SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இசையோடு நான்!

2018-12-20@ 17:09:46

நன்றி குங்குமம் தோழி

ப்ரியா மாலிக்கு வயசு 16. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி இப்போது வளர்ந்த வரும் பின்னணி பாடகி. இசை அமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஷரத்தால் கண்டெடுக்கப்பட்டவர். யுவன் இசையமைப்பில் ப்யார் பிரேமா காதல் படத்தில் அவருடன் இணைந்து ப்ரியா பாடிய ‘சர்பிரைஸ் மீ...’ மற்றும் ‘மிஸ் யு பாப்பா என்ற’ இரண்டு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு பக்கம் படிப்பு மறுபக்கம் ஆடிஷன்னு பறந்துகொண்டு இருக்கிறார் ப்ரியா மாலி.‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூர். பத்தாம் வகுப்பு வரை அங்க தான் படிச்சேன். அப்பாக்கு பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. நானும் அம்மாவும் கடந்த ஆண்டு சென்னைக்கு வந்துட்டோம். இப்ப இங்க +2 கேந்திர வித்யாலயாவில் படிச்சிட்டு இருக்கேன். என்னோட படிப்பு மற்றும் ஆடிஷன் சம்பந்தமா எல்லாமே அம்மா தான் பார்த்துக்கிறாங்க’’ என்றார்.

சென்னைக்கு வரக் காரணம்?

ஐந்தாம் வகுப்பில் இருந்து பாட்டு கத்துக்கிட்டு இருக்கேன். பெங்களூரில் பிரபல ஹம்சலேகா இசைப்பள்ளியில் தான் இசை பயின்றேன். ஒன்பதாவது படிக்கும் போது ‘இமை’ படத்தில் பாட வாய்ப்பு வந்தது. ஆடிஷனுக்காக சென்னைக்கு வந்தேன். முகமது ஆதிஃப் இசையில் ஹரிசரனோடு டூயட். ஆனா படம் கடந்த ஆண்டு தான் ரிலீஸ் ஆச்சு. சினிமாவில் முதல் வாய்ப்பு என்றாலும், அந்த பாட்டு ரிலீஸ் ஆகும் முன் பெங்களூரில் நிறைய மேடை நிகழ்ச்சி, டி.வி சேனல்களில் பங்கு பெற்று பாடி இருக்கேன். சூப்பர் சிங்கர் பாட்டு போட்டியிலும் கலந்து கொண்டேன். அந்த சமயம் அம்மாவுக்கு சின்ன விபத்து ஏற்பட்டது.

தலையில அடிபட்டு தையல் போட்டு இருந்தாங்க. ஒவ்வொரு முறை ஷுட்டிங்கிற்காக பெங்களூர் சென்னைன்னு வரவேண்டியதா இருந்தது. அம்மாவும் உடல்நிலையை பொருட்படுத்தாம என்னை அழைச்சிட்டு வருவாங்க. அம்மாவின் நிலையை பார்த்து எனக்குள் ஒரு டிப்ரஷன் ஏற்பட்டது. போட்டியில் முழுசா கவனம் செலுத்த முடியல. ஜெயிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன். அதுவே எனக்குள் ஒரு வெறியா மாறிடுச்சு. தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து பயிற்சி எடுப்பேன். பள்ளி முடிந்து மறுபடியும் பயிற்சிக்கு போயிடுவேன். என்னோட முயற்சியை பார்த்திட்டு எல்லாரும் சென்னைக்கு போனா வாய்ப்பு கிடைக்கும்ன்னு சொன்னாங்க. எனக்கும் அது தான் பெஸ்ட்டுன்னு தோணுச்சு. அப்பாக்கிட்ட பர்மிஷன் கேட்க, அவரும் சரின்னு சொல்ல நானும் அம்மாவும் இங்க வந்து இரண்டு வருஷமாச்சு.

யுவன் சங்கர் ராஜாவின் அறிமுகம்....

நான் பாடும் பாடல்களை அம்மா முகநூலில் அவ்வப்போது பதிவு செய்வாங்க. அவங்க ஃபிரண்ட் லிஸ்டில் இசை துறையை சார்ந்த நிறைய பேர் இருக்காங்க. இமை படத்தில் பாட வாய்ப்பும் அப்படித்தான் கிடைச்சது. அதன் பிறகு அம்மா என்னோட பாடல்களை ஷரத் சாருக்கு ஈமெயில் செய்தாங்க. மூணு மாசம் கழிச்சு அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.‘நா நுவே’ தெலுங்கு படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். அந்தப் பாடலை மட்டுமே யுடியூபில் 3.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருந்தாங்க. அது எனக்கு ஒரு பெரிய பிரேக்கை கொடுத்தது. அந்த சமயத்தில் தான் அம்மாவின் நண்பர் ஒருவர் மூலம் யுவன் சங்கர் சாரின் ஈமெயில் கிடைச்சது. அம்மா அவருக்கும் என்னோட பாடல்களை மெயில் செய்தார்.

திடீரென்று ஒரு நாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒரு பாட்டு இருக்கு அதை நீ பாடினா நல்லா இருக்கும்ன்னு சொன்னார். இதில் எனக்கு ஏற்பட்ட சர்பிரைஸ் அந்தப் பாடலை அவர் என்னுடன் சேர்ந்து பாடியது தான். பிறகு மறுபடியும் வேறு ஒரு பாடலுக்காக யுவன் அவர்களின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. மறுபடியும் அவருடன் டூயட். அப்ப தெரியாது இந்த இரண்டு பாடலும் ‘ப்யார் பிரேமா காதலு’க்காகன்னு. ஆடியோ ரிலீசுக்கு முன்னாடி தான் எனக்கு தெரிந்தது. அந்த சமயம் என்னோட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இப்ப ‘ஜீனியஸ்’ படத்தில் யுவன் சார் இசையில் ஒரு பாடல் பாடி இருக்கேன். அடுத்த ஆண்டு ரிலீசாக இருக்கும் ‘துரோணா’ தெலுங்கு படத்தில் மூணு பாடல்களை பாடி இருக்கேன்.

ஆல்பம், ஜிங்கில்ஸ்...

ஆமா, முதல்ல தூர்தர்ஷன் கன்னட சேனல்ல தான் வாய்ப்பு கிடைச்சது. இவங்க புது குரல்களுக்கான தேடலை பள்ளியில் நடத்தினாங்க. எங்க பள்ளி மூலமா எனக்கு அங்கு வாய்ப்பு கிடைச்சது. இரண்டு கன்னட பாடல்களை பாடினேன். கடந்த ஆண்டு கே டிவியில புத்தாண்டு சம்பந்தமா ஒரு பாட்டு பாடினேன். அந்த பாட்டை அன்னிக்கு மட்டுமே 45 நிமிடத்துக்கு ஒரு முறை டெலிகாஸ்ட் செய்தாங்க.

இதைத் தவிர டிவோஷனல் ஆல்பங்கள், சென்னை சில்க்ஸ் விளம்பரங்களுக்கு தமிழ், தெலுங்கு கன்னடம்னு மூணு மொழியிலும் ஜிங்கில்ஸ் பாடி இருக்கேன். கோவை, ராமநாதபுரம் மற்றும் கும்பகோணத்தில் மட்டுமே வெளியான ஆனந்தம் சில்க்ஸ் விளம்பரத்தில் ஜிங்கில்ஸ் பாடினேன். வடசென்னை படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் ஒரு ஆல்பத்திற்கு பாடி இருக்கேன். இப்பவும் நிறைய ஆல்பத்திற்கு பாடச் சொல்லி அழைப்பு வருது. பரீட்சை முடிஞ்சதும் பாடலாம்ன்னு இருக்கேன்.

குறும்படத்திற்கு இசை அமைத்தது பற்றிய அனுபவம்.

இமை படத்தில் இசை அமைப்பாளர் முகமது ஆதிஃப் தான் எனக்கு பின்னணி இசை பத்தி சொல்லிக் கொடுத்தார். அவர் இசை அமைக்கும் போது நான் கூடவே இருப்பேன். ஒரு சிட்சுவேஷனுக்கு ஏற்ப எப்படி இசை வரணும்ன்னு அவரிடம் தான் கத்துக்கிட்டேன். நான் பியானோ வாசிப்பேன். அதனால எனக்கு பின்னணி இசையின் நுணுக்கங்கள் புரிந்தது. அந்த சமயத்தில் தான் இவரின் நண்பர் ஒருவர் குறும்படம் எடுக்க இருப்பதாகவும் என்னை அதற்கு பின்னணி இசை அமைக்க சொன்னார். எனக்கும் ஆர்வம் இருந்ததால செய்து கொடுத்தேன். அம்மா வழக்கம் போல முகநூலில் பதிவு செய்ய, அடுத்த இரண்டு குறும்படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைச்சது.  

எதிர்கால திட்டம்...

இப்பதான் நான் பாட ஆரம்பிச்சு இருக்கேன். இன்னும் நான் கடந்து செல்லக் கூடிய பாதைகள் நிறைய இருக்கு. முதல்ல மார்ச் மாசம் தேர்வை முடிக்கணும். படிப்பு, ரெக்கார்டிங்ன்னு பறந்துகொண்டு இருக்கேன். ஒரு பக்கம் சினிமா வாய்ப்பு வருது, மறுபக்கம் விளம்பரங்கள் மற்றும் ஆல்பங்களில் பாட அழைப்பு. இதற்கு நடுவே படிப்பையும் பார்க்கணும். அதனால பரீட்சை முடியும் வரை ஆல்பங்கள் மற்றும் விளம்பரங்களை தவிர்த்து வருகிறேன். அதே சமயம் பாடாமலும் இருக்க முடியாது. வாய்ஸ் பயிற்சி எடுக்கலைன்னா ரெக்கார்டிங் போகும் போது கஷ்டமா இருக்கும். இப்போதைக்கு சினிமாவில் வரும் வாய்ப்பில் மட்டும் கவனம் செலுத்துறேன். தேர்வு முடிந்ததும் முழு மூச்சாக இறங்க இருக்கேன்’’ என்றார் ப்ரியா மாலி.

- ப்ரியா
படங்கள் ஆ.வின்சென்ட்பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்