SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மந்திரி குமாரியின் அரச குமாரி ஜி.சகுந்தலா

2019-09-09@ 10:51:35

நன்றி குங்குமம் தோழி

பா.ஜீவசுந்தரி

செல்லுலாய்ட் பெண்கள்


உருண்டையான முகமும், தீட்சண்யம் மிக்க கருவண்டு விழிகளும், அழகான பளீர் சிரிப்பும், நல்ல தெளிவான தமிழ் உச்சரிப்பும், நல்ல ஆடற் திறனும், நாடகத் தன்மையற்ற இயல்பான நடிப்புத் திறனும் கொண்டவராகத் தன் பதின்ம வயதுகளில் நடிப்பதற்காக வந்தவர். அறிமுகமே உலகம் போற்றும் அற்புத நடனக் கலைஞர் உதய சங்கர் மற்றும் அவரது துணைவியார் அமலா சங்கர் உருவாக்கிய கலை நேர்த்தி மிக்க ‘கல்பனா’ இந்திப் படத்தில் நடனக் கலைஞராக.

தமிழிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பிரமாண்ட வெற்றிப்படம் ‘மந்திரி குமாரி’ யில் நாயகியாக, அதிலும் எம்.ஜி.ஆரின் ஜோடியாக. நாடகங்களில் தவிர்க்க முடியாதவராக மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி என அனைவருடனும் பங்கேற்றவர். சொந்தமாக நாடகக் குழுவைத் தொடங்கி நடத்தி வெற்றி பெற்றவர். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் நடிகை ஜி. சகுந்தலா. ஆனால், இவரது திரைப்பயணம் குறித்து ஏன் பெரிதாகப் பேசப்படவில்லை என்பது கேள்விக்குறி

‘கல்பனா’ எனும் காவியமும் சகுந்தலாவின் பங்களிப்பும் பாரம்பரிய நடனக்கலைஞர் உதய சங்கர் மற்றும் அவரது துணைவியார் அமலா சங்கர் முயற்சியில், பிரம்மாண்டப் படங்கள் எடுப்பதில் பெயர் பெற்ற ஜெமினியின் இணைத் தயாரிப்பில் 1948ல் வெளியான இந்தித் திரைப்படம் ‘கல்பனா’ கிளாசிக் வகை படம். படம் முழுதும் இந்திய வகை நாட்டியம்... நடனம்... நாட்டியம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. நாட்டியக் கலாமண்டலி ஒன்றை அமைக்க வேண்டும் என்ற ஒரு நாட்டியக் கலைஞரின் கனவும் கற்பனையும்தான் படத்தின் கதை. உதயசங்கரே எழுதி இயக்கியிருந்தார்.

கிளாசிக்கல் நடனக் கலைஞர்கள் பலரும் பங்கேற்ற இந்தியாவின் முதல் திரைப்படம் இது. ஜெமினி ஸ்டுடியோவில் ஐந்தாண்டுகள் தயாரிப்பில் நீண்டு வளர்ந்த படமும் கூட. நடனத்தை மட்டுமே முதன்மைப்படுத்திய படம் என்பதால் இந்தியா முழுவதுமிருந்து குறிப்பாகத் தமிழகம், ஆந்திரம், கேரளம், ஒடிஸா, வங்காளப் பகுதியைச் சேர்ந்த பல நடனக் கலைஞர்களும் பங்கேற்று இருந்தார்கள். இப்படத்தைப் பார்க்கும்போது நடனத் தாரகைகளின் கூட்டுத் திருவிழாவாகவே தோன்றும். இந்தியாவிலுள்ள அனைத்து வகை கிளாசிக் நடனங்களும் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன.

படம் வெளியான காலத்தில் பெரிதாக ஓடாவிட்டாலும், திரைத்துறையிலும் நடனக் கலைஞர்கள் மத்தியிலும் பரவலான பேச்சை உருவாக்கியது. பிற்காலத்தில் திரை விமர்சகர்களால் போற்றிக் கொண்டாடப்பட்ட படமாகவும் இது மாறியது. இப்படத்தில் இடம் பெற்ற நடனக் கலைஞர்கள் அனைவருமே மிகத் திறமை வாய்ந்தவர்கள். ’கல்பனா’ படத்தின் மூலம் பரவலான கவனம் பெற்று திரையுலகின் உச்சம் தொட்ட நடிகையாகக் கொண்டாடப்படுபவர்கள் பத்மினியும் லலிதாவும். லலிதாவும் பத்மினியும் நாட்டியத் தாரகைகளாக மட்டுமே படத்தில் தோன்றினார்கள்.

ஆனால், தென்னகத்தைச் சார்ந்த லட்சுமி காந்தமும் ஜி.சகுந்தலாவும் நடிப்புக்கான தங்கள் பங்களிப்பையும் மிகச் சிறப்பாகச் செய்தவர்கள். லட்சுமி காந்தம் அதன் பின் பல தெலுங்கு, தமிழ்ப் படங்களில் தனி நடனம் ஆடுபவராகவும், சில படங்களில் நடிப்பையும் செலுத்தினார். ஜி.சகுந்தலா, நடிப்புக்குள் வருவதற்கே சில ஆண்டுகள் பிடித்தது. ஆனால், லலிதாவும் பத்மினியும் நடனக் கலைஞர்களாகவும் திரைப்படங்களில் தொடர்ந்து நடனம் ஆடியும் வந்தார்கள். அவர்கள் நடனம் இல்லாவிடில் படம் ஓடாது என்ற நிலையும் உருவானது. இதற்குப் பெயர்தான் கலையின் அரசியல். ஒரே திறமை கொண்ட நடனமணிகளின் திரை வாழ்க்கை ஒரே மாதிரியாக அமைவதில்லை.

மிகச் சிறப்பான நடனக் கலைஞராக உதயசங்கரால் கண்டெடுக்கப்பட்டு, ‘கல்பனா’வில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திறமையான நடனமணி நடனக் கலைஞராகவும் தன் வாழ்க்கையைத் தொடரவில்லை. திரையுலகிலும் முன்னணி நட்சத்திரமாக நீடிக்க முடியவில்லை. ஜி. சகுந்தலா கதாநாயகியாக ’மந்திரி குமாரி’ படத்தில் இடம் பெறுவதற்குப் பின்னணியில் எத்தகைய முயற்சிகள், அவமானங்களைச் சந்தித்திருக்கக் கூடும் என்பதை வாசகர்களின் யூகத்துக்கே விடுகிறேன்.

மந்திரிகுமாரி அமுத வல்லியும் அரச குமாரி ஜீவ ரேகாவும்மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தளித்த முக்கியமான படங்களில் ஒன்று ‘மந்திரி குமாரி.’ கதாநாயகனுக்கு நாயகியாக இருப்பதைக் காட்டிலும் கதையின் நாயகிக்கே மதிப்பும் மரியாதையும் அதிகம் கிட்டும் என்பதற்கு அரச குமாரி ஜீவரேகா ஓர் அழுத்தமான சாட்சி. ஆம், அரச குமாரியை விடவும் மந்திரி குமாரியான அமுதவல்லி கதையின் போக்குக்கு ஏற்ப அதிகாரம் மிக்கவளாகவும் சமயோசித புத்தி கொண்டவளாகவும் வாளெடுத்துச் சுழற்றும் வீர தீரம் மிக்கவளாகவும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவரையும் தன்னகத்தே ஈர்த்து ஆக்கிரமிப்பவளாகவும் இருந்தாள்.

இப்படம் பார்த்தவர்களுக்கு இது மிக நன்றாகத் தெரியும். கதாசிரியரின் சிந்தனையில் உதித்த அவள் ஆளுமை மிக்கவளாகவும் விளங்கியதால் படம் முழுமையும் அவளே ஆக்கிரமித்தாள். ஆனால், அரச குமாரி  ஜீவரேகாவும் மந்திரி குமாரி அமுத வல்லியும் இணை பிரியாத உயிர்த் தோழிகளும் ஆவார்கள். மந்திரி குமாரியாக நடித்த மாதுரி தேவியை அனைவரும் நன்கு அறிவார்கள். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே அவர் பெரும் நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றவர். ஆனால், அரச குமாரியாக நடித்த இளம் நடிகையான புதுமுக நடிகை ஜி.சகுந்தலா ‘கல்பனா’ இந்திப் படத்தில் நடித்திருந்தாலும் இப்படத்தின் மூலம்தான் நாயகியாக தமிழ்த் திரை உலகுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.

படத்தில் தன் பங்குக்கான நியாயத்தையும் அவர் சிறப்பாகவே செய்திருந்தார். நாயகியாக நடித்தவை மூன்று படங்களே‘மந்திரி குமாரி’ திரைப்படத்துக்குப் பிறகு அவர் நாயகி வேடம் ஏற்றது எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு ஜோடியாக ‘அம்மையப்பன்’ படத்தில். டி.ஆர்.மகாலிங்கம் இரட்டை வேடங்கள் ஏற்று நடித்த ‘சின்னதுரை’ படத்தில் இரு நாயகிகள். ஒருவர் எஸ். வரலட்சுமி; இன்னொருவர் ஜி.சகுந்தலா. மந்திரி குமாரி, அம்மையப்பன் இந்த இரு படங்களுக்கும் வசனம் எழுதியவர் மு.கருணாநிதி.

இப் படங்களுக்குப் பின் சகுந்தலாவுக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லி, ஒரு சில படங்களில் நடனமாடுவதற்கான வாய்ப்பு என்றே அவருக்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த வேடங்களில் நடித்தே திரையுலகில் தன்னை முன்னிறுத்திக் கொண்டார் சகுந்தலா. ’கல்பனா’ படத்துக்குப் பின் தமிழ் மொழி தவிர பிற மொழிகளிலும் அவர் நடித்தவரில்லை. சிறு சிறு வேடங்களின் மூலமே ஏறக்குறைய 150 படங்களை நெருங்கியவர்

நகைச்சுவை நடிகர்களின் உற்ற ஜோடி

சகுந்தலாவின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான ‘மோகன சுந்தரம்’ படத்தில் சந்திரபாபுவுக்கு ஜோடி இருவரும் ஆடிப் பாடும் டூயட் பாடல் வித்தியாசமானது. சகுந்தலா தமிழில் தன் பாடலை ஆரம்பித்து ஆடிப் பாட, சந்திரபாபு பாதியில் வந்து இணைந்து கொள்வார்.

அவரின் வருகைக்குப் பின் பாடலும் ஆடலும் வழக்கம் போல் மேற்கத்திய பாணிக்கு மாறும். அவர் பாடும் பாடல் முழுவதும் ஆங்கிலத்திலேயே இடம் பெறும். அதே போலவே, ‘நாடோடி மன்னன்’ படத்தின் ’தடுக்காதே என்னைத் தடுக்காதே’ பாடலும் காட்சியும் அற்புதமானவை., ’நான் சொல்லும் ரகசியம்’ படத்திலும் இவர்கள் இருவரும் தான் உற்ற ஜோடி.

‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் காக்கா ராதகிருஷ்ணனுடன் நகைச்சுவை விருந்து படைத்தார். ஆண்களே இல்லாத அல்லிராஜ்யம் நடத்தும் ‘ஆரவல்லி’ படத்திலோ காக்கா ராதாகிருஷ்ணன், ஏ.கருணாநிதி, டி.என்.சிவதாணு, பக்கிரிசாமி, டி,பி.முத்து லட்சுமி, சாயிராம் என அத்தனை பெரிய நகைச்சுவைப் பட்டாளத்துடன் இவரும் இணைந்து அடிக்கும் கூத்துகள் என பஞ்சமில்லாத அக்மார்க் நகைச்சுவை.

‘கொடுத்து வைத்தவள்’ படத்திலோ தங்கவேலுவும் இவரும் அடிக்கும் ரகளை, ‘மன்னாதி மன்னன்’ படத்தில் குல தெய்வம் ராஜகோபால், கற்றுக் கொடுக்கும் ஊசி நடனம், பாசி நடனம் வகையறாக்கள் என அனைத்துமே முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவை ரகம்.
‘ஆட வாங்க அண்ணாத்தே...அஞ்சாதீங்க அண்ணாத்தே... / அங்கேயும் இங்கேயும் பார்க்குறது என்னாத்தே....’ - ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலில் ஈ.வி.சரோஜாவும் சகுந்தலாவும் ஆடுவார்கள். ஈ.வி.சரோஜா மான் குட்டியைப் போல் துள்ளிக் குதித்து ஆடுவதில் பெயர் பெற்றவர்; ஜி.சகுந்தலாவும் சரோஜாவுக்குச் சற்றும் சளைக்காதவராக ஆடித் தீர்த்தார்.

குணச்சித்திரத்திலும் குறை சொல்ல முடியாதவர்

ஆறு குழந்தைகளுக்குப் பின் ஏழாவதாக. வயிற்றில் அடுத்ததும் உருவாக, வாய்க்கும் வயிற்றுக்கும் பற்றாக்குறையான வறுமை நிறைந்த வாழ்க்கையில், சத்துள்ள  உணவுக்கு ஒரு வேலைக்காரப் பெண் எங்கே போவாள்? வேலை செய்யும் இடமோ வசதி படைத்தவர்கள் வாழும் வீடு. வயிற்றுப் பசிக்காகக் கொஞ்சம் அரிசியைத் திருடி மடியில் கட்டிக்கொண்டு, ஒரு டம்ளர் பாலை வாயில் ஊற்றிக் கொள்ளும் வேளையில், வீட்டின் எஜமானி பார்த்தால் அவளின் நிலை என்னவாகும்? வேலைக்கு வேட்டு வைக்கப்படும்.

ஆனால், நடப்பதோ வேறு. தன் நிலையையும் வறுமையையும் அவள் தன் எஜமானியிடம் சொல்ல, ஒற்றைப் பிள்ளை தன் வயிற்றில் வந்து பிறக்காதா எனத் தவமிருக்கும் அவளும் அவளின் கணவனும் அந்த வேலைக்காரப் பெண்ணைத் தரையில் நடக்க விடாமல் தாங்குகிறார்கள். காரணம், பிறக்க இருக்கும் பிள்ளையைத் தத்து கொடுக்க அவள் சம்மதிப்பதுதான். நாடகத்தனம் மிகுந்த படம்தான் என்றாலும் இந்த இரு பெண்களும் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. சிவாஜி கணேசனும் பத்மினியும் உடன் நடிக்க சகுந்தலா அற்புதமாக நடித்தார்.

படம் : ‘பேசும் தெய்வம்’ சினிமாவைப் பொறுத்தவரை ’லேடீஸ் கிளப்’ என்பவை கேலிக்குரியவை. அதிலும் உயர் வர்க்கப் பெண்கள் ஒன்றுகூடிக் கொண்டாட்டமாகப் பொழுதைப் போக்கும் இடம் என்பதாகவே சித்திரிக்கப்பட்டவை. அப்படி ஒரு காட்சி ‘உயர்ந்த மனிதன்’ படத்திலும் தவறாமல் இடம் பெற்றது. மிக உயர்ந்த அந்தஸ்திலும் செல்வாக்கிலும் இருக்கும் கோடீஸ்வரர் ஒருவரின் மனைவிக்கு தன் கணவன் தன்னை இதுவரை கைநீட்டி அடித்ததில்லை என்பது குறை. அதை சக லேடீஸ் கிளப் தோழியான மடிசார் கட்டிய மாமி ஒருத்தியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.

அடிக்காத கணவன் ஒரு கணவனா என்பதில் தொடங்கி, ஏகப்பட்ட அட்வைஸ் மழை. அதன் பின் ஏதோ சண்டையில் கணவன் கைநீட்டி அடிக்க, மனைவி அதைக் கொண்டாடுகிறாள்; ஆடிப் பாடுகிறாள். அடுத்த நாள் லேடீஸ் கிளப்பில் அதே தோயிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறாள். நகைச்சுவை என்னும் பெயரில் இப்படி எல்லாம் காட்சிகள். சம்பந்தப்பட்ட இரு நடிகைகளும் நடிப்பில் பின்னி எடுத்தார்கள். கோடீஸ்வரரின் மனைவியாக சௌகார் ஜானகி, ஆலோசனை சொன்ன மடிசார் மாமி ஜி.சகுந்தலா.

‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் எம்.ஜி.ஆரின். திருமணமான தங்கை. அண்ணன் அனுப்பும் மணியார்டர் பணத்தைப் பொய்க் கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டு, குடும்பத்தாரை அல்லல் பட வைக்கும் அராஜக வில்லி. அதே நேரம் நகைச்சுவை நடிகர் நாகேஷுக்கும் ஜோடி என்பதால், இந்த வில்லத்தனங்கள் நகைச்சுவை என்ற இனிப்புத் தடவிக் கொடுக்கப்பட்ட காப்ஸ்யூல்.

‘குறத்தி மகன்’ படத்தின் துவக்கமே இவருடன் தொடங்கும். பிறந்த நாளன்று பாம்பு கடித்து மயங்கிய மகனுக்குக் குறத்தி மருந்து கொடுத்துப் பிழைக்க வைக்க, மகன் பெயரில் அர்ச்சனை அபிஷேகத்துக்கு வைத்திருந்த குடம் பாலையும் குறத்தியின் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்வதுடன், அவளையே தெய்வமென ஏற்பதும் அந்தக் குறத்தியின் மகனை வளர்த்து ஆளாக்கும் தாயாக, எழுத்தாளரின் மனைவியாக அன்பே வடிவாகக் காட்சியளிப்பார். இப்படி ஏராளமான படங்கள், சின்ன பெரிய வேடங்கள் அவரின் திரையுலக வாழ்வில்...அதன் பின் அம்மா வேடங்கள் ஏற்றபோது ‘கன்னிப்பெண்’ படத்தில் ஜெய்சங்கருக்கும் ‘இதயவீணை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கும் அம்மாவானார்.

ஏற்றமும் தாழ்வும் தந்த நாடக அனுபவங்கள்

திரையுலகில் இந்த நிலை என்றால், நாடகங்களில் சகுந்தலாவை மிஞ்ச ஆள் இல்லை. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். என திரையுலகில் நாயகர்களாக மின்னியவர்களும் அப்போது தனித் தனி நாடகக் குழுக்களை நடத்தி வந்தனர். இரு நட்சத்திர நாயகர்களின் நாடகங்களிலும் சகுந்தலாவே நட்சத்திர நாயகியாக நடித்துப் புகழுடன் விளங்கியவர்.

மு.கருணாநிதி எழுதிய ‘நானே அறிவாளி’, ‘காகிதப்பூ’ போன்ற தி.மு.க.வின் ஏராளமான பிரச்சார நாடகங்களில் நடித்தவர். நாடகங்களில் நடிப்பதற்கு இடையில்தான் அவர் திரைப்படங்களில் நடித்தார் என்றும் சொல்லலாம். அந்த அளவு நாடகங்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எம்.ஜி.ஆர். திரையுலகில் பெரிய வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தைத் தொடங்கி நடத்தியபோது அதில் தொடர்ந்து நடித்து வந்தவர்  சகுந்தலா. ‘இன்பக் கனவு’, ‘அட்வகேட் அமரன்’, ‘பகைவனின் காதலி’, ‘சுமைதாங்கி’ போன்றவை மிகப் பிரபலமான நாடகங்கள்.

பெரிய நகரங்களில் மட்டுமல்லாமல், சிறு நகரங்களிலும் கூட இந்த நாடகங்கள் நடத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றன. இவர்களின் குழு சென்னையிலிருந்து புறப்பட்டால், மீண்டும் சென்னை திரும்ப ஒரு மாத காலம் கூட பிடிக்குமாம். அந்த அளவு தொடர்ச்சியாக நாடகங்கள் நடத்தப்பட்டு வந்தன. ஜி.சகுந்தலா, தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கும் கூட எம்.ஜி.ஆர். நாடக மன்றம் ஒரு முக்கிய காரணி எனலாம்.

எம்.ஜி.ஆர். நாடக மன்றம் நாடகங்கள் நடத்துவதை நிறுத்திய பின், சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்து நடித்து வந்தார். 1965ல் ‘வியட்நாம் வீடு’ நாடகம் ஒரு வித்தியாசமான முயற்சி. அதில் பிரஸ்டீஜ் பத்மநாப அய்யராக சிவாஜி நடிக்க, அவரின் மனைவி சாவித்திரி மாமியாக மடிசார் கட்டிக்கொண்டு நடித்துப் பிரமாதப்படுத்தியவர் ஜி.சகுந்தலா.

இந்த நாடகம் பல்லாயிரம் முறை மேடையேற்றம் கண்டது. ஐந்தாண்டுகளுக்குப் பின் அது திரை வடிவம் பெற்றபோது, நிகழ்ந்த பல மாற்றங்களில், கதாநாயகியாக நடித்தவர் பத்மினி. ’வியட்நாம் வீடு’ படம் வெற்றி பெற்றபோதும், சகுந்தலா அளவுக்கு சாவித்திரி கதாபாத்திரத்தை பத்மினி செய்யவில்லை என்றும் பேச்சு எழுந்தது. ‘வியட்நாம் வீடு’ நாடகம், திரைப்படம் இரண்டையும் பார்த்தவர்கள் அனைவரும் இப்போது வரை அதை ஒப்புக் கொள்கிறார்கள்.

‘வியட்நாம் வீடு’ ஏற்படுத்திய மனக்கசப்பில் சிவாஜி நாடக மன்றத்தை விட்டு விலகி, ‘தில்லை தியேட்டர்ஸ்’ என சொந்தமாக நாடகக் குழுவைத் தொடங்கினார். கலைஞர் மு.கருணாநிதியை சந்தித்து ஒரு நாடகம் எழுதித் தரும்படி வேண்டுகோள் விடுத்தார். அவரும் ஒரு நிபந்தனையுடன் ஒரு நாடகம் எழுதிக் கொடுத்தார். ‘எஸ்.வி. சகஸ்ர நாமம் நாடகத்தை இயக்க வேண்டும்’ என்பதுதான் அந்த நிபந்தனை. அப்படியே சகஸ்ரநாமம் இயக்கத்தில் கருணாநிதி எழுதிய ‘வெள்ளிக்கிழமை’ நாடகம் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் வெற்றிகரமாக அரங்கேறியது. கதாநாயகியாக சகுந்தலா நடித்தார் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.டி.சுப்புலட்சுமி, காந்திமதி, பீலி சிவம், மணிமாலா, டி.கே.எஸ்.சந்திரன், தேங்காய் சீனிவாசன் என பெரும் நட்சத்திரக் கூட்டமே அந்த நாடகத்தில் நடித்திருந்தது. சபாக்களில் மட்டுமல்லாமல், தமிழக அரசு நடத்திய பொருட்காட்சிகளில் எல்லாம் ‘வெள்ளிக்கிழமை’ நாடகம் சக்கைப்போடு போட்டது. இதைத் திரைப்படமாக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினார் சகுந்தலா. எம்.ஜி.ஆர், மஞ்சுளா நடிக்க இப்படம், விரைவில் ஆரம்பமாகும் என்று 1971ல் செய்திகளும் வெளியாயின. ஆனால், சட்டென்று மாறிய அரசியல் நிகழ்வுகளால் இது தடைப்பட்டுப் போனது. பின்னர் மு.க.முத்து நடிக்க ‘அணையா விளக்கு’ என்ற பெயரில் வெளியாகிப் பெரும் தோல்வியைச் சந்தித்தது.

சொந்த வாழ்க்கை

1932 ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் உள்ள இசை வேளாளர் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சகுந்தலா. நடனம், நாடகம், திரைப்படங்கள் என அடுத்தடுத்து ஈடுபட்டதால் திருமண பந்தத்தை ஏற்கவில்லை. இவருடைய கலைச்சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம் 1963 ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கி கௌரவித்த ‘கலைமாமணி’ விருது.

மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’, எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயவீணை’ இரு படங்களும் 1972 ஆம் ஆண்டில் ஜூன், அக்டோபர் என அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகின. இரு படங்களிலும் அவர் நடித்திருந்தார். இதய வீணை படத்துக்குப் பின் அவர் 20 ஆண்டுகள் திரையுலகை விட்டு விலகியே இருந்தார். அண்ணன் மகன்களுடனே தன் இறுதிக் காலத்தையும் கழித்தார். நவம்பர் 8, 2004 ஆம் ஆண்டு தன் 72 வது வயதில் முதுமை காரணமாகக் காலமானார்.

(ரசிப்போம்!)
ஸ்டில்ஸ் ஞானம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்