SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வானவில் சந்தை

2018-09-28@ 12:36:13

நன்றி குங்குமம் தோழி

பசுமைச் சக்கரங்கள்

மென்பொருள் துறையில் பணிபுரியும் ஒரு நண்பரோடு சமீபத்தில் உரையாடிக் கொண்டிருந்தேன். ஸ்கோடா ராபிட் செடானை புதிதாக  வாங்கியிருந்தார். அது குறித்துப் பேசுகையில், அவரது அலுவலகத்தில் புதிய ட்ரெண்ட் என்பது சைக்கிள் வாங்குவதுதான் என்றார். அவரது  அலுவலக சகாக்கள் பலரும் சைக்கிள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாகவும் சொன்னார். அவருக்குமே நல்ல சைக்கிள் ஒன்றை  வாங்கும் எண்ணம் வந்து விட்டது.தொண்ணூறுகளுக்கும் முன்பெல்லாம் சைக்கிள் வைத்திருப்பது ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின்  இன்றியமையாத தேவை யாக இருந்தது.

சற்று வசதியான குடும்பத்தில் சிறுவர், சிறுமியர் பள்ளி செல்லவும் தனியாக ஒரு சைக்கிள் இருக்கும். இரண்டாயிரத்திற்குப் பிறகான  காலத்தில் அந்த இடத்தை ஸ்கூட்டர்களும் பைக்குகளும் பிடித்துக் கொண்டுவிட்டன. நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார எழுச்சியில்  சைக்கிள்கள் காணாமல் ஆகின. பெரும்பாலான வீடுகளில் சைக்கிள்களே இல்லை. பலருக்கும் சைக்கிள் ஓட்டுவதே மறந்திருக்கும். நீங்கள்  கடைசியாக எப்போது சைக்கிள் ஓட்டினீர்கள் என்று நினைவிருக்கிறதா?

உண்மையில், முன்பிருந்த சைக்கிள்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கான எளிய வடிவமைப்பைக் கொண்டிருந்தன. மிகச் சில வேறுபாடுகளோடு  ஒன்றிரண்டு வகைமைகளே அதிகம் காணப்பட்டன. இப்போது ஒரு சைக்கிள் வாங்கும் எண்ணத்துடன் கடைக்குச் சென்றால், அங்கிருக்கும்  வகைமைகள் திகைக்க வைப்பவை. ஏனென்றால், இப்போது அது வெறும் அத்தியாவசியப் பொருளல்ல. இங்கு பொதுவாக விற்கப்படும்  சைக்கிள் வகைமைகளைப் பார்க்கலாம்.

அனைத்துப் பிரதேச சைக்கிள் (All Road Bike) –

இவ்வகை சைக்கிள்கள் வழமையான சாலைகளில் மட்டுமல்லாது எல்லாவிதமான கரடுமுரடான பிரதேசங்களிலும் தாக்குப்பிடித்துச்  செல்லும் வகையில் வலுவான டயர்கள், உறுதியான கட்டமைப்பு, சஸ்பென்ஷன் போன்றவற்றைக் கொண்டிருக்கும். இவை தோராயமாக  நான்காயிரம் ரூபாயிலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கின்றன. ஹீரோ (Hero), அட்லஸ் (Atlas), பி எஸ்  ஏ(BSA), ஏவோன் (Avon), ஹெர்குலிஸ் (Hercules), பிட்வின்(Btwin), லேடி பேர்ட் (Ladybird), மேக் சிட்டி (Mach City) போன்றவை  பிரபலமான பிராண்டுகள்.

ட்ரையத்லான் சைக்கிள்கள் (Triathlon Bikes) –

இவை நேரடியான விளையாட்டுப் பயன்பாட்டிற்காக விற்கப்படுகிறது. அன்றாடப் பயன்பாட்டிற்கானவை அல்ல. விலையும் அதிகமாக  இருக்கும். தோராயமாக தொன்னூறாயிரம் ரூபாயிலிருந்து நாலரை லட்சம் ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. ஹைப்ரிட் சைக்கிள்கள்  (Hybrid Bikes) – பெயர் சொல்வதைப் போலவே இது ஒரு இரு பயன்பாட்டு சைக்கிள். சாதாரணமான அன்றாடப் பயன்பாட்டிற்கும்,  மலையேற்றம் போன்ற கடுமையான பிரதேசங்களிலும் பயன்படுத்தும் வகையில் செயல்படுவது. மேக் சிட்டி (Mach City), ஃபயர்ஃபாக்ஸ்  (Firefox), மெரிடா (Merrida), மோண்ட்ரா (Montra), ஃப்யூஜி (Fuji), ஜயன்ட் (Giant), அட்லஸ் (Atlas), ஹீரோ (Hero) போன்ற பல பிரபல  பிராண்டுகள் உள்ளன. ஐயாயிரம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரையில் இவை சந்தையில் விற்கப்படுகின்றன.மேற்கண்ட  வகைமைகள் தவிர்த்து பி எம் எக்ஸ் (BMX), மடக்கக்கூடியவை (Folding), ட்ராக் (Track) போன்ற வேறு வகைமைகளும் சந்தையில்  உள்ளன.

பொது பயன்பாட்டாளராக ஒரு சைக்கிளை வாங்கும் முன் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன?

*பயன்பாட்டுத் தேவைதான் முதல் அடிப்படை. நீங்கள் சாலைகளில் மட்டுமே செல்பவர் என்றால் ஒரு எளிய ரோட் சைக்கிளை வாங்கிக்  கொள்ளலாம். சாகசம் கருதி பல இடங்களுக்கும் எடுத்துச் செல்பவராயிருந்தால் மவுண்டைன் சைக்கிளையோ அல்லது ஹைப்ரிட் வகை  சைக்கிளையோ வாங்குவது நல்லது. பந்தயத்தில் கலந்து கொள்வது நோக்கமென்றால் ஒரு நல்ல ட்ராக் அல்லது ட்ரையத்லான் சைக்கிளை  வாங்கிக் கொள்ளலாம்.

*பெண்கள் குறுக்குச்சட்டம் (Crossbar) இல்லாத சைக்கிளை தேர்ந்தெடுக்கலாம்.

*கியர் வசதி தேவையா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டும். பிராந்தியத்திற்குத் தக்கவாறு சைக்கிளை எளிதாக ஓட்ட  உதவுபவை கியர்கள். அதை நன்கு தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.

*ஆரம்ப நிலையில் அதிக பணத்தை செலவு செய்ய வேண்டாம். முதலில் ஒரு குறைந்த விலை சைக்கிளை வாங்கி நன்கு பயன்படுத்திய  பிறகு, தேவைப்பட்டால் உயர்விலை சைக்கிள்களுக்குச் செல்லலாம். உயர்விலை சைக்கிள்களை வாங்கும் முன், பிரச்சினை வந்தால்  உங்களூரிலேயே சரி செய்யும் வசதியிருக்கிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் விற்பவர் அதற்கு என்ன ஏற்பாடுகளை செய்து  தருவார் என்று தெரிந்து வாங்குங்கள்.

*நன்கு ஓட்டிப் பாருங்கள். சரியான, பொருத்தமான ஒன்றையே தேர்ந்தெடுங்கள்.

*விலை உயர்ந்த சைக்கிள்களை ஆன்லைனில் வாங்குவதை விட நேரில் சென்று ஆராய்ந்து வாங்குவது நல்லது.

*பல கடைகளுக்கும் சென்று விலைகளை சரி பார்த்து, தள்ளுபடி ஏதும் கிடைக்குமா என்று பாருங்கள்.

*சைக்கிள் ஹெல்மெட் அவசியம் வாங்கிப் பயன்படுத்துங்கள்.

*வாங்கும் சைக்கிள்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நேரடியாகப் பயனாளர்களைச் சந்திப்பது வாய்ப்பில்லையென்றால் ஆன்லைனில் அது  குறித்த விமர்சனங்களை படியுங்கள். விலைகளையும் ஆன்லைனில் ஒப்பீடு செய்யலாம்.

*இப்போது சைக்கிள் பயனாளர்கள் பல இடங்களிலும் கூடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நீண்ட தூரப் பயணங்களும்  செல்கிறார்கள். அதில் கலந்து கொள்ளலாம்.பெட்ரோல், டீசல் வாகனங்களின் காலம் முடிந்து விட்டது. அவை தங்கள் இறுதி மூச்சை  விட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்காலம் மின்சார வாகனங்களை நம்பியிருக்கிறது. சைக்கிளுக்கு எல்லாக் காலமும் ஒன்றுதான். அது  எப்போதும் வென்றான்.

(வண்ணங்கள் தொடரும்!)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • labor8

  ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

 • transgender8

  நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

 • nasaaa_mmm

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

 • 08-03-2021

  08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்