SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களை தாக்கும் கேன்சர் வைரஸ்!

2020-06-03@ 11:45:43

நன்றி குங்குமம் தோழி

கேன்சர் வைரஸ் என்பது ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது. அதிலும் மேற்கத்திய நாடுகளில் சிறுவயது குழந்தைகளையும் நம் நாட்டில் நடுத்தர மற்றும் முதியோர்களை அதிகம் தாக்குகிறது. புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஃப்ரீடம் ஃப்ரம் கேன்சர் ரிலீஃப் அண்ட் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (Freedom from Cancer Releif and Research Foundation) என்ற ஒரு தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி சேவையாற்றி வருகிறார் சவீதா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல் புற்றுநோயியல் துறை நிபுணர் டாக்டர் அனிதா ரமேஷ். நம் உடலைத் தாக்கும் கேன்சர் வைரஸ் குறித்து அவர் கூறுகையில்...

‘‘பாக்டீரியா என்பது நுண்ணுயிரி, வைரஸ் என்பது நச்சுக்கிருமி. நுண்ணுயிரிகள் நன்மையும் செய்யும் தீமையும் செய்யும். ஆனால், வைரஸ் கெடுதிக்கு மட்டுமே உருவானது. அதுவும் சாதாரண கிருமி அல்ல, உயிர்பலிதான் வைரஸின் குறிக்கோள். இதில், மனிதன், விலங்கு என பாகுபாடு கிடையாது. மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுதல், விலங்குகளிலிருந்து மனிதனுக்குள் புகுதல் என வைரஸின் கோரதாண்டவம் சொல்லால் விவரிக்க முடியாதது. இந்த பாக்டீரியாக்களும், வைரஸ்களும் நம் கண்களுக்குப் புலப்படாத காற்றில் கலந்துள்ள துணுக்கு உயிரினங்களாகும். இவை பரவும்போது உடலில் உள்ள ரத்த அணுக்களில் கொடும் மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஒருசில வைரஸ்கள் மரபணுக்களையே அடியோடு நசுக்கி மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும்.

பாக்டீரியாக்கள் பொதுவாக மருத்துவத்தில் குணப்படுத்திவிட முடியும். வைரஸிடம் இது பலிக்காது. ஒவ்வொரு வைரஸும் அது உருவான பிறகே அதை அழிப்பதற்கான மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து தயாரிக்கப்படுகிறது. தற்போது தாக்கியுள்ள கொரோனோவும் அந்த வகைதான், பலி அதிகரித்துள்ள நிலையில் மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ப்ளூ, எய்ட்ஸ், எச்-ஐ.வி., போன்றவை வைரஸ்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த வைரஸ்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி செல்களை தொடர்ந்து அரித்தும், அழிக்கவும் செய்கின்றன. ரத்தத்தில் என்னதான் புதிதாக செல்கள் முளைக்கத்தொடங்கினாலும் அவற்றை உடனடியாக கபளீகரம் செய்வதுதான் வைரஸின் வேலை. மருந்து மாத்திரைகள், கதிரியக்க சிகிச்சை போன்றவற்றால் வைரஸ் கட்டுப்படுத்தப்படுகிறது.

எனினும் ஆரம்பக்கட்டத்தில் வைரஸ் பாதிப்பு இருப்பவர் முற்றிலும் குணம் ஆக்கப்படுவார். வைரஸின் தாக்கம் அதிகரித்திருந்தால் மருத்துவ சிகிச்சைகளும் பலனளிப்பதில்லை. பொதுவாக வைரஸ் மரபணுக்களின் நேரடித் தாக்குதல், மரபணுக்களுக்குப் பதில் வைரஸ் அணுக்களை அதிகரிப்பு செய்தல், வேறு செல்களிலிருந்து பறித்த அணுக்களை வேறொருவரின் செல்களில் புகுத்துதல் என மூன்று விதமாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வைரஸ் பல்வேறு கேன்சர் நோய்களுக்கு காரணியாக உள்ளது. எப்ஸ்டீம்பார், ஹெபடைடீஸ் -பி, ஹெபடைடீஸ்-சி, ஹெபடைடீஸ்-8, தோல், கழுத்து, தலை, வாய், தொண்டை, நுரையீரல், குடல், கர்ப்பப்பை என மனித உடலில் பல்வேறு அங்கங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த கேன்சர் வைரஸ்களுக்கு ஒவ்வொன்றும் வெவ்வேறு வகை மருத்துவ சிகிச்சைகள் தேவை.

பொதுவாக இவை ரத்தநாளங்கள் மற்றும் சுரப்பிகளில் தங்களது ஆக்கிரமிப்பைத் தொடங்குகின்றன. அங்கிருந்து உடலின் ‘B’ செல்களைத் தாக்குகிறது. அதனால் நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இப்படித்தான் கேன்சர் உடலில் உருவாகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கடுமையாகப் பாதிப்படைகின்றனர். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரதம்  (Proton)  இவர்களுக்கு மருந்தாக செலுத்தப்படுகிறது. பொதுவாக குடல் அல்லது இரைப்பை கேன்சர் உலகில் பரவலாக உள்ளது. ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் அதிகமாகவே உள்ளது. மொத்தத்தில் உலகளவில் நானூறு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரத்தம், வியர்வை அல்லது கண்ணீர் மூலமாக இந்த வைரஸ் பரவும். தாயிடமிருந்து குழந்தைக்கும் தொற்றும், உடலுறவாலும் பரவும் வாய்ப்புள்ளது. இரைப்பையைத் தாக்கி அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்கும். ஆறு மாதத்திற்கு பின்பே பாதிப்பு தெரியவரும். ஹெபடைடீஸ்-சி வகையும் இதுபோலத்தான். இந்த வைரஸால் பதினேழு கோடி பேர் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் பாதிக்கப்படுகின்றனர். அடுத்ததாக சருமத்தில் ஏற்படும் கேன்சர் ஒரு வகையாகும். ரத்தக்கோளாறுகளால் இது உருவாகிறது. வடக்கு ஐரோப்பாவில் 1 முதல் 5 சதவிகிதத்தினரும், மத்தியத்தரை கடல் நாடுகளில் 5 - முதல் 20 சதவிகிதம் பாதிப்புள்ள நிலையில் ஆப்பிரிக்க துணை கண்டத்தில் 60 சதவிகிதம் மற்றும் அமெரிக்காவில் 40 சதவிகிதமாகக் காணப்படுகிறது.

இந்த வகை வைரஸின் தாக்கம் ஓரினச்சேர்க்கை, உடலுறவு மற்றும் எச்சில்களால் பரவுகிறது. அதுபோக தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகளாலும் ரத்தம் முழுவதும் மாற்றும்போதும் இந்த வகைத் தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பதினான்கு முதல் ஐம்பத்து ஒன்பது வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கேன்சர் தாக்கம் அதிகம் உள்ளது. எனினும் இந்த கேன்சருக்கு இரண்டு ஆண்டு சிகிச்சையில் குணம் காண முடியும்’’ என்றார் டாக்டர் அனிதா ரமேஷ்.

தொகுப்பு: தி.ஜெனிஃபா

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்