SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளிர்கால கொண்டாட்டம்

2019-11-12@ 15:50:04

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு காலகட்டமும் விதவிதமான அனுபவங்களையும், மகிழ்ச்சியையும் அள்ளித்தருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், இல்லாவிடில் சிலவற்றைப் பற்றி நாம் சிந்திக்கவோ, யோசிக்கவோ கூட மாட்டோம். சிட்டுக்குருவிகளைப் பற்றி என்றைக்காவது யோசித்தோமா, என்ன? பனிக்கட்டி உருகவும், ஒவ்வொரு வீடுகளின் தோட்டப் பகுதியில் ‘உரி’ போன்ற அமைப்பைக் காண முடிகிறது. அதில் தானியங்களை நிரப்ப, நிரப்ப வண்ணக்குருவிகள் வட்டமடித்து வேண்டிய பொழுது கொத்தித்தின்னும் அழகே தனி! அதைத் துரத்தி ஓடும் அணில் குட்டிகள் ஒருபுறம்.

பனிக்கட்டிகள் மீது ஓடி விளையாடிய முயல் குட்டிகள் இப்பொழுது பச்சைப்புற்களில் ஓடி விளையாடுவதைக் காண முடிகிறது. எந்த ஒரு பறவைக்கும், உயிரினத்திற்கும் யாரும் எவ்வித இடைஞ்சலும் தருவதில்லை. நாம் சிறுவயதில் பட்டமிட்டு, எவ்வளவு உயரம் எட்டுகிறது என்பதைப் போட்டியிடுவோம். வீட்டிற்குள் அடைந்து கிடைந்த குழந்தைகள் மெல்ல மெல்ல தலையை வெளியில் காட்ட ஆரம்பிக்கும் நேரமிது. பொதுவாக தனி வீடுகளாகயிருப்பதால், வீட்டையொட்டிய மைதானம், தோட்டம் போன்ற இடங்களில், குழந்தைகள் விளையாட போதுமான வசதி செய்து தரப்படுகிறது. நிறைய வீடுகளிலேயே ஊஞ்சல், சறுக்குமரம் போன்றவை அமைக்கப்
பட்டுள்ளன. பெரிய பிள்ளைகளுக்கு கூடைப்பந்திற்கான வலைகள் கூட காணப்படுகின்றன.

இவையில்லாமல் விளையாட்டு சைக்கிள்களும், நடைப்பயிற்சி வண்டிகளும் உடற்பயிற்சியை வலுப்படுத்துகின்றன. மழை பெய்தால் கூட பெரிதாக கவலைப்படுவதில்லை. இங்குள்ள தட்ப வெப்பம் எந்த நேரத்திலும் மாறக்கூடியது. கொளுத்தும் வெயில் போல காணப்பட்டாலும், வெளியில் சென்று நடந்தால் தான் தெரியும் எவ்வளவு ‘ஜில்’லென்று காற்று வீசுகிறதென்று. மூன்று மாதங்கள் ஆள் உயரத்திற்கு பனிக்கட்டிகள் தரையை மூடியிருந்தாலும், அவை உருகிய பிறகு தரை அவ்வளவு சுத்தமாக காணப்படுகிறது. அதுவரை பனிகளால் மூடப்பட்டு இருந்த தரைகள் எல்லாம் அப்படியே காணப்படுகின்றன. இலைகள் அகற்றுவதற்குத் தனியான தொடப்பம் போன்ற அமைப்பு உள்ளது. அவற்றின் மூலம் இலைகளை மட்டும் அகற்ற முடியும்.

காய்ந்த சருகு இலைகளை அகற்றி விட்டால் பழைய பச்சைப்புல் கண்களுக்குக் குளிர்ச்சி தருகிறது. அது மட்டுமா? அவ்வளவு பனியிலிருந்து காய்ந்து மண்ணோடு மண்ணாக, கண்களுக்குத் தெரியாமல் போன செடிகள் அனைத்தும் தானே நிமிர்ந்து தலை தூக்கி நிற்கத் தொடங்கியது.  காய்ந்து பனியில் உறைந்த மரங்கள் தானே துளிர்விடத் துவங்கின. அவற்றிற்குத் தண்ணீர்கூட விடவில்லை.

இருப்பினும் ஒரு சில நாட்களிலேயே, செந்தளிர்கள் விடத் தொடங்கி, பார்ப்பதற்கு பச்சை விளக்குகள் போட்டாற்போல் காணப்பட்டன. என்ன ஒரு இயற்கையின் அழகு. கடவுளின் படைப்பின்றி என்னவென்று  சொல்வது? நிறைய கேபிள்கள் காணப்பட்ட புதர் போன்ற இடத்தில், அழகிய ரோஜாச்செடி அடர்த்தியாக வளர்வதைக் காணலாம். அப்படி ஒரு வளர்ச்சி.

சிறிய கற்களுக்கு இடையே அழகழகான சாமந்திப்பூக்கள்.  செடிகள் மிகச் சிறியதாகயிருந்தாலும், அனைத்திலும் நிறைய பூக்கள் கொத்துக் கொத்தாக வந்தன. முன்புறம், புல்வெளிகளுக்கிடையே, கூழாங்கற்களுக்கு நடுவில் அழகிய ‘காலிஃபிளவர்’ போன்ற பூக்கள். செடிகளில் இலைகளைக் காணவில்லை. பந்து சைஸில் பெரிய பெரிய பூக்கள் கொத்தாக வர ஆரம்பித்தன. அனைத்து வீடுகளிலும் முன்புறத் தோட்டம் ‘வாவா’வென அழைப்பதுபோல காணப்பட்டன. பெஞ்ச் போன்ற அமைப்பில், பனியில் மூடியிருந்த செடிகள் ‘பளிச்’சென பார்வையில் பட்டன. அதிசயம் என்னவென்றால், வாசலில் போடப்பட்ட ‘ரங்கோலி’ கோலமும் மூன்று மாதங்கள் கழித்து அப்படியே இருந்தது.

துளிகூட நிறம் மாறாமல், ஒன்றோடொன்று நிறம் கலக்காமல் அவ்வளவு தெளிவாகவேயிருந்தது. இந்த பனிக்காலத்தில், உயரமான அடர்த்திச் செடிகளை சிலர் ‘கோணி’ போன்ற அமைப்பினால், மூடிக் கட்டி வைத்து விடுகிறார்கள். பனி நின்றதும், திறந்தால் செடிகள் புத்தம் புதிதாகவே காணப்படுகின்றன. தொட்டிகளே பார்க்க வண்ணமயம், பிரமாதம் என்று சொன்னால் அதன் செடிகள் மிகமிகப் பிரமாதம். பனிக்காலமாகயிருந்தாலும் பெரும்பாலானவர்கள் வீட்டிற்குள் நிறையவே செடிகள் வைக்க விரும்புகிறார்கள்.

செடிகள் வைப்பதற்கென்றே இடம் ஒதுக்கி வைக்கிறார்கள். குறிப்பாக பலவிதச் செடிகளை ஒன்று சேர வைப்பது இங்கு மிகவும் விசேஷம். பெரும்பாலான கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் (மால்) போன்ற இடங்களில் மிகப்பெரிய தண்ணீர் தொட்டிகள் போன்ற பூவேலைப்பாடுகள் கொண்ட தொட்டிகளை பார்க்கலாம். அதன் முழுவதும் வண்ணமயமான வெவ்வேறு நிறங்கள் கொண்ட பூக்கொத்துகளைப் பார்க்கவே வியப்பாக இருந்தது. ‘எப்படித்தான் ஒரு தொட்டியில் இவ்வளவு விதவிதமான பூக்கள் காணப்படுகிறதோ’வென்று.

நிறைய கண்காட்சிகளுக்குச் சென்று பார்த்தபின் தான் ரகசியம் தெரிந்தது. தொட்டிகளில் பாதி வரை வேண்டாத பொருட்களைப்போட்டு நிரப்பி, பின் உரம் கலந்த மண்ணில் சிறிய செடிகளை அப்படியே நட்டு விடுகிறார்கள். செழிப்பான மண் உரத்தில், சிறிய செடிகள்கூட பூக்களை அள்ளித்தருகின்றன. வெளியிலிருந்து பார்க்கும்பொழுது இலைகளைவிட வண்ணமயமான பூக்கள் அழகை அள்ளித்தந்து சூழலை மாற்றிக்காட்டுகின்றன. அனைத்து நிறங்களிலும் பூக்கள். கிடைக்காத நிறங்களே கிடையாது என்றுகூட சொல்லலாம்.

பனிக்கட்டிகள் நிறைந்து, குளிர்காற்று வீசும்பொழுது, அனைத்து வீடுகளும் வெளியே வெள்ளைப்பூக்கள் கொட்டியது போன்று இருக்கும் நேரத்தில், நிறைய வீடுகளில், வாசலின் இருபுறமும் அழகிய விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். நம்நாட்டில், தாத்தா, பாட்டிகள் வீடுகளில் வாசலில் மாடங்கள் போன்று காணப்படும். அதில் அகல் விளக்குகள் ஏற்றி வைப்பார்கள். அவற்றையெல்லாம் நினைவூட்டும் விதத்தில் இன்றைய காலத்தில் ‘கரென்ட்’ விளக்குகள் காணப்படுகின்றன. மனித நடமாட்டமே இல்லாவிடிலும், அப்படியொரு அழகு இரவில்கூட. எங்கேயோ இருக்கும் நட்சத்திரங்கள் வீட்டு வாயில்களில் மின்மினுக்க, சந்திரன் தரையில் இருப்பது போன்ற ‘ஐஸ்’ கட்டிகளின் பிரகாசம் வெள்ளை வெளிச்சத்தில் என்ன ஒரு அழகு.

ஜன்னல் வழியாக அவ்வப்பொழுது எட்டிப் பார்த்தால், ‘வேறு ஏதோ ஒரு உலகில் இருப்பது போல் நினைக்கத் தோன்றும். மழை பெய்தால், அங்கங்கே நீர் தேங்கி தவளைகள் சப்தம் கேட்கும். இப்போது மான்குட்டிகள், முயல் குட்டிகள் ஓடி விளையாடுவதை மிக அருகில் காண முடிந்தது. பின்பக்கம் முழுவதும் கண்ணாடியால் மட்டுமே சுவர் அமைக்கப்பட்டிருந்தாலும், திருடர் பயம் இல்லை என்பதே பயமாகயிருந்தது. வீட்டிற்குள் குழந்தைகள் குரல் எவ்வளவுதான் ஒலித்தாலும், வெளியே துளிகூட சப்தம் கேட்காது.

அதேபோல் வெளியே, முயல்கள் ஓடும் சப்தமும், அழகழகான சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அற்புதமான குருவிகளின் ‘கிரீச்’ சப்தமும் அவ்வளவு இனிமையான சூழலை நமக்குக் காட்டும். இவையன்றி, ஒவ்வொரு வீட்டிலும் அழகழகான செல்லப்பிராணிகள். நாய்கள் மட்டுமின்றி, ராஜானுபாகுவான பன்னாட்டு பூனைக்குட்டிகளும் ஏராளம். அவற்றிற்கும் ஆடை அணிகலன்கள் என அழகுபடுத்தி பார்க்கும் போது அதன் அழகே தனிதான்.

இவையனைத்துக் காட்சிகளையும், பனி உருகியவுடனேயே பார்க்கத் துவங்கலாம். ஒன்றிரண்டு மாதங்களில் கோடை ஆரம்பிக்கும் முன்பே விடுமுறைக் காலங்களை எப்படியெல்லாம் உல்லாசமாகக் கழிக்கலாமென அட்டவணையிட ஆரம்பிப்பார்கள். அனைத்து பூங்காக்களும் மீண்டும் புதுப்பிக்கப்படும். சென்ற கோடையில் சென்று பார்த்த ‘ரோஜாத்தோட்டம்’ பனியில் முழுவதுமாக புதைந்திருந்தது. இப்பொழுது பனி உருகியவுடன் சென்று பார்த்தால், அழிந்த அத்தனையும் தானே துளிர்விட்டு, செழித்திருந்தது. வாடாமல்லி, வெளிர்ரோஸ் இடையிடையே அழகான ‘டிசைன்’ போட்டாற்போல என்ன ஒரு அழகு. இயற்கை அழகு அத்தனையும் ஒரு சேர கொட்டினாற்போல ஒரு தோற்றம்.

கற்பாறைகளுக்கிடையே இதுபோன்ற மண்டிக்கிடந்த பூக்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். ஆரம்பமே இப்படியிருந்தால் ‘சீசன்’ இன்னும் களை கட்டத்தானே செய்யும்.மற்றொரு முக்கியமான காட்சியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஏரிக்கரைகளில் நடப்பது முக்கிய உடற்பயிற்சி, இயற்கைக் காட்சிகளை பார்த்துக்கொண்டு, நீரின் குளிர்க்காற்றை கிரகித்துக்கொண்டும், கொக்கு வாத்துகள் ஜோடியாகச் செல்வதை ரசித்துக்கொண்டும், நடப்பதில் நமக்கு நேரம் செல்வதே தெரியாது. பலர் தங்கள் செல்லப்பிராணியுடன் நடப்பதை பார்க்க முடியும்.

ஒரு பக்கம் பள்ளிச் சிறார்கள் கூட்டம் கூட்டமாக சைக்கிள் ஓட்டிச்செல்வதை காண முடிகிறது. வயது முதிர்ந்தவர்கள்கூட ஆங்காங்கே ‘சிமென்ட்’ பெஞ்சுகளில் அமர்ந்து ஓய்வெடுத்து, பின் நடை பயணத்தை தொடர்வர். பிரித்து மாட்டும் வசதி கொண்ட நாற்காலிகள் அனைவரின் காரிலும் கைவசம் உள்ளது. அதைப்பிரித்துப் போட்டு அமர்ந்துவிட்டு, மீண்டும் மடக்கி எடுத்துச் செல்கிறார்கள்.

சாலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில்தான் எத்தனை விழிப்புணர்வு காணப்படுகிறது தெரியுமா, இவர்களிடம். நாம் வீட்டின் முன்பக்க அலங்காரத்தில் நிறைய கவனம் செலுத்துவோம். இங்கு அதே முக்கியத்துவம் பின்பக்க வீட்டுப் பகுதிக்கும் தரப்படுகிறது. கண்ணாடிச் சுவர் மூலம் அறையில் வெயில் வருவதை மிகவும் விரும்புகிறார்கள்.

காரணம், வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே வெயிலை அவர்கள் காண முடிகிறது. அதனால்தான் இவ்வளவு உற்சாகம், ஆர்ப்பாட்டம் என்று சொல்லலாம். பின்புற வெளித்தோட்டத்திலும் சாப்பாட்டு மேசை, நாற்காலிகள், சீரியல் அலங்கார விளக்குகள் என அத்தனையும் கிடுகிடுவென வந்துவிடும். குழந்தைகள் விளையாட மரத்திலிருந்து ஊஞ்சல்கள் தொங்க விடப்பட்டு அது ஒருபுறம் அழகைக் கூட்டுகிறது. புதிய தோட்டப்பணிகள் ஆயத்தமாகி அடுத்த பனிக்குள் பயிரிட ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்கும். ஆக வருடம் முழுவதும் ஒரு விதமான சுறுசுறுப்பு வாழ்க்கைதான் என்றே சொல்ல வேண்டும்.

நமக்கு பார்க்க ரொம்ப கடினம்போல் தோன்றினாலும், அவர்களுக்கு அதுவே ஒரு உற்சாக வாழ்க்கைதான். ஏரி ஓரங்களில், இரண்டு மரங்களுக்கிடையே தொட்டில், கிராமங்களில் இரண்டு தூண்களுக்கிடையே துணிகட்டி குழந்தையை தாலாட்டித் தூங்க வைப்பது தான் நினைவுக்கு வந்தது. இங்கு பெரியவர்கள் படுத்துக்கொண்டு, இயற்கையை ரசித்தபடி ஓய்வெடுக்கிறார்கள்.

குடும்பம் முழுவதும் ஆளுக்கொரு அமைப்பில் படுத்துக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இவை கடையில் அப்படியே விற்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ‘ஹமக்’ என்று சொல்லுவார்கள். அதேபோல் குழந்தையை மார்புடன் அணைத்து எடுத்துச் செல்லவும் அமைப்பு இருப்பதால், இளம் தாய்கள் குழந்தைகளுடன் நடைப்பயிற்சி செய்வதையும் நிறைய பார்க்க முடிகிறது. இவற்றையெல்லாம் பார்த்தால் நமக்கும் கண்டிப்பாக உற்சாகம் வரும்.

சரஸ்வதி ஸ்ரீ நிவாஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்