SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய்சந்தை மணிப்பூர் மதர் மார்க்கெட்

2018-09-26@ 14:44:31

நன்றி குங்குமம் தோழி

ஆசியாவில், ஏன் உலகிலேயே பெண்களால் நடத்தப்படும் மிகப்பெரும் சந்தை ‘இமா கெய்தில்’ (Emakaithil) தான். இந்த சந்தையில் உள்ள வியாபாரிகள் அனைவரும் பெண்கள். உலகில் உள்ள மிகப்பெரிய சந்தைகளுள் ஒன்றான இச்சந்தை, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. மணிப்புரி மொழி வார்த்தையில் ‘இமா' என்றால் ‘தாய்' என்றும், ‘கெய்தில்' என்றால் ‘சந்தை' என்றும் அர்த்தம். அதாவது ‘இமா கெய்தில்’ என்றால் தமிழில் "தாய் சந்தை" எனப் பொருள்.


இச்சந்தையில் துணிமணிகள், பூக்கள், காய்-கனிகள், மீன்கள், கைவினைப் பொருட்கள் என சகலமும் பெண்களால்  மும்முரமாக  விற்பனை  செய்யப்படுகிறது. முற்றிலும் பெண்கள் மட்டுமே கோலோச்சும் இச்சந்தை, மணிப்பூரின் பிரத்யேகமான தாய்வழிச் சமூக மரபின் நீட்சியாகவே இங்கு பார்க்கப்படுகிறது. உலகத்தில் உள்ள மிகவும் தனித்தன்மை வாய்ந்த இடங்களில் ஒன்றாக க்வய்ரம்பான்ட் பஜாரில் இருக்கும் இச்சந்தை 4,000த்துக்கும் அதிகமான பெண் வணிகர்களைக் கொண்ட பெரும் சந்தையாகும். இது சுமார் 500 வருடம் பழமையானது.

16ம் நூற்றாண்டில் இது துவங்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து. ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் ‘லாலுப்-காபா’ என்ற தொழில் திட்டத்தினால், மணிப்பூரில் உள்ள ஆண்கள் போர்க்களத்திலும், தொலைதூரத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் வேலை செய்ய வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் கிராமங்களில் வீட்டில் இருந்த பெண்கள் வீட்டுப் பராமரிப்புடன் விவசாயம், வாணிபம், பொருளாதாரம் போன்ற அனைத்து பொறுப்புகளையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் மணிப்பூரில் வாணிபம் தொடர்பாக கடுமையான விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து 1939ம் ஆண்டு மணிப்பூர் பெண்கள் ஒன்றுதிரண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கி கிளர்ச்சி செய்தனர். இதனை ‘நூபி லான்’ அதாவது 'பெண்களின் யுத்தம்' என்றும் அழைத்தனர். இமா கெய்திலைச் சேர்ந்த வணிகர்கள் புதிய வணிகக் கொள்கைகளை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி, ஆங்கிலேயரின் கைப்பாவையாக செயல்பட்ட மன்னருக்கு எதிராகப் போராடினர். போராட்டத்தை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள், சந்தையில் உள்ள கட்டிடங்களை அந்நிய நாட்டினருக்கும் மற்ற வியாபாரிகளுக்கும் விற்க முயற்சி செய்தனர்.

ஆனால் இமா கெய்திலை பாரம்பரிய சின்னமாகக் கருதிய பெண் வணிகர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இந்திய விடுதலைக்குப் பின் இந்த சந்தை சமூகம், அரசியல் சார்ந்த கருத்து பரிமாற்றத்திற்கான இடமாகவும் மாறியது. மக்கள், நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள இந்த சந்தைக்கு வந்து செல்லத் துவங்கினர். மணிப்பூர் மக்களால், ‘சந்தைகளின் ராணி’ என்று  அழைக்கப்படும்  இமா கெய்தில், மணிப்பூர் மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறையின் அடையாளம் மட்டுமன்றி, பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்புக்கும் திறமைக்கும் முக்கியச் சான்றாகவும் திகழ்கிறது. இந்த சந்தையில் திருமணமான பெண்களே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சந்தையின் நிர்வாகத்தைப் பெண் வியாபாரிகளின் நலச்சங்கம் கவனித்து வருகிறது. பெண்கள் இந்த சங்கம் மூலமாக தங்கள் வியாபாரத்திற்கு பொருள் வாங்க கடன் பெற்றுக்கொண்டு, பொருளை

விற்றுக் கடனை திருப்பி அடைக்கலாம். கிட்டத்தட்ட 5000 பெண்கள்வரை கடை விரித்து விற்பனை செய்து கொண்டிருக்கும் இந்த இடத்தில், ஓர் ஆண் கூட கடை வைத்திருப்பதை பார்க்க இயலாது. இமா கெய்தில் மார்க்கெட்டில் உங்களுக்கு வேண்டியது எதுவும் கிடைக்கும். காய்கறிகளிலிருந்து மீன்கள் வரையிலும்,கைத்தறிகளிலிருந்த கைவினைப்பொருட்கள் வரையிலும் உங்களால் இச்சந்தையில் வாங்கிட முடியும். சலசலப்புக்கு நடுவே சந்தையின் ஒரு முனையில், பெண்ணொருவர் மீன்களை விற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மற்றொரு முனையில் வேறொரு பெண் புதிதாக நெய்யப்பட்ட கம்பளி ஆடைகளை விற்பனை செய்து தன்னுடைய வாடிக்கையாளரை மகிழச் செய்து கொண்டிருப்பார். பெண்கள்  சமத்துவ ம் மற்றும்  சுதந்திரத்தின் சுத்தமான அடையாளமாக இம்பாலின் இமா கெய்தில் பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்