SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் சிறந்த வீரர்களை வெல்வேன்!

2019-08-19@ 16:51:29

நன்றி குங்குமம் தோழி

டென்னிஸ் வீராங்கனை கோரி காஃப்

நாம் வரலாற்றை உருவாக்குபவர்கள் அல்ல;
வரலாற்றின் மூலம் உருவாக்கப்பட்டவர்கள்.
- மார்டின் லூதர் கிங்

விளையாட்டும், கலையும் ஒடுக்கப்படும் மக்களின் போராட்ட வடிவங்களாகக் கையிலெடுத்து அதில் சிலர் வெற்றியும் கண்டுள்ளனர். இதில் கோலோச்சியவர்களில் முதன்மையானவர்கள்  டென்னிஸ் போட்டிகளில் பல சாதனைகள் படைத்து வரும் வில்லியம்ஸ் சகோதரிகள். அந்த வரிசையில் தற்போது தனி முத்திரை பதித்திருப்பவர் கோரி காஃப்.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ், சகநாட்டு வீரங்கனையான கோரி காஃபை எதிர்கொண்டார். உலகின் முன்னணி வீராங்கனையான வீனஸ் ஆட்டத்திற்கு நிகராக ஈடுகொடுத்து விளையாடிய காஃப் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார்.

விம்பிள்டனில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸை முதன்முதலில் எதிர்கொண்ட காஃப் எந்தவித பயமின்றி ஆக்ரோஷமாக விளையாடி வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. யார் இந்த காஃப் என்பதை அறியும் முன் டென்னிசில் கறுப்பினத்தவரின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

1956 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெள்ளை இனத்தவருக்கு நிகராக கறுப்பினத்தவருக்கும் உரிமைகள் வழங்க வேண்டுமென்று போராட்டங்கள் நடந்து வந்த காலம். போராளியான மார்டின் லூதர் கிங் அமெரிக்கா அரசுக்கு  எதிராகப் பயங்கரமான கிளர்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தார். உரிமைகளைப் பெற மால்கம் X போன்றவர்கள் சற்று தீவிரமான கொள்கைகளைக் கடைப்பிடித்தனர். அதே ஆண்டில் சத்தமின்றி பெரும் புரட்சி ஒன்றை நிகழ்த்தினார் அல்தியா கிப்ஸன் என்ற அமெரிக்க-ஆப்ரிக்க டென்னீஸ் வீராங்கனை.

வெள்ளை இனத்தவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த டென்னீஸ் விளையாட்டில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற கறுப்பினத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் கிப்ஸன். விம்பிள்டனைத் தொடர்ந்து 1957ஆம் ஆண்டு அமெரிக்க சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார். இதன் மூலம் உலகின் முதல் நிலை வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியிலும் பங்கேற்று இறுதிப் போட்டி வரை வந்தார். இதில் கலந்து கொண்ட முதல் கறுப்பின பெண் கிப்ஸன்.

அமெரிக்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கோப்பையுடன் நியூயார்க் நகர் தெருக்களில் பெருமிதத்துடன் வலம் வந்தார் கிப்ஸன். இந்த காட்சிகளை பார்த்த போது டென்னீஸ் விளையாட்டில் நிறத்தடைகள் நீங்கிவிட்டன என்ற தோற்றம் மட்டுமே ஏற்பட்டது. பின் பத்து ஆண்டுகள் கழித்து ஆர்தர் ஆஷ் புதிய சாதனைக்குச் சொந்தக்காரரானார். அமெரிக்க ஓப்பன், ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் என கிரான்ஸ்லாம் பட்டங்களைக் குவித்தார்.

அமெரிக்காவின் டேவிஸ் கோப்பை அணியில் இடம்பெற்ற முதல் கருப்பினத்தவர் ஆர்தர். முன்னணி வீரராக வலம் வந்த ஆர்தரை அமெரிக்கர்கள் கொண்டாடினர். இதன் மூலம் நிற வெறியும், டென்னிஸில் நிறத்தால் ஏற்பட்ட தடைகளும் நீங்கிவிட்டதாகக் கூற முடியாது. நிறப்பாகுபாடு தொடர்கின்றன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இவர்கள் இருவருக்கு பின் டென்னிஸ் உலகில் சாதனைப்படைத்த கறுப்பினத்தவரை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

கறுப்பினத்தவர்கள் டென்னிசில் சாதிக்க முடியாததற்கு பல்வேறு தடைகள் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். பயிற்சி பெற போதிய பணமின்மை முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நுணுக்கமான திறன் வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இவையெல்லாம் தாண்டி நிறம் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பது கறுப்பினத்தவரின் குற்றச்சாட்டு. பல டென்னிஸ் போட்டிகளில் ரசிகர்கள் நிறவெறி உணர்வோடு நடந்து கொண்டது இதற்கு சான்று.

2002 ஆம் ஆண்டு இண்டியன் வெல்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்த செரினா வில்லியம்ஸும், 14 ஆம் இடத்திலிருந்த பெல்ஜியத்தின் கிம் கிளஸ்ட்ரஸும் மோதினர். வெள்ளையின ரசிகர்களால் நிரம்பி இருந்த அரங்கத்தில், சொந்த நாட்டுக்காரரான செரினாவுக்கு குரல் கொடுப்பதற்குப் பதிலாக கிளஸ்ட்டருக்கு ஆதரவாகக் கரவொலி சத்தம் எழுந்தது. செரினா தவறிழைக்கும் போதெல்லாம் கேலி செய்தனர். மனம் தளராமல் விளையாடி கோப்பையைக் கைப்பற்றினார் செரினா. அப்போதும் குறையவில்லை ரசிகர்களின் பரிகாசம். இந்நிகழ்வுக்கு பின் 14ஆண்டுகளாக இண்டியன் வில்ஸ் போட்டியில் செரினா, வீனஸ் சகோதரிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இது போன்ற பல நெருக்கடிகளுக்கு நடுவே தங்களது கடின ஆட்டங்களினால், பெரும்பாலான கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வில்லியம் சகோதரிகளே வெற்றி பெறுவார்கள் என்று சொல்லும் அளவிற்கு மகளிர் டென்னிஸே இவர்களுக்கான போட்டியாக மாறியது.உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்று டென்னிசின் அனைத்து வகையான உத்திகளிலும் கை தேர்ந்தவராகத் திகழ்ந்த ஸ்டெஃபி கிராஃபை தனது 17வது வயதில் தோற்கடித்தார் செரினா. இதுவே செரினாவின் பிரம்மாண்டமான முதல் வெற்றி. 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற கறுப்பின பெண் என்ற பெருமையையும் பெற்றார் செரினா.

செரினாவின் தீவிர ரசிகையாகவும், தனது ரோல் மாடலாகவும் கொண்டு விளையாடி வரும் கோரி காஃப் வயது 15. 7 வயதில் டென்னிஸ் வாழ்க்கையைத் தொடங்கிய காஃப், தனது 13வது வயதில் அமெரிக்க ஓபன் ஜூனியர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இளவயது வீராங்கனை என்ற சிறப்பை படைத்தார். ஜூனியர் தொடர்களில் காஃப் காட்டிய திறமையின் அடிப்படையில் விம்பிள்டன் போட்டிக்கு வைல்டு கார்டு மூலம் தகுதி பெற்றார். செரினாவுக்குப் பயிற்சி அளித்த பேட்ரிக் மோட்ராடோகோலோ இவருக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.

இந்த வெற்றி குறித்துக் கோரி காஃப் கூறுகையில், “நான் வெற்றியடைந்த பின் வில்லியம்ஸ் அவரது வாழ்த்துகளைத் தெரிவித்தார். நானும் அவரிடம் நன்றி தெரிவித்தேன். இந்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. ஒரு போட்டியில் வென்றபின், நான் அழுதது இதுதான் முதல் முறை. என்னுடைய உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. வீனஸ் வில்லியம்ஸுக்கு எதிராக ஒவ்வொரு புள்ளி எடுக்கும்போதும் மிகுந்த உற்சாகமடைந்தேன். ஆனால், எனக்கு நானே என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். மகிழ்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டேன். வெற்றி பெற்ற பின் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

உண்மையிலேயே கடினமாக உழைக்கும் போது நாம் விரும்பும் இடத்தை பெறலாம் என்பதை இதுகாட்டுகிறது. இந்த நேரத்தில் இங்கு நான் வருவேன் என்பது தெரியாது. எனவே எல்லா நேரத்திலும் தயாராகவே இருக்க வேண்டும்” என்று கூறும் காஃப், மற்றொரு டென்னிஸ் வீரராக இருக்க விரும்பவில்லை.

சமூக வலைத்தளங்களில் சில டென்னிஸ் வீரர்கள், “நான் டென்னிஸ் விளையாடுகிறேன்” என்ற சுயசரிதையைப் பதிவு செய்திருப்பர். காஃபோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  “#prayforsudan”, யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பான, “சூடானில் வன்முறை, அமைதியின்மை அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்” என உலகம் முழுவதும்  உள்ள போராட்டங்கள், நெருக்கடிகள் பற்றிய குறிப்புகள் இவரது பக்கத்தில் நிரம்பியிருக்கின்றன. இதைப் பார்க்கும் முதல் இருபது இடங்களில் உள்ள ஆண், பெண் எவரும் நம்பிக்கையை கற்றுக் கொள்ளலாம்.

கறுப்பின வரலாற்று மாதம் மற்றும் ஜூண்டீன்த் போது, ​​ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றின் விவரங்களைப் பதிவிட காஃப் தனது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினார். அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்று தெரியாதவர்களிடமிருந்து, அந்த பதிவுக்கான பதில்கள் கிடைத்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். கறுப்பின வரலாறு பற்றிப் பேசுவதில் அவர் அதிக உறுதியுடன் இருந்தார். அவள் ஒரு விளையாட்டு வீரர் அல்ல, விளையாட்டோடு ஒன்றியவள்.

காஃப்க்கு தான் யார் என்பது தெரியும். அதே போல் யாரிடம் வெற்றி பெற்றிருக்கிறோம் அவர் யார் என்பதன் வரலாறும் அறிந்தவள். வில்லியம் சகோதரிகளைப் பார்த்து விளையாட்டுக்கு வந்தவள். அதன் தாக்கம் தன் விளையாட்டில் தெரியும் என்று கூறும் காஃப், “நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இங்கே இல்லை” என்கிறார்.

வீனஸ் 14வயதாக இருந்தபோது, ​​உலகின் சிறந்த வீரர்களை வெல்லத் தயாராக இருப்பதாகக் கூறினார். தற்போது காஃப் இதையே சொல்லி இருக்கிறார். வரும் காலங்களில் இவரது சாதனைகளையும் பட்டியலிடப் போகிறது இவ்வுலகம்.

அன்னம் அரசு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jayallithaa_mmeerrr

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

 • vilaaaa_neeemm

  அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்