SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணவேணி டீச்சர்

2019-10-22@ 10:34:14

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் தலைமை ஆசிரியரா பதவி உயர்வு பெற்று 2009ல் இந்த பள்ளிக்கு வந்தபோது எனக்கு கிடைத்த அனுபவங்கள் ரொம்பவே வித்தியாசமானது’’ என நம்மிடம் பேசத் தொடங்கினார், சென்னை முகப்பேரில் இயங்கி வரும் அம்பத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி.

‘‘பள்ளி வளாகத்தில் பெரிய புளிய மரம் ஒன்று இருப்பதால் அந்தப் பகுதி மக்களுக்கு இன்றும் புளியமர ஸ்கூல்தான். சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள் இதை ஒரு பள்ளியாகவே கருதவில்லை. ஆண்கள் தண்ணியடித்துவிட்டுப் படுக்கும் சமூக விரோதக் கூடமாக இருந்தது. சிலரின் ஆதரவோடு அவர்களை வெளியேற்றி, மக்கள் கவனத்தை திருப்ப பறை இசைத்து, வீடுவீடாகச் சென்று பள்ளியில் உணவு, உடை, புத்தகங்கள் தருகிறோம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என அழைத்தேன்’’ என்கிறார் நினைவுகளை அசைபோட்டபடி. நமக்கோ ‘ராட்சசி’ பட ஜோதிகா நினைவில் வந்தார்.

‘‘இங்கு ஏ பார் ஆப்பிள் இல்லை. பாடுறியா பாடு. கவிதை எழுதுறியா எழுது. பார்த்ததைப் பேசுறியா பேசு என சிந்திக்கத் தூண்டும் கல்வியே இருக்கிறது. 130 குழந்தைக்கும் 130 கதை. அதைப் பொறுமையாய் கேட்கும் ஆசிரியர் நான். எந்தக் குழந்தை உள்ளே வந்தாலும் சாப்பிட்டியா என்பதே முதல் கேள்வி. சாப்பிடலையா வா சாப்பாடு வாங்கித்  தர்றேன். பென்சில் நோட்டு இல்லையா வாங்கித் தர்றேன். ஆனால் படி’’ என்கிறார் கிருஷ்ணவேணி ஆசிரியர். ‘‘5 சிறப்புக் குழந்தையுடன் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை 130 குழந்தைகள் இங்கு படிக்கிறார்கள் எனில் இது தானா வந்த கூட்டமில்லை தேடிச் சேர்ந்த கூட்டம்’’ என்கிறார் சிரித்தபடி.

‘‘1988ல் சென்னை மீஞ்சூரில் நான் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது எனக்கு வயது 20. அது தாழ்த்தப்பட்ட குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளி. காலனி பசங்க படிக்கிற பள்ளியில வேலை செய்ற டீச்சர் என்ற வார்த்தைகள் காதில் விழும். அந்த ஏற்றத்தாழ்வை நான் அனுபவித்ததில்லை என்பதால் எனக்கு அதில் புரிதல் இல்லை. தொடர்ந்து ஆவடி, கொரட்டூர் பள்ளிகளில் பணியாற்றினேன். ஆனால் 20 ஆண்டு கழித்து தலைமை ஆசிரியராக பணி உயர்வோடு இங்கு வந்தபோது, இங்கு படிக்கும் பசங்க அந்த மாதிரிப் பசங்க எனும் வார்த்தைகளை மீண்டும் கேட்க நேர்ந்தது. அதாவது 99 சதவிகிதக் குழந்தைகள் தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளாக இருந்தார்கள்.

முதலில் அந்த எண்ணத்தை உடைக்க பள்ளியின் சூழலை மாற்றும் முயற்சியை கையிலெடுத்தேன். குழந்தைகளோடு பழக ஆரம்பித்தபோது அவர்கள் சூழல் புரியத் தொடங்கியது. அவர்களது குடும்பப் பின்னணி என்னை ரொம்பவே மாற்றியது’’ என்கிறார் ‘‘குழந்தைகள் தரையில் அமர்ந்து படித்த நிலையை மாற்றி, என் கையில் இருந்த சேமிப்பில் சேர் டேபிள் வசதிகளைச் செய்து கொடுத்தேன். தெரிந்த நண்பர்களிடத்தில் பேசி மரத்தினால் செய்த கலர் கலரான குட்டி நாற்காலிகள், வட்ட வடிவ மேஜைகளை வாங்கி பயன்பாட்டில் வைத்தேன். நல்ல உள்ளம் படைத்த சிலர் உதவியோடு அனைத்து வகுப்பிலும் எல்.சி.டி. டி.வி பொருத்தப்பட்டது. மேலும் புரஜெக்டர், அகன்ற தொடு திரையும்(screen) பள்ளியில் இருக்கிறது.

அரசு தரும் இரண்டு சீருடை தவிர்த்து, வேறு இரண்டு வண்ணத்திலும் சீருடைகள் தைத்துக் கொடுத்து அணிய வைக்கிறோம். வசதிக் குறைவான பல குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமலே பள்ளிக்கு வருகிறார்கள். பசியால் ஒரு குழந்தை படிக்கவில்லை என்பது எத்தனை கொடுமை. அருகில் இருக்கும் அம்மா உணவகத்தில் இட்லி, சப்பாத்தி வாங்கி காலையில் கொடுக்கிறோம். குறைந்தது 40 குழந்தையாவது காலை உணவை பள்ளியில் சாப்பிடுகிறார்கள். எந்தக் குழந்தையாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வு இன்றி, மதிய உணவை பள்ளியில் உண்ண வைக்கிறோம். துரித உணவு உண்பதையும், வீட்டிலிருந்து ஆடம்பர உணவுகளைக் கொண்டு வருவதையும் அனுமதிப்பதில்லை.

மேலும் பள்ளிக்கு வரும் விருந்தினர்களோடு நாங்களும் சத்துணவை தினமும் சாப்பிடுவதால் உணவு சமைப்பவர்கள் கவனத்தோடு சமைக்கிறார்கள்.
அரசால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் என்னுடன் சேர்த்து மூவர்.  மாணவர்கள் வருகை அதிகமாகவே, ஒரு ஆசிரியரால் இரண்டு வகுப்புகளை கவனிக்க முடியவில்லை. இதை யோசித்து, நானே மேலும் மூன்று ஆசிரியர்களை  என் ஊதியத்தில் சம்பளம் கொடுத்து நியமித்துள்ளேன். விழிப்புணர்வு விசயங்களை வளர்க்கிறோம். நீர் மேலாண்மை,  சுற்றுப் புறத் தூய்மை குறித்தெல்லாம் பாடமாகவே கொண்டு செல்லாமல், ஆடல், பாடல், நடிப்பு எனக் கொண்டு செல்லும்போது குழந்தைகள் மனதில் ஆழமாய் பதிகிறது.  பாடலை ஹம் செய்து கொண்டே அவர்கள் எழுதுவது பார்க்க ரசனை’’ எனச்
சிலாகிக்கிறார்.

‘‘மரத்தை வெட்டினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.  ‘மரத்தை வெட்டும் மடையனே’ என அவர்களே எழுதிப் பாடும் அளவுக்கு இருக்கிறார்கள். இதயத்தின் செயல்பாட்டை, இதயம் பேசுகிறேன் என மாணவன் பேசினால் பாகங்களைப் பற்றி அழகாக ஆர்வமாகப் பேசுகிறான். வரைபடத்தைக்கூட நாடகமாகக் கொடுத்துவிடுவேன், அழகாகத் தெளிவாக எழுத்து ஆளுமையோடு எங்கள் மாணவர்கள் இருக்கிறார்கள். இதனால் மெதுவாகக் கற்கும் மாணவன்கூட ஆர்வமாகிறான். வார இறுதியில் பறை, கரகம், சிலம்பம் போன்ற நாட்டுப்புறக் கலைகளையும் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாசிப்பு, செய்தி சேகரிப்பு, புத்தகம் வெளியிடுதல் பயிற்சிகளை வளர்க்கிறோம். புதையல் எனும் பெயரில் இதழ் ஒன்றை அவர்களாகவே வெளியிடுகிறார்கள்.  குழந்தைகள் பார்லிமென்ட் உள்ளது. மாணவர்கள் இதில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். முதலமைச்சர், துணை முதலமைச்சர், கல்வி அமைச்சர் இவர்களை மாணவர்கள் சின்னத்தில் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்ற இலாக்கா அமைச்சர்களான சுகாதாரத்துறை, நீர் மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகம், சத்துணவுத் துறை, உள்துறை, செய்தித்துறை அமைச்சர்களை தேர்ந்தெடுப்பர். தண்ணீரை வீணடிக்காமல் சிக்கனமாக  பயன்படுத்த வைப்பது, மீதியான உணவுகளை உரமாக்குவது, பள்ளியின் சுற்றுப்புறம், சுகாதாரத்தைப் பேணுவது என அவரவர் வேலையை அழகாகச் செய்கிறார்கள்.

எந்த அமைச்சர் அவர் துறையை சரியாகக் கவனிக்கவில்லை என இரண்டு மாதத்திற்கு ஒரு முறை விவாதமும் உண்டு. அமைச்சர்கள் தப்பு செய்தால் முதலமைச்சர் மாணவரிடம் தப்ப முடியாது’’ என சிரிக்கிறார்.‘‘எந்த நிகழ்வு நடந்தாலும், பார்த்த விசயத்தை முதலில் ஒவ்வொரு மாணவராகச் சொல்ல வைத்து, விசயத்தையும் உணர்த்தி, பேசி விவாதிக்கச் செய்த பிறகே கட்டுரையாக எழுத வைக்கிறோம். இதில் வார்த்தைகளின் கோர்வை குழந்தைகளுக்கு கிடைக்கிறது. அவர்களாக எழுத முயற்சிக்கும்போது முதலில் எழுத்துப் பிழை வந்தாலும் போகப்போக எழுத்தில் திறமை மேலிடும்.  பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகத்தைப் படித்து நூல் விமர்சனமும் செய்வார்கள்.

இதில் வாசிக்கும் ஆர்வம் தூண்டப்படுகிறது. கதைகளைச் சொல்ல வைப்பதன் மூலம் அவர்களின் கற்பனை திறன் வளர்கிறது. ஸ்கிரிப்டைக் கொடுத்தால் அவர்களே அழகாக நடிப்பார்கள். மைக்கை கொடுத்து அவர்களைப் பேச வைப்பதில் அவர்களின் மொழி ஆளுமையும் நன்றாக வளர்கிறது. மாணவர்கள் செய்வதை பதிவு செய்து புரொஜக்டரில் போட்டுக் காட்டும்போது, அதைப் பார்த்து பேசாத மாணவன்கூட பேச ஆரம்பிக்கிறான். எங்கள் பள்ளி மாணவன் ஒருவன் பேட்மிட்டன் அகடமியில் இணைந்து 6 மாதத்திலேயே மாநில அளவில் விளையாடி வருகிறான்’’ எனவும் மகிழ்ச்சி காட்டினார்

‘‘ஆட்டிசம் குறைபாடு மற்றும் செரிபரல் பால்சி குழந்தையும் எங்கள் பள்ளியில் இருக்கிறார்கள். மற்ற குழந்தைகளோடு இணையும்போது, அவர்களிடத்தில் மாற்றம் இருக்கிறது. மேலும் சிறப்புக் குழந்தைகளை தங்கள் பள்ளியில் வரவேற்பதாகவும், அவர்களுக்கான கற்றல் முறையை சொல்லித்தர விருப்பம் இருப்பதாகவும்’’ தெரிவிக்கிறார். ‘‘எந்தக் குழந்தையும் தொடக்கக் கல்வியை தனது தாய் மொழியில் படித்தால்தான் கற்றல் சிறப்பாக அமையும். அருகில் இருக்கும் சில தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல் பணத்தை விரயம் செய்துவிட்டு எங்கள் பள்ளிக்கு வந்துள்ளார்கள். எங்கள் பள்ளியை நம்பி வீட்டை மாற்றி அருகே வந்த பெற்றோர்களும் உண்டு.
எங்கள் பள்ளியில் படிக்கும் 130

குழந்தைகளும் மாணிக்கங்கள். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே… அது வாலாகவே இருந்தாலும்’’ எனப் புன்னகைக்கிறார். பெரும்பாலும் கட்டிப்பிடி வைத்தியம்தான் குழந்தைகளிடம் ஒர்க்அவுட் ஆகும். குழந்தைகளுக்கு ஹோம் ஒர்க் கொடுக்காமல், ஆசிரியர்கள் ஹோம் ஒர்க் செய்துவிட்டு குழந்தைகளிடம் வாருங்கள் என்கிறார் குழந்தைகளின் புரிதலோடு. ஆரம்பத்தில் பள்ளி சுற்றுச் சுவரில் தொடங்கி, விளையாடும் இடம் என எல்லாவற்றையும் அரசிடம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டு பெற்றோம். அரசிடமே எல்லாவற்றையும் எதிர்பார்த்தால் தாமதமாக நடக்கும். இந்த ஆண்டு 20 குழந்தைகள் மேலும் அதிகமாகி இருக்கிறார்கள்.

5ம் வகுப்பிற்கு வகுப்பறை இல்லை. குழந்தைகள் வராண்டாவில்தான் அமர்ந்து படிக்கிறார்கள். மழை காலம் வந்தால் ரொம்பவே கஷ்டம். அதற்குள் எதையாவது செய்ய வேண்டும் என்றவர்,  நமது அரசுப் பள்ளிகள் அனைத்துத் தரப்புக் குழந்தைகளும் படிக்கும் அருகாமை பள்ளிகளாக மாற வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சமநிலைக்கு கல்வி மாறும். இல்லையெனில் நலிந்த குழந்தைகள் படிக்கும் பள்ளியாக மட்டுமே அரசுப் பள்ளிகள் தோற்றம் தரும். இதனாலே அரசுப் பள்ளிகளை மூடும் சூழல் உருவாகிறது என்கிறார் தீர்க்கமாக. இப்போது எல்லாத் தரப்புக் குழந்தைகளும் படிக்கும் சமமான பள்ளியாக எங்கள் பள்ளி  மாறிவிட்டது என்று கட்டை விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டி விடை கொடுத்தார் அன்பான ஆசிரியர்.

தொகுப்பு: மகேஸ்வரி

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hongkomgggg_1111

  ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்

 • china-gold25

  அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

 • 25-01-2021

  25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-01-2021

  22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்