SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2020-03-11@ 14:53:06

நன்றி குங்குமம் தோழி

* தக்காளி மலிவான காலத்தில் செலவு அதிகம் இல்லாமல் தோசை செய்யலாம். பழுத்த தக்காளி - 5 (அ) 6, அரிசி - 1/2 கிலோ, உளுந்தம் பருப்பு -  1 கரண்டி, வெந்தயம் - சிறிதளவு, உப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல். தேவையானால் வெங்காயம் சேர்த்து அரைத்து தோசை செய்யலாம்.

*  இன்று வைக்கும் சாம்பார் இரவிற்குள்ளேயே ஊசி விடுகிறதா? தவறு சாம்பாரில் அல்ல, நீங்கள் தயாரிக்கும் சாம்பார் பொடியில் கடலைப்பருப்பை  சேர்த்து இருப்பீர்கள். கடலைப்பருப்பை தவிர்த்து, 1/2 கிலோ மிளகாய் வற்றல், 100 கிராம் மிளகு, 400 கிராம் தனியா, 200 கிராம் துவரம்பருப்பு என்ற  விகிதத்தில் சாம்பார் பொடி தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள். சாம்பார் பிரமாதமாக இருப்பதோடு, அடுத்த நாள் வரை கெடாமல் இருக்கும்.

*  முளைகட்டிய கொத்துக் கடலையை அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து செய்யப்படும் சப்பாத்தி மிக சுவையாகவும், சத்துள்ளதாகவும்  இருக்கும்.

- என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

*  சமையலறையிலுள்ள மர ஜன்னல், கதவுகளை பளபளப்புடன் மின்னிடச் செய்ய டீத்தூளைப் பயன்படுத்தலாம். டீத்தூளைக் கொண்டு துடைத்திட  மரப்பொருட்கள் பளிச்சென்று காட்சி தரும்.

*  சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் (சிங்க்) தொட்டியை பளிச்சென்று வைத்திருக்க எலுமிச்சைப் பழச்சாற்றினை தொட்டியில் அழுக்குகள்  படிந்திருக்கும் பகுதியில் ஊற்றி தேய்த்தால் பளபளப்புடன் தொட்டி ஜொலிக்கும்.

*  வாழைப்பழத்தோலை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து எவர்சில்வர் பாத்திரங்களை  தேய்த்து கழுவினால் பளிச்சென்று இருக்கும்

- கஸ்தூரி லோகநாதன், அம்பத்தூர்.

*  சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை செய்யும்போது கொதித்து இறக்கும்போது, சிறிதளவு வெந்தயப்பொடி தூவி, கலக்கி இறக்கினால்  நல்ல வாசனையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

*  உளுந்து போண்டா செய்யும்போது அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை, தோல் நீக்கி சேர்த்து அரைத்து செய்தால் போண்டா மெத்தென்று  இருக்கும்.

- ஏ.திவ்யா, காஞ்சிபுரம்.

*  உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, சிறிதளவு சோம்பை தூளாக்கி, தூவினால் கமகமவென்ற மணத்துடன் சுவையாக இருக்கும்.

- எஸ்.பாரதி, மதுரை.

*  கொத்தமல்லிக்கீரையை வாழையிலையால் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் 1 வாரம் வரை பசுமை மாறாமல் இருக்கும்.

- ஆர்.மகாலட்சுமி, சென்னை.

*  உருளைக்கிழங்கை வதக்கும்போது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்காமல்  கரகரப்பாக வரும். எண்ணெய் செலவு  குறையும்.

- ஹேமலதா, தஞ்சை.

*  சூடான எண்ணெய் அல்லது நெருப்பு சுட்டுக்காயம் ஆகிவிட்டால் அதன்மேல் சிறிது தேனைத்தடவி விட்டால் புண் குணமாகும்.

*  முளைக்கீரை சமைக்கும்போது பெரும்பாலும் தண்டுகளை வீசி எறிந்துவிடுகிறோம். அதைப் பொடியாக நறுக்கிப் பொறியல் செய்தால் மிகவும்  சுவையாக இருக்கும். இது ஊளைச்சதையை குறைக்கும்.

- ஆர்.ஹேமமாலினி, திருச்சி.


*  கீரையை வேக வைக்கும்போது மூடி வேக வைக்க வேண்டும். திறந்தபடி வேக வைத்தால் அதில் உள்ள அமிலச்சத்துக்கள் வெளியேறி விடும்.

*  துவையல்கள் அரைக்கும்போது மிளகாய் பயன்படுத்துவதைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். மிளகு கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

- எஸ். சுமதி, கரூர்.

*  பழுக்காத தக்காளிகளுடன் ஒரு பழுத்த தக்காளியை போட்டு வைத்தால் மற்றவை விரைவில் பழுத்துவிடும்.

*  உளுந்து வடை தட்டும்போது அரிசிமாவை லேசாகத் தொட்டு தட்டினால் வடை மேலே மொறு, மொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

- எஸ்.ஜெயந்திபாய், மதுரை.

*  இட்லி தட்டில், இட்லி மாவு ஊற்றி, சிறிதளவு மிளகை பொடி செய்து தூவி வேக வைத்தால் இட்லி கமகமவென மணமாக இருக்கும்.

- எஸ்.ஆஷாதேவி, சென்னை.

*  ஒரு டீஸ்பூன் நெய், முக்கால் கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து வாணலியில் கொதிக்க விட்டு, அதில் இரண்டு கப் கோதுமை மாவைச்  சேர்த்து நன்றாகக் கிளறி சூடு ஆறியதும் உருண்டைகளாக்கி சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

*  மிதமான தீயில் அரிசியை எண்ணெய் விடாமல் வறுத்து அத்துடன் வறுத்த உளுத்தம் பருப்பு, சிவக்க வறுத்த எள், சிறிதளவு பெருங்காயம் போட்டு  மிளகாய் பொடி தயாரித்தால் சுவை அதிகமாக இருக்கும்.

- கே.ஆர்.வசந்தகுமாரி, சென்னை.

* இளசாக இருக்கும் முருங்கைக்கீரையைப் பறித்து நன்றாகக் கழுவி விட்டு, அடுப்பில் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு முருங்கைக் கீரையை உப்பு போட்டு நன்றாக வதக்கி விட்டு, அதை சப்பாத்தி மாவுடன் போட்டு நன்றாகப் பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக இட்டு சாப்பிடலாம்.

*  அல்சர் இருப்பவர்கள் தினமும் முட்டைக்கோஸையும், கேரட்டையும் வேக வைத்து அதன் ஜூஸைக் குடிப்பது நல்லது.

- கே.ராகவி,திருவண்ணாமலை.

* வடாகத்திற்கு மாவு கிளறி அதில் கேரட், பீன்ஸ், பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிப்போட்டு நன்கு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி காய வைத்து எடுத்தால் வெஜிடபிள் வடகம் ரெடி.

* அல்ட்ரா கிரைண்டர் வைத்திருப்பவர்கள் ரொட்டி மாவு பிசைவதற்கு கொடுத்த உபகரணத்தில் போட்டு கிளறிய வடாம் மாவை சிறிது சுற்றி  எடுத்தால் பிழிவதோடு நன்றாக வரும்.

* ‘சொத சொத’வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டால், ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்தபின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு  இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.

- ச.லெட்சுமி, செங்கோட்டை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2020

  22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • taj21

  6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்!: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..!!

 • ezhumalaiyaan21

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

 • school21

  ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

 • rashya21

  ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்