SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டு பேரை அழகாக்க, Shair செய்யலாம்!

2020-03-09@ 12:16:37

நன்றி குங்குமம் தோழி

உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி 4, 2020 அன்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலைமுடியை இழக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமான ‘Shair’ என்னும் முடி தானம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது க்ரீன் ட்ரெண்ட்ஸ் சலூன். இது குறித்து க்ரீன் ட்ரெண்ட்ஸின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தீபக் ப்ரவீன் கூறுகையில், ‘‘புற்றுநோய் லட்சக்கணக்கான மக்களை வருடா வருடம் தாக்கி வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியான சிகிச்சையுடன் மனதைரியமும் மிக முக்கியம். பொதுவாக ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி எனப்படும் கதிர்வீச்சுக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் முறையில் தலையில் இருக்கும்  முடிகள் எல்லாமே உதிர்ந்துவிடும். தலைமுடி முதல் புருவம் வரை கொஞ்சம் கொஞ்சமாக முடிகள் பலமிழந்து கொட்டிவிடும். அதனாலேயே அந்த சிகிச்சை அளிக்கும் போது பலர் தங்களின் தலை முடியினை மொத்தமா ஷேவ் செய்துவிடுவார்கள்.

முடியில்லாதது பெரிய குறையில்லை என்றாலும், ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு இது மேலும் வருத்தத்தையே அளிக்கிறது. இதனால் வெளியே செல்லாமல் பலர் வீட்டிற்குள் அடைந்திருக்கும் சூழலும் உருவாகுகிறது. முடிகொட்டும் என்று பயந்தே பலர் சிகிச்சையே வேண்டாம் என்றும் மறுத்துவிடுகின்றனர். ஒவ்வொரு முறை கண்ணாடி முன் நிற்கும் போதும், முடியில்லாத அவர்களது உருவம், மேலும் தங்கள் நோயின் தீவிரத்தையும், அதனால் அவர்கள் சந்தித்த வலியையும்தான் நினைவுபடுத்தும்’’ என்றவரை தொடர்ந்தார் கவின் கேர் நிறுவனத்தின் சலூன் பிரிவு வணிகத் தலைவர் கோபாலகிருஷ்ணன்.  ‘‘குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு இது பெரும் மனக்கவலையை அதிகரிக்கலாம். பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று எங்கு சென்றாலும், அந்த நோய் அவர்களின் அடையாளமாய் மாறிவிடுகிறது. இப்படி ஒரு நோய் பலரின் அடையாளமாய் மாறாமலிருக்க, முடிந்தளவு அதை மறைத்து மறக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

பல மருத்துவர்களே, தலையில் விக் வைத்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்துகின்றனர். ஆனால் செயற்கை கூந்தலில் செய்யப்படும் விக்குகளை அதிக நேரம் அணிய முடியாது. இந்த செயற்கை விக்குகளால் தோல் எரிச்சல், அரிப்பு, கொப்பளங்கள் போன்ற பக்க விளைவுகள் வரும். இயற்கையாக, ஒரு பெண்ணின் முடியிலிருந்து செய்யப்படும் விக், எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். இந்த இயற்கை விக்கின் விலை, சாதாரண விக்குகளைவிட நான்கு மடங்கு அதிகம். இதை எல்லோரும் வாங்க இயலாது என்பதால், க்ரீன் ட்ரெண்ட்ஸ் சலூன், தாமாக முன் வந்து மக்களிடையே முடிதானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, முடியைச் சேகரித்து அதை விக் செய்பவர்களிடம் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்து, வறுமை நோயாளிகளுக்கு இலவசமாக விக்குகளை வழங்க இருக்கிறோம். சென்னையில் இந்தாண்டு மார்ச் மாதம் முழுவதும் இந்த முடிதானம் நிகழ்ச்சி எங்களின் அனைத்து க்ரீன் ட்ரெண்ட்ஸ் சலூனில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அங்கு சென்று இலவசமாக முடிதானம் கொடுக்கலாம்’’ என்றவர் அதற்கான விதிமுறைகளையும் பட்டியலிட்டார்.

முடி தானம் கொடுக்க சில விதிமுறைகள்

1. தலைமுடியின் நீளம் 10 அங்குலமாவது இருக்க வேண்டும்.
2. தலைமுடி ஈரமாக இருக்கக் கூடாது.
3. உங்கள் முடி நிரந்தரமான கலரிங், ஹைலைட்டிங் செய்திருக்கக் கூடாது.  

முடி தானம் செய்தவர்களுக்கு க்ரீன் ட்ரெண்ட்ஸ் நிறுவனம் பிங்க் கலரில் கூந்தலில் அணியும் ‘Hair-Extention’யை அளித்து அவர்களை பெருமைப்படுத்துகிறோம். சேகரிக்கப்பட்ட முடிகளை ஒரு ஜிப்-லாக் உறையில் சேமித்து, அது விக் செய்யும் இடத்திற்கு அனுப்பப்படும். விக் தயாரானதும், அதை இலவசமாக நோயாளிகளுக்கு அளிக்க இருக்கிறோம். முடி தானம் செய்ய நினைப்பவர்கள் எவ்வளவு முடி வேண்டுமானாலும் கொடுக்கலாம். முடி தானம் கொடுக்கும் போது நம்முடைய உருவ தோற்றத்தில் மாற்றம் ஏற்படுமா என்று தயங்க வேண்டாம். அவர்களின் தோற்றத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல், அதே சமயம் அவர்களை மேலும் அழகாக மாற்றி அமைக்க எங்கள் அழகு மையத்தின் சிறப்பு ஒப்பனையாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுக்க நிகழும் இந்த முடிதானம் நிகழ்ச்சியை, இனி ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தும் எண்ணம் உள்ளது’’ என்றார் கோபாலகிருஷ்ணன்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்