SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்ணே, நீ உன்னை விரும்பு!

2019-07-31@ 13:14:17

நன்றி குங்குமம் தோழி

‘ஒரு வீட்டின் ஆதாரமாக இருக்கும் பெண், தன் குடும்பத்தினரின் நலனுக்காக ஓயாது உழைப்பாளே தவிர, தன் மீது அக்கறை செலுத்துவதில்லை. முதலில் தன் உடலைப்பற்றி, தன் ஆரோக்கியத்தைப்பற்றி தெரிந்து கொண்டால்தான் தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும்’ என்பதை வலியுறுத்தும் விதமாக, பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாமல், கிராமம், கிராமமாகச் சென்று பெண் கல்வி, சுகாதாரம், மனநலம் மற்றும் பெண்கள் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வித்தியாசமான முறையில் கொண்டு செல்லும் பெண் சுகாதார விழிப்புணர்வு கல்வியாளரான கீதா மோகன், பெண் சக்திக்கு ஓர் முன்னுதாரணம்…

குறிப்பாக கிராமத்து ஏழைப் பெண்களின் நலன் மீது அதீத அக்கறை கொண்டுள்ள இவர், பெண்களுக்கான சுகாதார மேம்பாட்டுக் கல்வியை வழக்கமான அணுகுமுறையில் இல்லாமல், எப்படி அவர்களை ஆர்வத்துடன் தன்னிடம் ஈர்க்கிறார் என்பதை தன்னுடைய கனிவான குரலில் சொல்லத் தொடங்கியவுடனேயே,  நம்மையறியாமலேயே  நமக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது…

“சில மாதங்களுக்கு முன்பு, மகளிர் தினத்தை ஒட்டி, திருமலை அறக்கட்டளை மற்றும் ‘பெண்நலம்’ அமைப்பும் சேர்ந்து ராணிப்பேட்டையில் ஒரு சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தினோம். அந்த விழாவில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். ‘பெஸ்ட் மாம்’ என்ற தலைப்பில் வித்தியாசமான போட்டி நடந்தது.

அதில், விருதிற்காக தேர்வு செய்யும் பெண்களை வழக்கம் போல் நடுவர்களை வைத்து தேர்வு செய்யாமல், மனநல ஆலோசகர், சத்துணவு நிபுணர், மகளிர்நலம் மற்றும் கருத்தரிப்பு சிறப்பு மருத்துவர் என ஒரு மருத்துவக் குழு கலந்து கொண்டு, அவர்களுக்கு போட்டி நடத்தினோம். அவர்களுக்கிடையே சமையல் போட்டி, அறிவுத்திறன் போட்டி போன்றவற்றை நடத்தி, குடும்ப நலத்திலும், சமூகநலத்திலும் அக்கறை காட்டும் பெண்கள் எப்படி தங்கள் உடல்நலத்திலும், மன நலத்திலும் அக்கறை காட்டவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி புரிய வைத்தோம்.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருப்பை வாய் பரிசோதனை மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான மெமோகிராம் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய அவசியம், அவர்களுடைய மனநலம் சம்பந்தமான சந்தேகங்கள், நம்முடைய பாரம்பரிய உணவில் உள்ள ஊட்டச்சத்து நலன்கள் போன்ற தகவல்களை மருத்துவர்கள் எடுத்துச் சொன்னார்கள். குடும்பத்தின் தூண்களாக இருக்கும் பெண்கள் தங்களுடைய உடல்நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறினோம்.

மேலும், ‘இருபாலர் சமத்துவம்’ என்ற இந்த வருடத்திய மகளிர்தின மையக்கருத்தை அவர்களிடம்  கொண்டு செல்லும் விதமாக, ஒரு தாய், ஆண் குழந்தை, பெண் குழந்தை இருவரும் வளரும்  வீடுகளில், ஆண் பிள்ளைகள் எப்படி பெண் பிள்ளைகளிடம் மரியாதையாக நடக்கவேண்டும் என்பதையும், அவன் வளர்ந்தபின் சமூகப்பொறுப்போடும்,  அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரிய வைத்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை  எடுத்துரைத்தோம். இந்த முயற்சியால் எங்களுடைய நோக்கத்தை அவர்களிடம் கொண்டு செல்ல உதவியது.  அனைத்துப் பெண்களுமே மிகவும் மகிழ்ச்சியோடு பங்கு கொண்டனர்.  எப்பொழுதும் வேலை, குடும்பம் என்ற சுமையோடு சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு இந்நிகழ்ச்சி கண்டிப்பாக ஒரு மாறுதலை கொடுத்திருக்கும்.

எந்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் வித்தியாசமாக எடுத்துச் செல்வதுதான் என்னுடைய சிறப்பு. சுகாதார தகவல்களை பெறவேண்டும் என்ற அடிப்படை ஆர்வமே எந்த ஒரு பெண்ணுக்கும் இருப்பதில்லை.  அந்தத் தகவல்களை சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்லும்போது அதன் ஆழம் அவர்களைச் சென்றடையும் என நம்புகிறேன். ‘பியூட்டி அட் பார்ட்டி’, ‘அ, ஆ, இ’ (அழகு, ஆரோக்கியம் , இளமையோடு இருப்பது எப்படி? ‘நலம் நலமறிய ஆவல்’ இப்படி வித்தியாசமான தலைப்புகள் கொடுத்து, அதில் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்ய வைப்பதன் மூலமாக சுகாதார தகவல்களை கொண்டு செல்கிறேன்.

‘பெண்நலம்’ என்ற புற்றுநோய் அமைப்பின் விழிப்புணர்வு கல்வியாளராக இருக்கும் நான், குழுவில் உள்ள தன்னார்வலர்களுடன் இணைந்து பெண்கள் குறித்த அனைத்து உடல்நலம் சம்பந்தமான ஆலோசனைகளையும் கொடுத்து வருகிறோம். நடமாடும் கண்டறியும் பரிசோதனை மையம் மூலமாக பேருந்துகளில், கிராமப்புறங்களில் வீட்டுப் பெண்களுக்கு குறைந்த கட்டணத்திலும், வசதியற்றவர்களுக்கு இலவசமாகவும் மற்றும் நகரங்களில் பெண்கள் பணி செய்யும் நிறுவனங்களுக்கும் சென்று  பரிசோதனை செய்கிறோம். ‘தோழி சோதனை செய், ஆரோக்கியத்தை கொண்டாடு’ என்ற ஸ்லோகனை பேருந்தில் எழுதி வைத்திருக்கிறேன்.

புற்றுநோய் பரிசோதனை செய்வதற்கு மட்டுமானதல்ல, அதன் மூலம் அவர்களுடைய ஆரோக்கியத்தை உறுதி செய்வதையே முக்கியமாக நினைக்கிறோம். ஆரம்பக்கட்டத்தில் ‘0’ நிலை இருக்கும் போதே கண்டறிந்து புற்றுநோயிலிருந்து குணப்படுத்துவதுதான் எங்களுடைய முதல் நோக்கம்.  கல்லூரி, அரசு நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் என எங்கெல்லாம் பெண்கள் அதிகம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் விழிப்புணர்வை எடுத்துச் செல்கிறோம்.

ஆரம்பத்தில் ஒரு பத்திரிகையாளராகத்தான் என் வாழ்க்கையைத் தொடங்கினேன். தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி மற்றும் தமிழ்நாடு சுகாதார சொசைட்டியிலிருந்து வெளிவரும்  பத்திரிகைகளில் ஆசிரியராக பணிபுரிந்தேன். நிறைய ஹெல்த் சம்பந்தமான பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு இருந்ததால், ‘பெண்நலம்’ அமைப்பின்  விழிப்புணர்வு கல்வியாளராக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.  கருப்பை வாய் பரிசோதனை, மார்பகப் பரிசோதனைக்கு நாங்கள் மிகக்குறைந்த அளவு கட்டணத்தை வசூலிக்கிறோம்.

இந்த கட்டணமும் இல்லாமல் பரிசோதனை செய்தால், யாரோ ஸ்பான்சர் செய்கிறார்கள் என்ற அக்கறை இல்லாமல் சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிடும் பெண்கள் இருக்கிறார்கள். அதோடு, மார்பகப் புற்றுநோய்க்காக கொடுக்கப்படும் கீமோதெரபி, ரேடியேஷன், அறுவை சிகிச்சைகளுக்குப்பின் தன்னுடைய இயல்பான அழகை இழக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போது அதற்கான  மனநல ஆலோசனைகளையும் கொடுக்கிறோம். அவர்களுக்கு யோகா பயிற்சிகள், கவுன்சிலிங் எல்லாம் கொடுக்கிறோம்.

சுகாதாரம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட டாக்குமென்டரி படங்களை தயாரிக்கும் பணியிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். தற்போது, திராவிட பண்பாடு, கலாச்சாரம் குறித்த அடிப்படைத் தகவல்களை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக டாக்குமென்டரி படம் எடுக்கும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 90 சதவீத வேலை முடிந்துவிட்டது.

சுகாதாரத் தகவல்களை வெறுமனே ஒரு ஸ்பீச் மாதிரி கொடுத்தால் அது சரியாக மக்களிடம் போய் சேராது என்பதால்,  வித்தியாசமான முறையில் எடுத்துச் சொல்வேன்.  ஒரு கேள்வி, பதில் அமர்வாக வைத்தால் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளை எடுத்துச் சொல்வார்கள். அதிலிருந்து மற்றவர்களுக்கும் விடை கிடைக்கும். கிராமத்தில் இருக்கும் பல பெண்கள் மாதவிடாய் என்றால் கெட்ட ரத்தம் என்றுதான் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதவிடாய் பற்றிய அடிப்படை தகவலைக்கூட அவர்கள் பெற்றிருக்கவில்லை. தைராய்டு, ஹார்மோன் பிரச்னைகள், பால்வினை நோய், பாலியல் பிரச்னைகள் போன்றவற்றைப்பற்றிய அடிப்படைக்  கல்வியை அவர்களுக்கு சொல்லித் தருகிறேன்.

யோகா, உடற்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சி போன்ற வாழ்வியல்  கல்விமுறைகளையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறேன்.  இவையெல்லாவற்றையுமே அரசின் சுகாதாரத் துறையோடு இணைந்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள பெண்களுக்கு கொண்டு செல்கிறேன். பள்ளிச்சிறுமிகளுக்கு ‘உன்னால் முடியும்’, ‘என்னைப்பற்றி நான்’ என்ற தலைப்புகளில் கவிதை, கட்டுரைப் போட்டி, நாடகங்கள் நடத்தி அதன் மூலமாக சுகாதாரத் தகவல்களைச் சொல்லும் போது, அவர்களாகவே ஆர்வத்தோடு தகவல்களை தேட முற்படுகிறார்கள்.

இதனால் ரத்தசோகை என்றால் என்ன? தைராய்டு என்றால் என்ன? என்ற தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கிறது. இது எல்லாமே கார்ப்பரேஷன் பள்ளி மாணவிகள் செய்கிறார்கள் என்றால் பாருங்கள்! அந்த போட்டிகளின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க, அதே கார்ப்பரேஷன் பள்ளியில் படித்து இன்று சமூகத்தில் பெரிய அந்தஸ்து வகிப்பவர்களை   நடுவராக நியமிப்பேன். அவர்களிடமிருந்து பரிசை வாங்கும் குழந்தைகள் மிகப்பெரிய
சந்தோஷத்தை அடைகிறார்கள்.

பொம்மலாட்டம், மிமிக்ரி, மைமிங் போன்று சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறேன்.  மூன்று, நான்கு சுற்றுகளாக போட்டியை நடத்துவேன். இந்த முயற்சி பெண்களிடம் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. ‘என்னைப்பற்றி நான்’ என்னும் போது அதுவரை தன்னைப்பற்றியே அறியாதவற்றை தானாகவே அறிய முற்படுவார்கள்.

அடுத்த சுற்றில், பாட்டு, நடனம், ஓவியம், சமையல்  என ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் தனித்திறமையை வெளிக்கொண்டுவரும் முயற்சியாகவும் இது இருக்கிறது. பல பெண்கள் ஒன்றாகக் கூடும்போது தன் குடும்பத்தில், வெளியில் ஏற்படும் சவாலான சூழ்நிலைகளை எப்படி கையாள்வது? முடிவெடுக்கும் திறன்களை வளர்க்க வேண்டும் என்ற புரிதல்கள் கிடைக்கிறது. கூடவே அவர்களிடத்தில் தன்னம்பிக்கையும் கூடுகிறது.

குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழந்தை வளர்ப்பில்,  பணியிடத்தில் என வெவ்வேறு மாதிரியான சவால்களை சந்திக்கிறாள். அவளுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முதலில் அவள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தவேண்டும் என நினைக்கிறேன். ஒரு மாற்றம் வரவேண்டும் என்றால் அனைவருமே சேர்ந்து ஈடுபடும்போதுதான் அதற்கான வெற்றியை
எளிதில் அடைய முடியும்.

- மகாலட்சுமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்