SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீடு தேடி வரும் யோகா..!

2020-03-16@ 18:00:52

நன்றி குங்குமம் தோழி

அன்றைய காலம் போல் இன்று மனிதர்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது. இயந்திரமயமாகிவிட்ட உலகில் மனிதர்களும் இயந்திரத்தனமாகவே வாழ்வை நகர்த்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதனால், உடல் பருமன், ஞாபக மறதி, இன்ன பிற வியாதிகள் என மனிதர்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து ஓரளவேணும் தன்னைத் தற்காத்துக்கொள்ள ஒரு சிறு உபகரணம்தான் யோகா. இந்த யோகா பயிற்சி பெற நாம் ஒரு சில இடங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு எல்லோருக்கும் பொதுவான முறையில் பயிற்சி அளிக்கப்படும். அதனால் பொதுவான பலன் கிடைத்தாலும், தனிநபருக்கான பலன் பெரிய அளவில் கிடைக்காது. எனவே, அவரவருக்குத் தேவைப்படும் யோகப் பயிற்சியை பிரணவ யோகா ( Pranava Yoga) என்ற பெயரில் அவர்களின் வீடு தேடிச் சென்று கொடுத்து வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த தேன்மொழி சந்திரசேகர்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூர்ல இருக்கின்ற ஒரு சின்ன கிராமம் செம்மேடு. அம்மா, அப்பா கூலி வேலை செய்து என்னை படிக்க வச்சாங்க. அப்போது, அந்த யோகா தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. என்னோட பேரன்ட்ஸ் என்னையும் என் தம்பியையும் நல்லா படிக்க வச்சாங்க. பத்தாம் வகுப்பு வரைக்கும் செம்மேடு கவர்மென்ட் ஹை ஸ்கூல், 11 மற்றும் 12 பீளமேடு பிஎஸ்ஜி பேசி ஸ்கூல். அதுக்கப்புறமா காலேஜ் வந்து பி.எஸ்.சி பயோடெக்னாலஜி படிச்சேன்.

கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போதே எனக்கு திருமணமாயிடுச்சு. என் கணவர் சந்திரசேகர் அவரோட தாத்தா அப்பானு பாரம்பரியமா யோகா பயிற்சி எடுப்பதை வழக்கமாக கொண்டு இருந்தாங்க. என் கணவருக்கு சின்ன வயசில் இருந்தே யோகா செய்வதில் ஆர்வம் இல்லை. இருந்தாலும் அப்பாவின் கட்டாயத்தால், யோகா கத்துக்கிட்டாரு. கல்யாணத்துக்கு பிறகு அவர் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டதால் யோகா செய்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டார். அவர் கேஸ் ஏஜன்சியில் மாதம் ரூ.7000 சம்பளத்தில் தான் வேலைப் பார்த்தார். அந்த சம்பளத்தைக் கொண்டு தான் என்னுடைய படிப்பு மற்றும் குடும்பத்தையும் ஓட்டி வந்தோம். ரெண்டு பேர் வீட்டிலும் பெரிய அளவில் சப்போர்ட் இல்லை. அதனால் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கும்போது, கல்விக்கடன் மூலமா கல்லூரி படிப்பும் படிச்சு முடிச்சேன்’’ என்றவர் அதன் பிறகு சொந்தமாக ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

‘‘எங்க இரண்டு பேருக்குமே ஒரு நிறுவனத்தில், இன்னொருத்தருக்கு கீழ் வேலைப் பார்க்க விருப்பமில்லை. அதனால கொஞ்சம் கடன் வாங்கி காளான் விதைகள், டீலர்ஷிப் எடுத்து பண்ணினோம். முதல்ல ஈரோடு அப்புறம் கோயம்புத்தூர், சேலம், கரூர் அப்படின்னு பிராஞ்ச் ஓபன் செய்து தொழில் நடத்தினோம். ஆனா நாங்க யாரை நம்பி இந்த பிஸினசை ஆரம்பிச்சோமோ அவங்க எங்களை கைவிட்டுட்டாங்க. ஆனாலும் நாங்க துவண்டு போகவில்லை. தனியாக செயல்பட ஆரமிச்சோம். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பிசினஸ் போகலை. அந்த தொழிலை தொடர்ந்து செய்ய முடியவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டு மறுபடியும் வங்கியில் கடன் பெற்று பாஸ்போர்ட் சென்டரை துவங்கினோம்.

அதுவும் நஷ்டமானது. இதற்கிடையில் 2014ம் ஆண்டு எங்களுக்கு மகன் பிறந்தான். துவங்கிய எல்லா தொழிலும் நஷ்டத்தில் சென்றதால், கையில் பணமும் இல்லாமல் மிகவும் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டேன். இதனால் எடை அதிகமாகி, கர்ப்பப்பை பிரச்சனை என உடலளவிலும் பாதிக்கப்பட்டேன். என் கணவரும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். எங்களுடைய பாதிப்பு என் மகனையும் தாக்கியது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம். அந்த சமயத்தில்தான் எங்களின் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர இருவரும் யோகா பயிற்சியை ஆரம்பிச்சோம். என் கணவர் தான் என்னுடைய குருன்னு சொல்லலாம். உடலளவில் நாங்க தயாரானோம். மனதளவிலும் தயாராக நிறைய புதுவிதமான பயிற்சியினை மேற்கொள்ள ஆரம்பிச்சோம்.

நம்ம என்ன நினைக்கிறோமோ அதுதான் வாழ்க்கையில் நடக்கும் என்பதை தெளிவா புரிஞ்சிகிட்டோம். எண்ணம் போல் வாழ்க்கை ஏற்றார்போல எங்க வாழ்க்கையிலும் நாங்க விருப்பப்பட்டது போல் எல்லாமே மாற ஆரம்பிச்சது. எங்க வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த இந்த யோகா மற்றும் எங்களோட வாழ்க்கை அனுபவத்தை எல்லாருக்கும் கொண்டுபோய் சேர்க்கணும்னு முடிவு செய்து ஆரம்பித்ததுதான் இந்த பிரணவ யோகா’’ என்றவர் அதில் வித்தியாசத்தை புகுத்தி மக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார்.

‘‘பொதுவாகவே நாம் எல்லாரும் ஒரு பயிற்சி கூடத்திற்கு சென்று தான் இதை கற்றுக் கொள்வோம். ஆனால் ஆர்வம் இருந்தாலும்  எல்லாராலும் சில காரணங்களால் அங்கு போய் பயிற்சி எடுக்க முடியாது. அதனால home yoga பயிற்சி முறையை ஆரம்பிச்சோம். காரணம் பெண்கள் இப்ப வேலைக்குப் போயிட்டு வீட்டு வேலையும் பார்த்துக் கொள்வதால் அவர்களின் உடல்நிலையை கவனிக்க தவறிடுறாங்க. அதனால நம்மளே அவங்க இடத்துக்குப் போய் சொல்லிக்கொடுத்தா என்னென்னு தோணுச்சு. பெண்களும் விரும்பி பயிற்சி எடுப்பாங்க. அவங்க டிராவல் பண்ணி வர நேரமும் மிச்சமாகும். லைஃப் லாங் லைஃப் ஸ்டைல அவங்க பண்ணிக்க முடியும்ன்னு தான் ஆரம்பிச்சோம்.  அதுலயும் ஸ்பெஷலா customized yoga பண்ணணும்னு முடிவு பண்ணி ஆரம்பிச்சோம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்னைகள், தேவைகள் இருக்கும். நம்ம எல்லாருக்கும் ஒரேமாதிரி சொல்லித்தருவது அவங்களுக்கு நல்ல பலன் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாது. ஆனா இந்த மாதிரி அவங்களுக்கு என்ன தேவையோ அதற்கேற்ற மாதிரி நாம ஒரு திட்டம் வகுத்து சொல்லிக் கொடுக்கும் போது அவர்களுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கிறது என்பதைக் கண்கூடாக பார்க்க முடிஞ்சுச்சு’’ என்றவர் யோகாவில் தனக்கென ஒரு அடையாளம் கிடைக்க பலப் போராட்டங்களை சந்தித்துள்ளார்.

‘‘நான் பல தொழில் செய்து இருக்கேன். எல்லாவற்றிலும் தோல்வியை சந்தித்தேன். அதே தவறு இதுலேயும் செய்யக் கூடாதுன்னு உறுதியா இருந்தேன். ஆனால் இதுலேயும் ஆரம்பத்துல அவ்வளவு சீக்கிரமா சக்சஸ் பண்ண முடியல. ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட், கம்பெனி, வீடு அப்படின்னு ஏறி இறங்கினேன். ஹோம் யோகா கிளாஸ் எடுக்கிறோம்ன்னு சொன்ன போது  நிறைய பேர் எங்களை நேரில் சந்தித்து பேசக்கூட விரும்பல. அப்பதான் Facebook, Instagram, WhatsApp, Twitter எல்லாத்திலேயும் Pranava Yoga என்ற தலைப்பில் ஒரு பக்கம் துவங்கி அதன் மூலமா தெரியப்படுத்த ஆரம்பிச்சோம். முதல்ல ஒருத்தர் யோகா வகுப்புக்கு வந்தாங்க, அவங்களுக்கு அவங்க என்ன எதிர்பார்த்து வந்தார்களோ அந்த பலன் கிடைச்சது. அவங்க மூலமா பலர் இணைந்தாங்க. பெண்களுக்கு நானும், ஆண்களுக்கு என் கணவரும் சேர்ந்து வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தோம். இரண்டு வருஷமாச்சு. கோவை மற்றும் சென்னையில் பயிற்சி அளித்து வருகிறோம்.

இப்படி எங்களைப் போலவே நிறைய யோகா ஆசிரியர்களை உருவாக்கி பயிற்சி கொடுத்து வருகிறோம். இந்த விஷயம்  இன்னும் நிறைய பேருக்கு கொண்டு சேரணும்ன்னு பிரணவ யோகா குறித்து யுடியூப் சேனல் ஆரம்பிச்சு, உடல்நலம், வாழ்க்கைமுறை எல்லாமே சொல்லித் தந்து வருகிறோம். அதுவும் குறிப்பா பெண்களுக்கு உடல் உழைப்பு இல்லாம போயிடுச்சு. அவங்களால வெளிய போய் கத்துக்கவும் முடியல. வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக கர்ப்பப்பை பிரச்னை, குழந்தையின்மை, அதிக எடை, தைராய்டு, மனஅழுத்தம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மாதவிடாய் கோளாறுகள் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.

ஆண்கள் மறுபக்கம் வேலைப்பளு காரணமாக மன அழுத்தம், கோபம், டென்ஷன் மற்றும் மூட்டு மற்றும் சுவாசம் குறித்த பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதனை மிக சுலபமாக  யோகாவில் சரி செய்திடலாம். தற்போது நாங்க பெண்கள், ஆண்கள், குடும்பம், கார்ப்பரேட் என ஒவ்வொருவருக்கும் ஏற்ப யோகா பயிற்சி அளித்து வருகிறோம். எங்க வாழ்க்கையில் நாங்க பட்ட அத்தனை கஷ்டங்களும், ஒரு அனுபவமா மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்க முடிகிறது. தினமும் 100 கிலோமீட்டர் டிராவல் பண்றோம். ஆனால் அந்த களைப்பு ஒரு நாளும் வந்தது இல்லை. நாலு பேருக்கு நல்லது சொல்லித்தருகிறோம் அப்படிங்கிற திருப்தியே எங்களை அடுத்த நாளுக்கு தயார் பண்ணிவிடுகிறது’’ என்றார் தேன்மொழி சந்திரசேகர்.

தொகுப்பு: தி.ஜெனிபா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்