தந்தனர். இரவு எட்டு மணி ஆகியும், பிள்ளைகள் சோர்ந்துவிடவில்லை. அவர்களின் பெற்றோர் ஒத்துழைப்பும், கை கொடுத்தது. ஒருவழியாக அனைத்தும் தயாரானது. போட்டி நடைபெறும் நாள் வந்தது.

காலை ஏழு மணி முதல் இரவு பதினொறு மணி வரை படப்பிடிப்பு நடந்தது. கிட்டத்தட்ட ஒருவாரம் எங்களுக்கு உறக்கம் கிடையாது. உதவி ஆசிரியர்கள், பெற்றோர் இவர்களுடன் மாணவர்கள் சேர்த்து நாற்பதுக்கும் மேற்பட்டோர் இறுதிப் போட்டிக்கு ‘இன்பச்சுற்றுலா’ போன்று புறப்பட்டோம். வழி நெடுகிலும்
பிள்ளைகள் விதவிதமான தின்பண்டங்களை பரிமாறிக்கொண்டனர். பாட்டும், கூத்துமாக நேரம் போவதே தெரியாமல் நாள் சென்றது. ஒரு நிகழ்ச்சி படப்பிடிப்பில் இருக்கும்பொழுது, அடுத்த நிகழ்ச்சிக்கு மாணவர்களை தயார் செய்து நிறுத்த வேண்டும். அதிலும் படப்பிடிப்பு நடைபெறும்பொழுது, சப்தமில்லாமல் அமைதி காக்க வேண்டும். அதுதான் பிள்ளைகளிடம் சிரமமான காரியம். எதிரணியுடன் அவர்கள் வாக்குவாதம் செய்யாதவாறு பார்த்துக்கொள்ளுதலும் அவசியம். சாப்பாடு அனைத்தும் நிலையத்தாரே ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு வழியாக முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்தன.

இருவரும் சமநிலை என்று முடிவாயிற்று. மிகவும் லேட்டானதால் பெற்றோர்கள் கவலை யுடன், தொலைபேசியில் கேட்க ஆரம்பித்தனர். ஒவ்வொருவரையும் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்து, நாங்கள் வீடு திரும்ப இரவு பன்னிரெண்டு மணியாயிற்று. அப்படியொரு தூக்க நிலையிலும், மாணவர்கள் மறுநாள் தாங்கள்தான் ஜெயிக்க வேண்டும் என்று ஒருவருக்கொருவர் சபதம் பூண்டனர். மறுநாளும் காலை அனைவரும் புறப்பட்டோம். முதல்நாள் இருந்த உற்சாகம் சிறிது குறைவாக மாணவர்களிடம் காணப்பட்டது. கடினமான உழைப்பு, போதிய தூக்கமின்மைக் காரணமாக இருந்திருக்கலாம். இருப்பினும் நிகழ்ச்சிகளில் முழு திறனையும் வெளிப்படுத்தினர். மதியம் சாப்பாட்டு நேரம். திடீரென்று மூன்று மாணவர்களைக் காணவில்லை. ‘எங்கே’ என்று கேட்டால், அனைவரும் மௌனம். எங்களுக்கு ரத்தமே உறைந்துவிட்டது. எங்கே சென்று பார்ப்பது, யாரிடம் கேட்பது ஒன்றும் புரியவில்லை.

அதே வகுப்பைச் சேர்ந்த அம்மாணவர்களின் நண்பர்களை தனியே அழைத்துச்சென்று ‘உண்மையைச் சொல்லுங்கள்’ என்று கேட்டோம். மெல்ல மெல்ல அவர்கள் உண்மையைக்கூற ஆரம்பித்தார்கள். இங்கேயுள்ள சாப்பாடு அவர்களுக்குப் பிடிக்கவில்லையாம். பத்து நிமிடங்களில் வெளியில் சென்று சாப்பிட்டு திரும்பி வந்துவிடுவதாகக் கூறியிருக்கிறார்கள். உணவு நேரம் என்பதால், நாங்கள் கண்டுபிடிக்க மாட்டோம் என்று நினைத்திருக்கிறார்கள். நாங்கள் உடன் வாசலில் சென்று அவர்கள் வருகைக்காக காத்திருந்தோம். சில நிமிடங்களில் மூவரும் திரும்பி வந்தனர். நாங்கள் வாசலில் நிற்பதைப் பார்த்ததும், அவர்களுக்கு வியர்க்க ஆரம்பித்தது. ‘என்னப்பா ஆச்சு’ என்று பரிவுடன் கேட்ட வுடன், ‘‘என் அம்மா சாப்பாடு கொண்டுவந்தாங்க மிஸ்’’ என்றான் ஒரு மாணவன். நாங்கள் உடனே ‘‘ஏன் அம்மா உள்ளே வரவில்லை, தெருவோடு போனார்கள், போன் செய்கிறேன்’’ என்று போனை எடுத்தவுடனேயே அவன்தான் வெளியில் சாப்பிடப்போனதையும், மற்ற இருவரும் கூட வந்ததாகவும் ஒப்புக்கொண்டான்.

பின் நாங்கள் அவனைத் திட்டவில்லை. ‘‘நல்லவேளை பத்திரமாக வந்துவிட்டீர்கள். ஏதேனும் ஒரு விபத்து நடந்திருந்தால் என்ன செய்வது? பெற்றோர் எங்களை நம்பியல்லவா அனுப்பியிருக்கிறார்கள். உண்மையைச் சொல்லியிருந்தால் வேறு ஏதேனும் நாங்களே சாப்பாடு ஏற்பாடு செய்திருப்போமே!’’ என்றோம். மூவரும் கண்ணீர் ததும்ப, காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்டனர். இது அவர்களிள் வேண்டுமென்று செய்த தவறாகாது. அந்த வயதின் பக்குவமடையா முதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட பருவம் அவர்கள் மனநிலை புரிந்து, அவர்களை அணுக வேண்டும். பின் ஒருவழியாக மீதமுள்ள படப்பிடிப்பு முடிந்து, அனைத்திலும் வெற்றியுடன் வீடு திரும்பினோம். பெற்றோர்களின் மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் எங்கள் களைப்பைப் போக்கின.

பருவ மாற்றமடையும் அத்தகைய வயதில், குணாதிசயங்களும் சிலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தலாம். சிலர், பெற்றோரிடம் சொற்பேச்சு கேட்கவில்லை என்று சொல்லுவார்கள். சிலரின் படிப்பில், ஆர்வம் குறைய ஆரம்பிக்கும். சிலர் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடக்க ஆரம்பிப்பார். அவற்றை புரிந்து கொண்டு, அவர்கள் போக்கிலேயே போய்தான் தவற்றைத் திருத்த முயற்சிக்கலாம். வெளியில் அவர்கள் சாப்பிடச் சென்றதில் தவறில்லை. சொல்லாமல் போனதுதான் மனதிற்குக் கவலை தந்தது. பொறுமையுடன்  குறையை சுட்டிக்காட்டியதால், அவர்கள் தன் தவறை உணர்ந்து விட்டார்கள். அடுத்த முறை இதுபோன்று நடக்க யோசிப்பார்கள். நிறைய விஷயங்களில், நாம் எதிர் பார்ப்பதுபோல் பிள்ளைகள் நடக்க மாட்டார்கள். நம் மனநிலை முதிர்ச்சி யடைந்த பருவம். இடத்திற்கு-சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் முழுவதும் எதிர்பார்க்க முடி யாது. பள்ளிப்படிப்பு வரை அவர்கள் மனநிலை விளையாட்டுப் போக்கில்தான் இருக்கும். இதை நாம் புரிந்துகொண்டாலே போதும்.

அப்படியும் சில நேரங்களில் நம் பொறுமைக்கும் சோதனை ஏற்படுவதுண்டு. அதிலும் எங்கு அமைதி காக்கப்பட வேண்டு மோ, அங்குதான் நமக்கு தர்மசங்கடங்கள் ஏற்படுவதுண்டு. பொதுவாக, குரல் மற்றும் காட்சிகள் பதிவு செய்யும் இடம் (Recording Studio), எவ்வளவு ேபர் இருந்தாலும் அமைதியாகவே காணப்படும். எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும், சப்தம் போட்டு பேசக்கூடாது. வேறு விதமான ஒலிகள் ஏற்படுத்தக்கூடாது என்றெல்லாம் வகுப்பெடுத்து விட்டு, பின் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றோம். மிகவும் பொறுமையுடனும், வியப்புடனும் அனைத்தையும் கேட்டுக் கொண்டார்கள். கிட்டத்தட்ட இருபது பிள்ளைகள் என்று நினைக்கிறேன். பஸ்ஸிலும் பயணத்தின்போது அனைத்தையும் கேட்டுக்கொண்டு அமைதியுடன் சைகை மூலம் பேசவே ஆரம்பித்து விட்டார்கள். ரேடியோ நிலையம் வந்து இறங்கியவுடன், இரண்டு, மூன்று பிள்ளைகள் வீதம் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு ஆசிரியரும் வரிசையில் அழைத்து வந்தனர். குறிப்பிட்ட அரங்கில் நுழைந்ததுதான் சமயம், குறுக்கும் நெடுக்கும் ஓட ஆரம்பித்து ‘ஆஹா, ஓஹோ’வென்று சப்தமிட ஆரம்பித்து விட்டார்கள்.

அனைவரும் அதிர்ச்சியடைந்து, சைகையில் அடக்கினோம். இவர்களின் கூக்குரல் கேட்டு, மறு அரங்கிலிருந்து ஓடிவந்து விட்டார்கள். அவர்களின் ‘ரெக்கார்டிங்’ பாதித்து விட்டது. ஒரு வழியாக தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டபின், எங்களின் நிகழ்ச்சி ஒவ்வொன்றாக பதிவானது. ‘நிகழ்ச்சி அருமை’, அனைவரும் மிக நன்றாகத் தன் பங்கை செய்ததாக நிலையத்தார் பாராட்டினார்கள். உண்மையிலேயே வெகுபுத்திசாலி, திறமை வாய்ந்த பிள்ளைகள் அவர்கள். திரும்பி வரும் பொழுது யாருமே எந்தக் குறும்பும் செய்யவில்லை. தவறை உணர்ந்து விட்டார்கள். அந்த வயதிற்கான ‘சுட்டித்தனம்’ அவர்களிடம் காணப்பட்டது. இதுதான் நியதி. எப்பொழுதும் அமைதியாக இருந்தால் அது சுறுசுறுப்பல்ல. ஓடியாடினால்தான் குழந்தைகள். அதைப் புரிந்துகொண்டு விட்டால் நமக்குக் கோபம் வராது. அவர்களின் குறும்புத்தனம்தான் நம் மனதை மயக்க வல்லது.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்