SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2019-07-22@ 15:54:49

நன்றி குங்குமம் தோழி

* காய்கறி சாலட் செய்யும்போது அதில் சில ரொட்டி துண்டுகளை போட்டு வைத்தால் சாலட் தண்ணீர் விட்டுக் கொள்ளாமல் புதுவித சுவையோடு இருக்கும்.

* எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சர்க்கரை, ஐஸ் கலந்து சர்பத் தயாரித்து அருந்துவதற்கு முன் அதில் சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கலக்கி அருந்தினால் சர்பத்தில் உள்ள துவர்ப்புத்தன்மை நீங்கி சாப்பிட சுவையாக இருக்கும்.

* பாயசம் மற்றும் பலகாரங்கள் செய்யும்போது ஏலக்காய் பொடி சீக்கிரம் பொடியாகாது. இதை தவிர்க்க ஏலக்காயுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பொடித்தால் பவுடர் போலாகிவிடும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

* பருப்பு சேர்த்து காய் கூட்டு செய்யும்போது தேங்காய் எண்ணெயில் தாளித்தால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

* சுரைக்காய் கூட்டு செய்யும்பொழுது இறக்குவதற்கு முன் 1 டீஸ்பூன் கெட்டித்தயிர் ஊற்றி கலந்தால் சுவையாக இருக்கும்.

* முட்டை பொடிமாஸ் செய்யும்பொழுது 2 டீஸ்பூன் பால் சேர்த்து அடித்துச் செய்தால் நன்றாக உதிர் உதிராக வரும்.
- அமலா ஜுடு, சென்னை.

* சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டால், வெறும் சோற்று உருண்டையை சாம்பாரில் போட்டால், அதிகமான உப்பை ேசாற்று உருண்டை எடுத்துவிடும்.
- கீதா, திருவான்மியூர்.

*பச்சரிசியை பொன்னிறமாக வறுத்து, அதை 3 மணிநேரம் ஊற வைத்துவிடவும். அரிசியில் 1/2 பங்கு வெள்ளை உளுத்தம் பருப்பை நைஸாக அரைத்துக்கொண்டு, அரிசியை நீர் விடாமல் கெட்டியான ரவப் பதத்திற்கு அரைத்து அந்த மாவுடன் உப்புப் போட்டு இட்லிக்குத் தேவையான பதத்திற்கு கரைத்து இட்லியை வேக வைத்து எடுத்தால் இட்லி பூப்போன்று மிருதுவாக இருக்கும்.
- எல்.தீபிகா, சென்னை.

*சாப்பாட்டில் ஆர்வம் இல்லாமல் நாக்கு மதமதப்பாக இருந்தால் புதினா சட்னியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட பலன் கிடைக்கும்.
*சில காய்ந்த மிளகாய் காம்புகளை தோசை மாவில் போட்டு வைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும்.
- நா.செ.வள்ளி, திருநெல்வேலி.

*மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடி செய்து தினமும் 3 வேளை சாப்பிட வறட்டு இருமல் குணமாகும்.
*கடுகை கஷாயம் செய்து அதில் தேன் கலந்து சாப்பிட்டால் நாக்குத்தடிப்பு, நாக்கு இழுப்பு மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
- ஆர்.அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி.

*புளிக்குழம்பு (காரக்குழம்பு) செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலைப் பருப்பை வறுத்து, ரெண்டு மூன்றாக உடைத்துப் போடுங்கள். குழம்பு வாசனையாக இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.

*ரொட்டியில் தயாரிக்கப்படும் உப்புமாவில் உருளைக்கிழங்கை சிறிதாக நறுக்கி சேருங்கள். சுவை கூடும்.
*புதினா சட்னி பச்சை கலராக இருக்க வேண்டும் என்றால் புதினா இலை, கொத்தமல்லி இலை இரண்டையும் அரைக்கும்போது சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் உப்பு சேர்க்கவும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

*பீன்ஸ், கேரட், முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாயை வதக்கி அதனுடன் உப்பு, தேங்காய் சேர்த்து அரைத்தால் சுவையான வெஜிடபிள் சட்னி தயார்.
*மூக்குக்கடலை சுண்டல் தாளிக்கும்போது இரண்டு கேரட்டை துருவி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால் சுவையாக இருக்கும்.

*மோர் குழம்பு செய்து இறக்குவதற்கு முன்னதாக சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் ருசியே தனி.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

நெல்லிக்காய் பிரியாணி!

நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், நெல்லிக்காய் பிரியாணி செய்து சாப்பிடலாம்.

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பெரிய நெல்லிக்காய் - 10, பச்சை மிளகாய் - 2, கரம்மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி - சிறு துண்டு, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காய் பிரியாணி செய்வதற்கு முதலில் நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை துருவி வைத்துக்கொள்ளவும்.

அடுத்து பச்சை மிளகாயை கீறி வைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதனுடன் கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டு நன்றாக கிளறி மூடி, அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழைகளை தூவினால் சுவையான நெல்லிக்காய் பிரியாணி தயார்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

 • vilaaaa_neeemm

  அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

 • 26-01-2021

  26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்