SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரசவம் பெண்ணுக்கு மறுபிறவி!

2019-09-04@ 11:10:44

நன்றி குங்குமம் தோழி

‘‘உயிர்களை பிறப்பிக்கும் ஆற்றல் கொண்டதால் பெண் என்பவள் வணங்கத்தக்கவள்’’ என்கிறார் ஓய்வு பெற்ற செவிலியர் செல்வமணி.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகிலுள்ள கிராமம் தென்கலம் புதூர். இது தான் செவிலியர் செல்வமணி பிறந்த ஊர். அப்பா குருசாமி விவசாயி, அம்மா மாடத்தி ஆடு, மாடுகள் வளர்த்து வந்தார். தம்பி, மூன்று சகோதரிகள் என நான்கு பேருடன் பிறந்த செல்வமணி ஆரம்பக் கல்வியை தென்கலம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்துள்ளார்.

‘‘தொடக்கப்பள்ளி படிச்சதுக்கு அப்புறம் மேற்கொண்டு படிக்க வைக்க எங்கள் வீட்டில் வசதி இல்லை. அதனால் எங்க அப்பா என்னை தூத்துக்குடியிலுள்ள சுப்பையா வித்யாலயா ஆசிரமத்தில் சேர்த்துவிட்டாங்க. அங்கிருந்து 6ம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படிச்சேன். வீட்டில் இருந்து அம்மா எனக்கு இரண்டு ரூபாய் மணியார்டர் அனுப்புவாங்க.

ஆசிரமத்தில் சாப்பாடு கோதுமை கஞ்சிதான். அதையும் சகித்துக்கொண்டு ஒருவேளை மட்டும் உணவு உண்டு இரண்டு வருடங்கள்
அங்கிருந்து படிச்சேன்.8 முதல் 11 வரை நல்லமாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வியை தொடர்ந்தேன். குடும்ப வறுமையின் காரணமாக பதினொன்றாம் வகுப்பில் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. அதனால் தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் விடாது, படிக்க வேண்டும் என்ற என் முயற்சியின் காரணமாக டுட்டோரியல் சேர்ந்து படிச்சேன்.

தேர்ச்சியும் பெற்று, 1977ல் +2 படிச்சு முடிச்சேன். படிப்பு முடித்த கையோடு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் உள்ள கணவாய்ப்பட்டி கிராமத்தில் வெறும் முப்பது ரூபாய் சம்பளத்திற்கு அங்கன்வாடி ஆயாவாக என்னுடைய பணியைத் தொடங்கினேன். அதன் பின்பு 1979ம் ஆண்டு அங்கன்வாடி ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தேன். அதன்பின்பு என்னுடைய சம்பளமானது மெல்ல மெல்ல உயர ஆரம்பிச்சது.

வெறும் 30 ரூபாயிலிருந்து 90 ரூபாய்க்கு வந்தது. பள்ளி வேலை முடிந்ததும், தோட்டத்திலும் வேலைப் பார்க்க ஆரம்பிச்சேன். அதில் வந்த வருமானத்தில் என் அம்மாவுக்கு மாதம் 60 ரூபாய் மணியார்டர் அனுப்பி வைப்பேன். இந்த நிலையில் தான் செவிலியர் படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்று தெரியவந்தது.

ஒன்றரை வருடம் செவிலியர் படிப்பிற்கான படிப்பை படித்தேன். தூத்துக்குடி, கன்னியாகுமரி என இரண்டு மாவட்டங்களிலும் ஒவ்வொரு வருடம் என இரண்டு வருட பயிற்சியும் எடுத்தேன்’’ என்றவர் அடுத்த கட்டமாக அரசு பணியில் சேர ஆயுத்தமானார். ‘‘1985 ஆம் ஆண்டு, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் என 600 பேர் நேர்முகத் தேர்வு எழுத வந்திருந்தனர்.

அதில் நானும் ஒருத்தியாக தேர்வினை எழுதினேன். தேர்ச்சியும் பெற்றேன். நீலகிரி மாவட்டம் தூண்ஏரி கிராமத்தில் செவிலியராக 1987ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி பணியில் சேர்ந்தேன். வேலை கிடைச்சாச்சு. ஆனால் நெல்லையிலிருந்து நீலகிரிக்கு போக கையில் பணம் இல்லை. அம்மா உடனே வீட்டில்  பாலுக்காக வளர்த்து வந்த இரண்டு எருமைகளை விற்று என்னுடைய பயணச் செலவுக்கு கொடுத்தாங்க. அதைப் பெற்றுக் கொண்டு நீலகிரிக்கு பயணமானேன்.

தூண்ஏரி கிராமத்தில் அதிகமாக வடுகர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் மொழியான வடுக மொழியை தவிர வேற மொழி பேசத் தெரியாது. அங்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றத் தொடங்கினேன். என்னுடன் மொத்தம் 44 பெண்கள் வந்திருந்தார்கள். போர்த்திக்கொள்ள போர்வை இல்லாமல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேலையை செய்ய ஆரம்பித்தோம்.

முதல் மாத சம்பளம் ரூபாய் 850 கிடைச்சது. நாட்கள் நகர்ந்தது. திருமணம் ஆனது. என் கணவரும் என் வேலைப் பற்றி புரிந்து கொண்டு எனக்கு உறுதுணையா இருந்தார். அவர் தூத்துக்குடியில் சத்துணவு பணியாளர் வேலைப் பார்த்து வந்தார். எனக்காக நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றலாகி டிரான்ஸ்பர் வாங்கி வந்தார்’’ என்றவர் மலைகளில் அவர் வேலை பார்த்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
 
‘‘மலையில் வாழும் மக்களுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும் என்பதற்காக 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று தடுப்பூசிகளை தலைமை மருத்துவமனையில் இருந்து வாங்கி வரணும். அதற்காக காலையிலே கிளம்பிடுவேன். மலையில் நடந்து செல்லும் அந்த புதுமையான அனுபவத்தை மறக்கவே முடியாது. அதன் பிறகு தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். 10 ஆண்டு காலம் தலைவர் பதவியில் இருந்தேன்.

2004 ஆம் ஆண்டு கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். ஒன்பது வருடம் இங்கு வேலைபாத்தேன். பிறகு 2014ம் ஆண்டு வரை தென்கலம் கிராமத்தில் செவிலியராக பணியாற்றி என் பணியை முடித்து ஓய்வு பெற்றேன். பணியாற்றும் காலங்களில் 300 பிரசவங்கள் வரை நான் பார்த்துள்ளேன். மகப்பேறு துறையில் செவிலியராக 10 ஆண்டு காலம் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன்.

என்னைப் பொறுத்த வரை ஒவ்வொரு தாய்மார்களுக்கும் பிரசவம் நடைபெறும் போது எனக்கு நடப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஒரே நாளில் ஐந்து பிரசவம் பார்த்து இருக்கேன். ஒரு முறை கடையத்தில் பிரசவம் பார்க்கும் போது, தாய்க்கு இயல்பு நிலை மறந்து போனது. எங்களுக்கு என்ன செய்வதுன்னு புரியல.

அவங்கள உடனே நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தாயையும் குழந்தையையும்  காப்பாற்றியது மறக்க முடியாத சம்பவ
ம். பெண் என்பவள் ஒரு உயிரை இந்த உலகுக்கு தருபவள். அவள்  வணங்கத்தக்கவள். பெண்மையை போற்றுங்கள். ஒரு பிரசவம் என்பது பெண் எடுக்கும் மறு அவதாரம்’’ என்றார் செவிலியர் செல்வமணி.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

படங்கள்: ரா.பரமகுமார், ச.சுடலைரத்தினம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-01-2021

  22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்