SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோலா உருண்டை சாப்பிடவே மதுரைக்கு போனேன்!

2020-02-25@ 17:35:18

நன்றி குங்குமம் தோழி

‘‘பொதுவாகவே பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் போது, பசி எடுக்கும். அதனாலேயே அம்மா அதே சாதம், சாம்பார் என்று வைக்காமல், ஏதாவது ஸ்நாக்ஸ் மாதிரி செய்து வைப்பாங்க. அதுவும் பார்த்து பார்த்து புதுசு புதுசா செய்வாங்க. அப்படி சாப்பிட்டு வளர்ந்ததாலே எனக்கு உணவு மேல் எப்போதும் தனி பிரியம் உண்டு. ஒவ்வொரு உணவையும் விரும்பி ருசிச்சி சாப்பிடுவேன். அப்ப எனக்கு ஐந்து வயது இருக்கும். நான் முதல் முறையா போன ரெஸ்டாரன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த ‘ப்ளூ டயமென்ட்’ ரெஸ்டாரன்ட் தான். அது சைனீஸ் உணவகம். அந்த அனுபவம் ரொம்பவே வித்தியாசமா இருந்தது. நாங்க அடிக்கடி குடும்பத்தோட போகும் உணவகம் அது தான். குடும்பத்துடன் ஒரு இடத்துக்கு போய் சாப்பிடும் போது, அது எப்போதும் மனதில் பசுமையா பதிந்துவிடும். எனக்கும் அப்படித்தான். அந்த நாட்கள் இன்றும் என் மனதில் ரொம்ப ஆழமாக பதிந்துவிட்டது. இப்ப அந்த உணவகம் இல்லை.

இருந்தாலும் அந்த வழியாக நான் கடக்கும் போது மலரும் நினைவுகளாக இருக்கும். அதே மாதிரி ஸ்கூல்ல ஒவ்வொரு காலாண்டு தேர்வு முடியும் போது அம்மா என்னை ஏதாவது ஒரு ரெஸ்டாரன்டுக்கு கூட்டிக் கொண்டு போவாங்க. பெரிய உணவகம் எல்லாம் இருக்காது. சின்ன ஸ்நாக்ஸ் கடைதான். சமோசா, சாட் உணவுகள், பீட்சா, கேக்ஸ் அண்ட் பேக்ஸ் போன்ற உணவகங்களுக்கு போவது வழக்கம். காரணம் அந்த பத்து நாட்கள் நாம ரொம்பவே கஷ்டப்பட்டு படிச்சு இருப்போம். எக்சாம் டென்ஷன் வேற. அதை ரிலாக்ஸ் செய்யத்தான் இந்த அவுட்டிங். அம்மா இப்படின்னா, பாட்டி வீட்டில் நிறைய ஸ்நாக்ஸ் செய்து வைப்பாங்க’’ என்றவர் அவர்கள் வீட்டில் எப்போதும் சாப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவது வழக்கமாம்.
‘‘எங்களுடையது பெரிய குடும்பம். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா எல்லாரும் ஒன்றாகத்தான் இருந்தோம். அதனால அம்மாவும் பாட்டியும் சாப்பாட்டுக்கு ரொம்பவே முக்கியத்துவம் தருவாங்க. எப்போதும் வீட்டில் ஏதாவது சாப்பிட இருக்கும்.

பாட்டியும் சளைக்காமல் ஏதாவது செய்து கொண்டே இருப்பாங்க. எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதற்கான சந்தோஷத்தை அம்மாவும் பாட்டியும் சாப்பாட்டில்தான் வெளிப்படுத்துவாங்க. சின்ன வயசில் இருந்தே நான் விளையாட்டுப் பிரியன். டேபிள் டென்னிஸ் விளையாட்டு மேல எனக்கு ஆர்வம் அதிகம். ஒவ்வொரு முறை மேட்ச் ஜெயிச்சிட்டு வந்த அம்மாவும் பாட்டியும் எனக்கு பிடிச்ச உணவினை போட்டி போட்டுக் கொண்டு சமைப்பாங்க. அம்மா செய்ற சிக்கன் கறி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே போல் தப்பளம்ன்னு ஆந்திரா ஸ்டைலில் ஒரு சாம்பார் வைப்பாங்க. எல்லா காய்கறியும் குறிப்பா சர்க்கரை வள்ளிக்கிழங்கு போட்டு செய்வாங்க. இனிப்பு, காரம் எல்லாம் கலந்து இருக்கும். இதை பெரும்பாலும் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில்தான் செய்வாங்க. இதை வடையுடன் சேர்த்து சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு அம்மாவின் சமையலில் ரொம்ப பிடிச்சது இந்த சாம்பார்தான்’’ என்றவர் கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சென்றஇடங்கள் பற்றி விவரித்தார்.

‘‘லயோலா கல்லூரியில் தான் படிச்சேன். கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இரண்டு குரூப் ஃபிரண்ட்ஸ் இருந்தாங்க. ஒன்று டேபிள் டென்னிஸ் ஃபிரண்ட்ஸ். மற்றவர்கள் கல்லூரி நண்பர்கள். சில சமயம் டேபிள் டென்னிஸ் பயிற்சி முடிய இரவு ஒன்பது மணியாகிடும். அதனால் பயிற்சி முடிச்சிட்டு நானும் என் நண்பர்களும் பெசன்ட் நகரில் உள்ள பீச்சுக்கு போயிடுவோம். அங்க நிறைய உணவகங்கள்  இருக்கும். அங்கு அடிக்கடி போய் சாப்பிடுவோம். அதே போல் கல்லூரிக்கு அருகே ‘க்விக்கீஸ்’ என்ற காபி ஷாப் இருக்கும். நாங்க கல்லூரிக்கு போகும் முன்பும் சரி கல்லூரி விட்ட பிறகும் சரி அங்கு ஒரு சின்ன மீட் போட்டுவிட்டு தான் கிளம்புவோம். அங்க பிஸ்காயோன்னு ஒரு காபி ஃபேமஸ். அதாவது காபியில் பிஸ்கெட் போட்டு தருவாங்க. எனக்கு சின்ன வயசில் காபியுடன் மில்க் பிக்கீஸ் தொட்டு சாப்பிட பிடிக்கும். இதுவும் அப்படித்தான் இருக்கும். அதனாலேயே எனக்கு இந்த காபியை அங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவேன்.  

காபியில் பிஸ்கெட் தொட்டு சாப்பிடுவது போல் சீஸ் கேக் என்றால் எனக்கு உயிர். எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அங்கு சீஸ் தொழிற்சாலை இருந்தால், அதை தவறாமல் போய் பார்த்துவிட்டு வருவது வழக்கம். சீஸ் கேக் துபாய் சென்ற போது அங்குள்ள மால் ஒன்றில் தான் சாப்பிட்டேன். அதனால் எப்போது எங்கு போனாலும் அங்குள்ள பலவகையான சீஸ் கேக்குகளை வாங்கி வந்திடுவேன். கோலாலம்பூரில் ஸ்டீம் போட் ரொம்ப ஃபேமஸ். இது ஒரு வகையான கடல் உணவுகளுக்கான ஸ்ட்ரீட் ஃபுட்ன்னு சொல்லலாம். ஒரு பக்கம் பானையில் தண்ணீர் கொதித்துக் கொண்டு இருக்கும். மறுபக்கம் பல வகையான மீன், லாப்ஸ்டர், நண்டு, இறால் எல்லாம் இருக்கும். நாம் விரும்பும் உணவினை அந்த தண்ணீரில் வேகவைத்து, அப்படியே பெப்பர், உப்பு போட்டு தருவாங்க. தேவைப்பட்டா காரத்துக்கு ஏற்ப மசாலாவும் போட்டு தருவாங்க’’ என்றவர் சந்தோஷமாக இருந்தாலும், மனச்சோர்வாக இருந்தாலும் சாப்பிட கிளம்பிடுவாராம்.

‘‘சென்னை, நுங்கம்பாக்கம் அருகே டயனாஸ்டி என்ற சைனீஸ் உணவகம் இருக்கு. அங்க எனக்கு சாப்பிட ரொம்ப பிடிக்கும். சொல்லப்போனால் அது எனக்கு இரண்டாவது வீடு. நான் சந்தோஷமா இருந்தாலும் அங்க போவேன், சோகமா இருந்தாலும் அங்க சாப்பிட போயிடுவேன். என்னுடைய பழக்கம் என் மனைவிக்கும் இப்போது பற்றிக் கொண்டது. அங்கு பெரும்பாலும் நாங்க  நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ் எல்லாம் சாப்பிட மாட்டோம். சீ ஃபுட் உணவில் ஸ்டாடர்ஸ் அங்க  ஃபேமஸ். அதில் எனக்கு பிடிச்சது கிராப் க்லாஸ். நண்டுடைய கால்களை மாவில் பிரட்டி எடுத்து எண்ணையில் பொன்னிறமாக பொரித்து தருவார்கள். ரொம்ப சுவையா இருக்கும்.

நான் சில காலம் இங்கிலாந்தில் இருந்தேன். அங்க எனக்கு ரொம்ப பிடிச்ச உணவு ஃபிங்கர் ஃபிஷ். அதில் உப்பு, காரம் எல்லாம் இருக்காது. முள் இல்லாத மீன்களை விரல் நீளம் வெட்டி மாவில் பிரட்டி எண்ணையில் பொரித்து அதன் மேல் வினிகர் சேர்த்து தருவார்கள். தேவைப்பட்டால் நாம் மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு எப்போதும் அதிக அளவு மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகள் பிடிக்காது. எந்த ஒரு உணவாக இருந்தாலும், அசைவமே இருந்தாலும், அதன் ஃபிளேவருடன் சேர்த்து சாப்பிடத்தான் பிடிக்கும்’’ என்ற அபினய்க்கு தமிழ்நாட்டில் பிடித்த ஊர் என்றால் மதுரையாம்.

‘‘மதுரை உணவு நகரம். சாதாரண ரோட்டுக் கடைகளிலும் அங்கு உணவுகள் அவ்வளவு சுவையா இருக்கும். அங்க அம்மா மெஸ், குமார் மெஸ்ன்னு நிறைய உணவகங்கள் இருக்கு. அங்க போனா நான் எப்போதும் விரும்பி சாப்பிடுவது கலக்கி, பரோட்டா, கோலா உருண்டை, நண்டு மசாலான்னு தேடிப் போய் சாப்பிடுவேன். ஏன் மதுரைக்கே அங்கு என்ன ஓட்டலில் என்ன உணவு கிடைக்கும்னு ஒரு பட்டியல் தயார் செய்துதான் நானும் என் மனைவியும் அங்கு சென்றோம். காரணம், எங்களை பொறுத்தவரை ஒரு ஓட்டலுக்கு போனாலும் அங்குள்ள பெஸ்ட் உணவினை தேடிப்போய் சாப்பிடுவோம். சாப்பாடு ரொம்ப முக்கியம். அது இல்லாம யாராலும் இருக்க முடியாது. நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய காரணம் சாப்பாடு. அதுவும் சுவையான சாப்பாடு சாப்பிடும்போது நமக்குள்ளேயே ஒரு மேஜிக் நடக்கும்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு சாப்பாடு மேல தனிப்பிரியம் ஏற்பட காரணம் பாட்டி. அவங்க சமைக்கும் போது, நான் அவங்க முதுகில் உப்புமூட்டைப் போல் கட்டிக்கொண்டு அவங்க சமைப்பதை பார்த்துக் கொண்டு இருப்பேன். என்னோட தாத்தா விவசாய பிரியர். வீட்டுக்கு வெளியே பெரிய தோட்டம் போட்டு அங்கு காய்கறி எல்லாம் பயிர் செய்தார். காய்கறி, சமையல் எல்லாம் பார்த்துக் கொண்டு வளர்ந்தது தான் என்னை உணவுப் பிரியராக மாத்திடுச்சு. நானும் நல்லா சமைப்பேன். என் மனைவி இத்தாலியன் உணவான பாஸ்தா, பீட்சா எல்லாம் நல்லா செய்வாங்க’’ என்றவர் சென்னையில் உள்ள பெரிய ஓட்டல்களில் யாரும் கேள்விப்படாத உணவினை பற்றி பட்டியலிட்டார்.

‘‘பெரும்பாலும் சென்னையை பொறுத்தவரை ஸ்டார் ஓட்டல்களை தெரியாதவர்கள் இருக்க மாட்டாங்க. ஆனா, அதில் சில உணவுகள் பற்றி தெரிந்து இருக்காது. ரெசிடென்ஷியல் ஓட்டலில் பிசிபெல்லாபாத் மற்றும் உருளைக்கிழங்கு ஃபிரை ரொம்ப ஃபேமஸ். அதே போல் தாஜ் கோரமண்டலில் இரவு நேரத்தில் கில்லி பிரியாணின்னு கிடைக்கும். நல்லா காரசாரமா சுவையா இருக்கும். என்ன பிரியாணி அரிசிக்கு பதில் குழைந்து போன சாதத்தில் செய்து தருவாங்க. அவ்வளவு ருசியா இருக்கும். கிரவுன் பிளாசா ஓட்டலில் இரவு 12 மணிக்கு பொட்டலம் சாப்பாடு சனிக்கிழமை மட்டுமே கிடைக்கும். அந்த ஓட்டலில் முதன்மை செஃப் தான் இதை செய்வார். சாதம், மட்டன் மசாலா அல்லது சிக்கன் மசாலா சேர்த்து, பொட்டலமாக மடிச்சு தருவாங்க. அப்புறம் மிட்நைட் எக்ஸ்பிரஸ் கடையில் தோசை பாயா, சனிக்கிழமை மட்டும் தான் கிடைக்கும் . அதுல வந்து வெயிட் வைத்து சாப்பாடு அப்புறம் மட்டன் குழம்பு, அப்படி இல்லன்னா சிக்கன் குழம்பு, அப்படி இல்லன்னா காய்கறி குழம்பு, குருமா தருவாங்க. இதற்கும்தான் கத்தரிக்காய் இருக்கும். அப்புறம் ஒரு மீன் வறுவல் இருக்கும்.

இது வந்து வாழையிலையில் பொட்டலம் மாதிரி மடிச்சு கொடுத்துடுவாங்க. நாம எடுத்துட்டு வந்து வீட்ல சாப்பிடும் அந்த சாப்பாடு அந்த ஹோட்டல் முதன்மை செஃப்தான் செய்வார். அப்புறம் மிட் நைட் எக்ஸ்பிரஸ். இரவு துவங்கி விடியல் காலை வரை திறந்து இருக்கும். அங்கு என்னோட ஃபேவரெட் தோசை, பாயா’’ என்றவருக்கு சில ஊர்களுக்கு சென்று அங்குள்ள உணவினை ருசிக்க வேண்டுமாம். ‘‘அடுத்து எனக்கு இலங்கை, துருக்கி போகணும். அங்கு போய் அங்குள்ள பாரம்பரிய உணவினை சாப்பிட வேண்டும். துருக்கியில் கபாப், கிரில் உணவுகள் ஃபேமஸ். தென்னாப்பிரிக்காவில் எக்சாடிக் உணவுகளை சாப்பிடுவாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். அதாவது அவங்க குட்டி முதலையைக் கூட சாப்பிடுவாங்க. எனக்கு இத சாப்பிட பிடிக்காதுதான். ஆனாலும் சாப்பிட்டு பார்க்கணும்னு விருப்பம்’’ என்றார் சிரித்தபடி அபினய் வாடி.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

 • korona-death19

  கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

 • tn-school19

  தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

 • jesee_chrrr1

  3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

 • 19-01-2021

  19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்