SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய் மற்றும் சேயை பாதிக்கும் காற்று மாசுபாடு

2020-02-17@ 15:39:29

நன்றி குங்குமம் தோழி

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நம் கிராமங்களை நினைத்துப் பாருங்கள். பூவரசு இலைகளில் ‘பீப்பி’,  நுங்கு கூந்தலில் தள்ளுவண்டி, பத்து பைசாவுக்கு பம்பர மிட்டாய், வயல் வரப்புகளில் ஓடிப்பிடித்து விளையாட்டு, வாழைத்தோப்புகளில் திருடன்-போலீஸ் என்று கிராமங்களில் விளையாட்டுகளும் கூட இயற்கை சூழலில் தான் இருந்து வந்தது. பிறந்த குழந்தையின் தொட்டிலிலிருந்து கடைசியில் கிடத்தும் கட்டில் வரையிலும் இயற்கை என்றிருந்த நிலை மாறி இன்று எங்கும் பிளாஸ்டிக், எதிலும் பிளாஸ்டிக் என்றாகிவிட்டது. விலையோ குறைவு. உற்பத்தி செய்வது எளிது. இன்றைய உலகின் அன்றாடத் தேவை அனைத்திலும் பிளாஸ்டிக் புகுந்துள்ளது. இதற்கு ஈடு செய்ய மாற்று எதுவுமில்லாத சூழலில் நாம் வாழ பழகிவிட்டோம். பிளாஸ்டிக் இயற்கையின் பகைவன் என்பது மட்டுமல்லாமல், இதனால் இயற்கைச் சூழல் எவ்வாறு பாதிப்படைகிறது என்பதை நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணர் சீனிவாசன் விவரிக்கின்றார்.

‘‘தமிழர்களின் பாரம்பரியமிக்க பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகைக்கு முந்தைய தினம் போகிப் பண்டிகையாகும். அன்றைய தினம் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப விவசாய நிலங்களில் அறுவடைக்கு பிறகு இருக்கும் கழிவுகளையும் வீட்டில் உள்ள பழைய பொருட்களையும் நெருப்பில் போட்டு போகிப் பண்டிகையை கொண்டாடுவார்கள். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் பலருக்கும் இதுபற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பல பொருட்களை போகி பண்டிகை அன்று தீயில் போட்டு எரிக்கிறார்கள். இதன் காரணமாக உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. பொதுமக்கள் போகிப் பண்டிகை அன்று டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தீயில் போட்டு எரிப்பதால் ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் இது பாதிக்கிறது.

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகள் இதுபோன்ற மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கும்போது, அது அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கிறது. டயர்களை எரிப்பதால், அதில் உள்ள நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்து சிறிய துகள்களாக மாறி காற்றை மாசுபடுத்துகின்றன. இதன் காரணமாக இந்த காற்றை சுவாசிப்பவர்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு நுரையீரல் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் ஆஸ்துமா ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு மேலும் அதிகரிக்கலாம். நுரையீரல் புற்று நோய், நுரையீரல் காற்று பைகளில் சேதம் விளைவிக்கும் எப்சிமா போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது’’ என எச்சரித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘தற்போது புகைப்பிடிப்பவர்கள், முன்பு புகைப்பிடித்தவர்கள் மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த காற்று மாசு கடுமையான நோய் அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது. இந்த காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு நிமோனியா மற்றும் பிற கடுமையான குறைந்த சுவாச நோய்த்தொற்றுகளின் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது’’ என்றார் டாக்டர் சீனிவாசன்.

‘‘பல்வேறு ஆய்வுகளின்படி, கர்ப்ப காலத்தில் அதிக மாசு நிறைந்த காற்றை ஒரு பெண் சுவாசிக்கும்போது, கருச்சிதைவு, முன்கூட்டியே குழந்தை பிறப்பு, மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் பிறத்தல் மற்றும் ஆஸ்துமா நோயுடன் குழந்தைகள் பிறத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது. மேலும் நிமோனியா நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காற்று மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் மரணமடைகிறார்கள். அதிக அளவு மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கும் குழந்தைகள், சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

காற்று மாசு உலக அளவில் ஒரு மிகப்பெரிய சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நாம் சுவாசிக்கும் காற்றின் தரத்தைப் பொறுத்து அமைகிறது. தரமில்லாத காற்று சுவாச மண்டலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. காற்றின் தரக்குறியீடு 100க்கு கீழே இருக்க வேண்டும். ஆனால் சென்னையில் காற்றின் தரக்குறியீடு 100க்கு மேலே உள்ளது. சமீபத்தில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 400ஐ தாண்டியிருந்தது. இது மிகவும் அபாயகரமான வரம்பாகும். கடந்த 2017-ம் ஆண்டில் உலக அளவில் அதிக இறப்பு விகிதத்தின் அடிப்படையில் காற்று மாசு 5வது காரணியாக இருந்தது. அந்த ஆண்டில் 70 லட்சம் பேர் இறந்துள்ளனர். 14.7 கோடி ஆண்டுகளுக்கான ஆரோக்கிய வாழ்க்கையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேரில் 9 பேர் காற்று மாசு காரணமாக பாதிக்கப்படுகின்றனர்.

காற்று மாசு என்பது திடத்துகள்கள் மற்றும் வாயுக்களின் கலவையாகும். இது மோட்டார் வாகன புகை, ஆலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள், தூசி, மகரந்தம் மற்றும் பூஞ்சை துகள்கள் போன்றவற்றால் உருவாகிறது. ஐரோப்பாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி பி.எம்10, என்.ஓ2 ஆகிய அளவுகள், நிமோனியாவுடன் அளவிடப்படும் காற்று மாசுபாட்டிற்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. காற்று மாசுபடுத்திகள், பெருந்திரள் மற்றும் நுண்ணுயிர் காரணிகளுடன் ஒன்றிணைந்து நோயின் தன்மையை மாற்றுகின்றன. எனவே சுவாச பிரச்சினை மற்றும் நுரையீரல் நோய் பிரச்சினை உள்ள நபர்கள் இதுபோன்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும் பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. காற்று மாசு வெவ்வேறு நிலைகளில் இருப்பதால், சில கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், நாள்பட்ட சுவாச நோய் பிரச்சினை உள்ளவர்கள் இந்த காற்று மாசு பிரச்சினையில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளலாம்’’  என்று  எச்சரிக்கை செய்தார் டாக்டர் சீனிவாசன்.

தொகுப்பு: தி.ஜெனிபா

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • indonesia-deaths-5

  இந்தோனேசியாவை பாடாய்படுத்தும் கொரோனா...அதிகரிக்கும் மரணங்கள்...1 லட்சத்தை கடந்த உயிரிழப்பு..!!

 • train-acci-5

  செக் குடியரசில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!: 3 பேர் உயிரிழப்பு..50க்கும் மேற்பட்டோர் காயம்..!!

 • petrol,disel-4

  எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

 • kalingar-pic-3

  காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

 • turkey-fire-3

  துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்