SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2019-07-24@ 16:10:03

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா


வீகன் டயட் பற்றி முன்பே விரிவாகப் பார்த்திருக்கிறோம். இந்த நனிசைவ நல் டயட்டைப் பின்பற்றி எடைக்குறைப்பு எப்படி சாத்தியம் என்பதையும் இந்த இதழில் பார்த்துவிடுவோம். வீகன் டயட் இன்று உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது.

பில் கிளிண்டன், பிராட் பிட், அன்னா ஹாத்வே, ஜெனிஃபர் லோபஸ், அமலா, சோனம் கபூர், மல்லிகா ஷெராவத், கங்கனா ரனாவத்  போன்ற ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வீகன் டயட்டைப் பின்பற்றுகின்றனர். வீகன் டயட் வாழ்நாள் முழுமைக்குமான ஒரு மாற்று உணவுமுறை. வீகன் டயட்டைப் பின்பற்றி வெயிட் லாஸ் செய்வதற்கான டிப்ஸ் இங்கே...

வீகன் டயட்டின் உணவு பிரமீடு என்பது அனைவருக்கும் பொதுவானது. எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கும்கூட அது பொதுவானது. எனவே, எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அதற்கு ஏற்ப உங்களின் உணவுத் தேர்வை மாற்றி அமைக்க வேண்டும்.

வீகனில் அசைவம்தான் கிடையாதே தவிர கொழுப்பும், புரதமும், சோடியமும் உள்ள உணவுகள் நிறைய உள்ளன.  கொழுப்பு உடல் குறைப்புக்கு எதிரானது. எல்லோரும் உண்ணும் அளவுக்கு கொழுப்பை உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் உண்டால் பலன் கிடைக்காது.
சோயாபால், சோயா (மீல் மேக்கர்), நட்ஸ் வகைகள் போன்றவற்றில் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளன. இவற்றின் கலோரி அளவைக் கணக்கிட்டு உங்கள் எடைக்குறைப்பின் திட்டமிடலுக்கு ஏற்ப இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

முழுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதில் தவறு இல்லை. சில எடைக்குறைப்பு டயட்களில் முழுதானியங்களைச் சேர்க்க வேண்டாம் என்பார்கள். ஆனால், இதில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் உள்ளிட்ட முக்கியமான உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதால், அளவாக எடுத்துக்கொள்ளலாம்.

அதே சமயம், வீகன் டயட் பிரமீட்டில் முழுதானியங்கள் ஒரு நாளுக்கு மூன்று முதல் ஐந்து கப் என்று இருந்தால், எடை குறைக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச அளவான மூன்று கப்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.தீட்டப்பட்ட தானியங்களோடு ஒப்பிடும்போது முழுதானியங்களில் பலன்கள் அதிகம். முழுதானியங்களில் ஆரோக்கியமான காம்ப்ளெக்ஸ், கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இவை ரத்தத்தில் மெதுவாக கலந்து, உடலுக்குத்  தேவையான குளுக்கோஸை சிறிது சிறிதாக உடலுக்குத் தருகின்றன. இதனால், ரத்த சர்க்கரை அளவு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, எடை குறைப்பு நிகழ்வதோடு,  நம் செரிமானமும் மேம்படுகிறது. எனவே, தீட்டப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக முழுதானியங்களை அளவாகப் பயன்படுத்தலாம்.

சர்க்கரை உடல் குறைப்புக்கு எதிரானது. எனவே, அதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமாக சர்க்கரையை எடுத்துக்கொள்வது உடலில் ஈஸ்ட் உற்பத்தியை அதிகரிக்கும். ஈஸ்ட் உற்பத்தி உடல் பருமனை உருவாக்கும். எடைக் குறைப்புக்கு
எதிராகச் செயல்படும்.

பழச்சாறுகளைத் தவிர்க்க வேண்டும். ஜூஸ் என்பது உடலில் சர்க்கரையைச் சேர்ப்பதற்கான வழிகளில் ஒன்று. பழங்கள் நம் உடலுக்கு அவசியமானவை, அதில் உள்ள வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள், நார்சத்துக்கள் அவசியம் நம் உடலுக்குத் தேவை. ஆனால், பழங்களை ஜூஸாகக் குடிக்கும்போது இந்த சத்துக்கள் சிதைந்துவிடுகின்றன. மேலும், அவற்றில் உள்ள ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை மட்டுமே உடலுக்குக் கிடைக்கிறது. எனவே, பழங்களை கடித்து, மென்று உண்பதே ஆரோக்கியம்.

கீரைகள், காலிஃபிளவர், புரோகோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் கால்சியம் நிறைந்துள்ளது. கால்சியம் எடை குறைப்புக்கு மிகவும் அவசியம். தினசரி 6-12 டம்ளர் தண்ணீர் பருகுங்கள். உணவில் உள்ள நார்ச்சத்து முழுமையாகச் செயல்பட தண்ணீர் மிகவும் அவசியம். நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், செளசெள, சுரைக்காய், தர்பூசணி போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதும் நல்லதே.

நட்ஸ் உடலுக்கு மிகவும் அவசியம். அவற்றில் வீகன் புரோட்டின் நிறைந்துள்ளது. மேலும், உடலுக்குத் தேவையான என்சைம்கள், நுண்ணூட்டச்சத்துகளும் இவற்றில் உள்ளன. வறுக்கப்பட்ட நட்ஸ் சுவையானது மட்டும் அல்ல உடலில் புரதத்தையும் சற்று அதிகரிக்கும். எனவே, வறுக்கப்பட்ட, வறுபடாத நட்ஸ் இரண்டையுமே சாப்பிடலாம். ஆனால், எடை குறைப்புதான் இலக்கு என்றால்,  தினசரி கால் கப் நட்ஸுக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வீகன் டயட்டில் எடைக்குறைப்பு என்பது உடற்பயிற்சி இல்லாமல் முழுமையடைவது இல்லை. தினசரி அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது என்பது எடைக்குறைப்புக்கு அழகான வழி. 10 நிமிடங்கள் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது நல்லது. ஏரோபிக்ஸ், சைக்கிளிங், டிரெட் மில் பயிற்சிகளும் செய்யலாம்.

எக்ஸ்பர்ட் விசிட்


ருஜுத்தா திவேகர் இந்தியாவின் புகழ்பெற்ற உணவியல் நிபுணர். 108 கிலோ எடை இருந்த ஜூனியர் அம்பானிக்கு எடைக்குறைப்புக்கான ஆலோசகராகச் செயல்பட்டவர். எல்லாவற்றிலும் அதிரடியாகக் கருத்து சொல்லும் ருஜுத்தா டயாபடீஸ் டயட் குறித்துச் சொல்லும் அதிரடிகளைப் பாருங்கள். இவற்றில் ஏதேனும் உங்களுக்கு செட் ஆகாது என்று தெரிந்தால் மருத்துவரை ஆலோசித்தபின் பின்பற்றவும்.

1. உள்ளூர் பழங்களை உண்ணுங்கள்: வாழைப்பழம், திராட்சை, மாம்பழம் என எல்லா பழங்களிலுமே ஃபிரக்டோஸ் எனும் சர்க்கரை உள்ளதுதான். ஆனால், பழம் சாப்பிடுவது என்று முடிவெடுத்தால் ஆப்பிள் சாப்பிடுவதைவிட மாம்பழம் சாப்பிடுவதைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், அது நம் உடலின் இயல்புக்கு மரபாகவே நெருக்கமானது.

2. தாவர எண்ணெயைவிட தாவர வித்து எண்ணெய் சிறந்தது: நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய் வித்துக்களில் இருந்து பெறப்படும் எண்ணெய்கள், ஆலிவ் ஆயில், அரிசித்தவிட்டு எண்ணெய் (Rice bran oil) போன்ற தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய்களைவிட சிறந்தவை. எனவே, இவற்றைப் பயன்படுத்தலாம்.

3. தேங்காயைச் சேருங்கள்: தேங்காயில் ஜீரோ கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே, இட்லி, தோசைக்கு சட்னியாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ தேங்காயை உணவில் சேர்ப்பது நல்லது.

4. பழச்சாறுகள் வேண்டாம்: பழச்சாறுகள் பருகுவதைவிட பழத்தைக் கடித்துத் திண்பதே நல்லது. பழத்தை ஜூஸ் ஆக்கும்போது அதில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் உடைகின்றன. எனவே, பழங்களை மென்று சாப்பிடலாம்.

5. கைக்குத்தல் புழுங்கல் அரிசியைப் பயன்படுத்துங்கள்: பிரவுன் அரிசியைவிட கைக்குத்தல் புழுங்கல் அரிசியைப் பயன்படுத்தலாம். பிரவுன் அரிசி வேக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்றால், செரிக்கவும் நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். எனவே, கைக்குத்தல் புழுங்கல் அரிசியே நல்லது. அரிசியில் கார்ப்போஹைட்ரேட் உடன் தாது உப்புக்களும் நிறைந்துள்ளன.

6. கலோரியைப் பார்க்காதீர்கள் ஊட்டச்சத்து மதிப்பைப் பாருங்கள்: உணவில் கலோரி எவ்வளவு கிடைக்கிறது என்பதைவிட, அதன் ஊட்டச்சத்து மதிப்பு என்ன என்பதில்தான் ஆரோக்கியம் உள்ளது. எனவே, கலோரி கூடுமோ எனப் பயந்து ஊட்டச்சத்து உள்ளதைத் தவிர்க்காதீர்கள்.
7.பிரெட், பிஸ்கெட், கேக், பீஸா, பாஸ்தா போன்றவற்றுக்கு ‘நோ’ சொல்லுங்கள்.

8. பருவகாலங்களுக்கு ஏற்ப உண்ணுங்கள்: நம் உடல் பருவகாலங்களுக்கு ஏற்பவே பசி எடுக்கும். எனவே, உடலின் இயல்பான தேவையை அனுமதியுங்கள்.

9. டீயை எப்போது தவிர்க்கலாம்: காலையில் வெறும் வயிற்றில் டீயைக் குடிக்காதீர்கள். பசியுடன் இருக்கும்போதும் டீ குடிக்காதீர்கள். ஒரு நாளைக்கு 2-3 முறைக்கு மேல் டீ குடிப்பது நல்லது அல்ல.

10.மரபான உணவுகளை உண்ணுங்கள்: உங்கள் மரபான உணவுகளை உண்ணுங்கள். உங்கள் முன்னோர் உண்டதை உண்ணுங்கள்.

11.பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு கள், பானங்களுக்கு தடா போடுங்கள்.

உணவு விதி#29

செல்லும் இடத்தில் எல்லோரும் உண்பதையே உண்ணுங்கள். இது பின்பற்ற கொஞ்சம் கடினமான விதிதான். ஆனால், பொருளாதாரமாகவும் உயிரியல் அடிப்படையிலும் நல்ல பலன் தரக்கூடியது.

நம் பூமி அந்தந்த சீதோஷ்ணம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற காய்கறிகளையும், விலங்குகளையும் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மனிதன் அந்த நிலப்பகுதிக்கான காய்கறிகளை உண்டு இயற்கையோடு ஒட்டி வாழும்போது அவனின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

இப்படி, சூழலின் இயல்பைப் புரியாமல் நாக்குக்கு அடிமையாகி எங்க ஊர் உணவையேதான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்தால், பர்ஸும் பழுக்கும். அந்த உணவு ஆரோக்கியமா என்பதற்கும் அந்த சூழலுக்கு செட் ஆகுமா என்பதற்கும் உத்தரவாதமும் இருக்காது. எனவே, ரோமில் ரோமானியனாய் இரு என்ற பழமொழிக்கு ஏற்ப அந்தந்த ஊருக்கு ஏற்ப மாறுவதே நல்லது.

திருப்பதியில் லட்டு எப்போயிருந்து கொடுக்கறாங்க தெரியுமா?

திருப்பதி என்றாலே ஏழுமலையானுக்கு அடுத்து நினைவுக்கு வருவது அவரின் பிரசாதமாய் வரும் லட்டுதான். இந்த லட்டு எப்போது முதல் வழங்கப்பட்டு வருகிறது தெரியுமா..? வாருங்கள் வரலாறு என்ன சொல்லுதுன்னு எட்டிப் பார்ப்போம்.பல்லவர்கள் காலத்திலிருந்தே அதாவது ஏழாம் நூற்றாண்டுகளிலிருந்தே திருப்பதி தென்னிந்தியா முழுதும் புகழ்பெற்றிருந்தது. கி.பி 830ல் பல்லவர்கள் ஆட்சியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்  டது. அந்நாட்களில் பல நூறு மைல் தொலைவிலிருந்து கட்டு சோறு கட்டிவந்து பார்த்துச் செல்வார்கள் என்பதால் அவர்கள் வீடு சென்று சேரும்வரை தேவையான உணவையே பிரசாதமாக வழங்கி வந்திருக்கிறார்கள்.

கி.பி.1445ம் ஆண்டில் திருப்பொங்கம் எனும் பெயரில் ஒருவகை பொங்கல் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் சுய்யம் என்ற இனிப்புப் பண்டத்தையும் கொடுத்துள்ளார்கள். பிறகு பத்தாண்டுகள் கழித்து அப்பத்தைப் பிரசாதமாகக் கொடுத்துள்ளார்கள். கி.பி 1460ம் ஆண்டு அது வடையாக பரிணமித்தது. அடுத்த மூன்றே ஆண்டுகளில் வடைக்குப் பதிலாக அதிரசம் வழங்கப்பட்டது.

பிறகு, பல ஆண்டுகள் கழித்து 1547ம் ஆண்டு முதல் மனோஹரம் என்ற இனிப்புப் பண்டம் வழங்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் திருப்பதி மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, 1803ம் ஆண்டு பிரசாதப் பொருள் விநியோக விதிகளின்படி பூந்தி வழங்கப்பட்டது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஒருவழியாக 1940ல்தான் லட்டு பிரசாதமாகத் தருவது வழக்கத்துக்கு வந்தது.

தொடக்கத்தில் இந்த லட்டு எட்டு அணாவிற்கு விற்கப்பட்டது. விலைவாசி ஏற ஏற லட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் கோவிந்த பிரசாதம் அல்லவா? அதுதான் என்ன விலைக்கு விற்றாலும் க்யூவில் நின்று வாங்கிச் செல்கிறார்கள் பக்தர்கள்.

ஃபுட் சயின்ஸ்

பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் மிக முக்கியமான பி9 பற்றி இந்த இதழில் பார்ப்போம். இதனை ஃபோலேட், ஃபோலிக் ஆசிட் என்றும் சொல்வார்கள். ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் இதனை கரு நன்றாக வளர்வதற்காகப் பரிந்துரைப்பார்கள்.

இப்போதெல்லாம் குழந்தைப் பிறப்புக்குத் திட்டமிடத் தொடங்கும்போதும் திருமணம் உறுதியான உடனும்கூட ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். கருவின் வளர்ச்சிக்கும் கர்ப்பப்பையின் மேம்பாட்டுக்கும் அவ்வளவு முக்கிய வைட்டமின் இது. சிசு நியூரல் ட்யூப் கோளாறுகள் போன்ற பெரிய பாதிப்புகள் இல்லாமல் பிறக்க இந்த வைட்டமின் மிகவும் அவசியம்.

செல் கட்டுமானங்களில் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ போன்றவற்றின் செயல்பாட்டுக்கும் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் ஃபோலிக் ஆசிட் மிகவும் அவசியம். உலக சுகாதார நிறுவனம் இதனை ஃபுட் ஃபோர்டிஃபிகேஷன் முறையில் உணவுப் பொருட்களில் செரிவுபடுத்திக்கொடுக்கவும் பரிந்துரைக்கிறது. இந்த வைட்டமின் குறையும்போது உடலில் ஃபோலேட் குறைபாடு ஏற்படுகிறது.

இதனால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, சோர்வு, இதயப் படபடப்பு, மூச்சுத்திணறல், நாக்கில் புண்கள், தோல் மற்றும் தலைமுடி நிற மாற்றம் ஆகிய பாதிப்புகள் உருவாகின்றன. ஃபோலேட் ஒரு ஆரோக்கியமானவரின் உடலில் 400 மை.கி வரை இருக்க வேண்டும்.

இந்த வைட்டமினை 1931ல் தொடங்கி 1943ம் ஆண்டுவாக்கில் கண்டுபிடித்தாலும் இந்த நூற்றாண்டில்தான் இது அத்தியாவசிய மருத்துவப் பொருளாக உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, சுண்டல், பச்சைப்பட்டாணி, கீரைகள், சோயாபீன்ஸ், புரோகோலி, வால்நட் ஆகியவற்றில் இந்த சத்து நிறைந்துள்ளது.

ஃபுட் மித்ஸ்

அதிகக் காரமான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் அல்சர் வரும் என்று ஒரு மித் உள்ளது. இதில் அவ்வளவு உண்மை இல்லை. அல்சர் எனும் வயிற்றுப்புண் உருவாவதில் ஹெலிக்கோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியாதான் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் தொற்று தாக்குதல் உள்ளவர்களுக்கு அல்சர் ஏற்படும். அல்சர் புண் உருவான பிறகு காரணமான உணவைச் சாப்பிட்டால் வயிறு எரிச்சலாகி, வலி அதிகரிக்கும்.

மேலும், IBS எனும் இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்சனை உருவாகும். அதாவது, சாப்பிட்டவுடன் மலங்கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இதனையே நிறையப்பேர் அல்சர் என நினைத்துக்கொள்கிறார்கள். மற்றபடி அல்சருக்கும் காரசாரமான உணவுகளுக்கும் நேரடித் தொடர்பில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jayallithaa_mmeerrr

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

 • vilaaaa_neeemm

  அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்