SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டிலேயே தயாரிக்கலாம் ஆர்கானிக் சோப்!

2018-09-11@ 15:04:40

நன்றி குங்குமம் தோழி

சிறுதொழில்


வருமானம் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்...

இயற்கை மற்றும் உடலுக்கு கேடுவிளைவிக்காத பொருட்களை தற்போது மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டனர். அன்றாடம் உபயோகிக்கும்  சோப், ஷாம்பூ, வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் க்ளீனிங் லிக்விட், கொசுவிரட்டி என பலவற்றில் தீங்கு விளைவிக்கும் வேதியியல்  பொருட்கள் சேர்க்காதவற்றையே பலரும் விரும்புகிறார்கள்.

கடைகளில் தயாரிக்கப்படும் குளியல் சோப்புகள் அதிக நாட்கள் விற்பனைக்கு இருக்க வேண்டும், மக்களை கவர நறுமணம் வேண்டும்,  அழுக்குகளை நீக்கி பளிச்சென காட்ட வேண்டும் என்பதற்காகவும் செயற்கையான முறையில் ஏராளமான வேதிப்பொருட்களை  சேர்க்கிறார்கள். சோடியம் – பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ள சோப்புகள் தோலில் எரிச்சலை  ஏற்படுத்தி நோய்களை ஏற்படுத்தக்கூட வாய்ப்புள்ளது.

எனவே, இயற்கையான முறையில் குளியல் சோப் தயாரித்து ஆரோக்கியமாகவும்,  அப்பொருட்களை விற்பனை செய்து நிரந்தர வருமானத்தையும் பார்க்க முடியும் என்கிறார், சென்னை கந்தன்சாவடி சிபிஐ காலனியில்  மம்தா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் இயற்கைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் பயிற்சி அளித்துவரும் மம்தா குப்தா. மம்தா குப்தாவிடம்  பேசுகையில், ‘‘ஆரோக்கியம்தான் அழகு. அந்த அழகை பராமரிக்க இன்றைக்கு ஏராளமான ரசாயனம் கலந்த  பொருட்களை பயன்படுத்தி  வருகிறார்கள்.

அவை, முதலில் அழகாகத் தெரிந்தாலும், பின்னாளில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்திவிடுகிறது. எனவே, நம் அத்தியாவசியத்  தேவைகளுக்கு இயற்கையானவற்றையே அதிகம் பயன்படுத்துவது நல்லது. அந்த வகையில், நம் வீட்டு சமையல்கட்டிலேயே குளியல்  சோப் தயாரிக்கலாம். இட வசதி பெரிய அளவில் தேவையில்லை, லட்சக்கணக்கில் முதலீடு தேவையில்லை, அதிக நேரம் செலவிட  வேண்டியதில்லை. தினமும், சுமாராக இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஒதுக்கினால் நிரந்தரமான வருமானத்தை ஈட்டிக்கொண்டு  நிம்மதியாக வாழலாம்’’ என்றவர், அதற்கான முதலீடு மற்றும் தயாரிப்பு முறைகள் குறித்து விளக்கினார்.

‘‘ ஆரம்பக்கட்ட முதலீடு என்பது ரூ. 5 ஆயிரம்ரூபாய் போதும். மூலப்பொருளான கிளிசரின் சோப் பேஸ், எசன்ஷியல் ஆயில் ( வாசனை  திரவியங்கள்), இயற்கை நிறமூட்டிகள் ( கேசரி பவுடர், மஞ்சள் பவுடர் உள்ளிட்டவை), சோப்பை வடிவமைக்கும் சிலிக்கான் மோல்டு (  டை எனப்படும் அச்சுகள்) ஆகியவற்றை முதல்கட்டமாக வாங்கிக்கொள்ள வேண்டும். இவை அனைத்தின் விலையும் ரூ.5 ஆயிரத்தில்  அடங்கிவிடும்.

தயாரிப்பு முறை

கிளிசரின் சோப் பேஸில் தேவையான அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக கத்தியால்  நறுக்கிக்  கொள்ளவும். ஒரு கனமான கைப்பிடி  உள்ள சில்வர் பாத்திரத்தில் நறுக்கிய சோப் பேஸை போடுங்கள். அடுப்பின் மீது அகலமான பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க  வையுங்கள். அதன் மேல் நறுக்கிய சோப் பேஸ் துண்டுகள் போட்ட பாத்திரத்தை வைத்தால் (டபுள் பாயிலிங் என்பார்கள்) சோப் பேஸ்  உருக ஆரம்பிக்கும். நீர் போல உருகியதும், அந்தப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, நமக்கு என்ன நறுமணம் தேவைப்படுகிறதோ  அந்த எசன்ஷியல் ஆயில், கலர் சேர்த்து கலந்துகொள்ளவும்.

இதை உடனடியாக சோப் மோல்டில் ஊற்றவும். கிளிசரின் சோப் உடனடியாக குளிர ஆரம்பித்துவிடும். எனவே, அடுத்து செய்முறைகளுக்கு  பொருட்களை அருகிலேயே வைத்துக்கொள்ளவும். சோப் மோல்டில் ஊற்றிய சோப் குளிர தொடங்கும் முன் ரோஜா இதழ்களை அல்லது  நலுங்கமாவுப் பொடி, இப்படி பவுடர் செய்யப்பட்ட ஏராளமான இயற்கைப் பொருட்கள் உள்ளன. அவற்றை மேல் புறமாகவோ அல்லது  உட்புறமாகவோ தூவுங்கள். இரண்டு மணி நேரம் சோப்பை அறை வெப்பநிலையில் வைத்து குளிரவிடுங்கள். இதோ சோப்பு  தயாராகிவிட்டது’’ என்ற மம்தா, தான் தயாரிக்கும் ஒருசில சோப்புகளைக் குறிப்பிட்டார்.

‘‘ மசாஜ் பார் –- இது உடலில் தேய்த்துக் குளிக்கும்போது ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். பிக்ஸர் சோப் –- இந்த சோப்பின் உள்ளே பிரின்ட்  செய்த படங்கள் இருக்கும். பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் அன்பளிப்பாக இந்த சோப் கொடுக்க உதவும். அதிகம்  நுரைக்காத சோப் - அதிக நுரை வந்தால் அந்த சோப்பில் கெமிக்கல் உள்ளது என்று பொருள், அது தோலுக்கு கெடுதலை விளைவிக்கும்.  நலுங்குமாவு சோப் – - கஸ்தூரி மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவது. ஸ்கிரப் சோப் -   ஆங்கிலத்தில் இதனை லூபா சோப் என்கிறார்கள். அதாவது பீர்க்கங்காய் நாரை உள்ளே வைத்து தயாரிக்கப்படுவது. தேய்த்துக்குளிக்க  நன்றாக இருக்கும். ஃப்ரூட் சோப் – - ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களின் தோல்களைக் காயவைத்து பொடி செய்து  தயாரிக்கப்படுகிறது, அழுக்குகளை நீக்கி உடலில் பொலிவை ஏற்படுத்தும்’’ என்றவர், தமிழ்நாட்டுப் பெண்கள் அதிகம் பயன்படுத்தும்  நலுங்குமாவு சோப் தயாரிப்பு பற்றி விளக்கினார்.   
 
‘‘ பச்சைப் பயறு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பூலாங் கிழங்கு ஆகியவற்றை பொடி செய்து தயாரிப்பதே நலுங்கு மாவு. பூப் பெய்துதல்,  வளைகாப்பு போன்ற சடங்குகளில் பூசுவார்கள். பெரிய காரணமெல்லாம் இல்லை, முகம் பொலிவாக இருக்கத்தான். இந்த மாவை வைத்து  சோப் தயாரிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது நீங்களாகவே தயாரிக்கலாம்.ஒரு டேபிள் ஸ்பூன் நலுங்கு மாவில்  அது மூழ்கும் அளவு தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து வையுங்கள்.

கிளிசரின் பேஸ் சோப் எடுத்துக்கொண்டு, மேலே சொன்ன டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளுங்கள். உருகியதும்  அடுப்பிலிருந்து இறக்கி, திக்கான பசும்பால் (அல்லது எருமை பால் அல்லது ஆட்டுப்பாலும் சேர்க்கலாம்) இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து  கலக்கவும். தேவையெனில், எசன்ஷியல் ஆயில் சேர்க்கலாம். அடுத்து, எண்ணெயில் கலந்து வைத்த நலுங்கு மாவு கரைசலை சேருங்கள்.  நன்றாக கலந்து உடனடியாக சோப் மோல்டில் ஊற்றவும்.

இதன் மேலே அழகுக்காக மேல் புறம், சிறிதளவு நலுங்கு மாவை தூவிவிடுங்கள். மற்ற சோப்புகளைவிட, இந்த சோப் செட்டாக நேரம்  எடுக்கும். குறைந்தது நான்கு மணி நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருந்து, பிறகு மோல் டிலிருந்து பிரித்தெடுங்கள்’’ என்றவர், இந்த  இயற்கை நறுமண குளியல் சோப் தயாரிப்பதால் ஒரு பெண் தோராயமாக எவ்வளவு வருமானம் பார்க்கலாம் என்பது குறித்து பேசினார்.‘‘  ஒரு நாளைக்கு ஒரு கிலோ சோப் பேஸ் உபயோகிக்கிறோம் என்றால், அதன் விலை -  ரூ.300. நறுமணமூட்டும் எசன்ஷியல் ஆயில் – -  ரூ.150, கலர் பொடியின் விலை -  ரூ.50, சேர்க்கப்படும்

மூலிகைப் பொடியின் விலை -  ரூ.200  என எடுத்துக்கொண்டால் ஒருநாளைக்கு ரூ.700 தேவைப்படும். இவற்றின் மூலம் 50 கிராம்  எடையில் 20 சோப்புகள் வரை தாராளமாக தயாரிக்கலாம்.  ஒரு சோப்பின் விலை 50 முதல் 75 ரூபாய் வரை வைத்து விற்பனை  செய்யலாம். ஒரு சோப்பின் விலை ரூ.75 என வைத்துக்கொள்வோம் (ஆரோக்கியத்திற்கு செலவிடுவதில் தப்பில்லையே). அதன்படி  பார்த்தால், ஒரு நாளைக்கு ரூ.1,500 வருமானம் கிடைக்கும். மாதத்திற்கு 25 வேலைநாட்கள் என எடுத்துக் கொண்டால் 1500 x 25 + 37,500  கிடைக்கும். ஒருநாள் செலவு ரூ.700. மாதத்திற்கு 25 x 700 + ரூ.17,500 செலவாகும். இதன்படி பார்த்தால் ஒரு மாதத்திற்கு ரூ.20,000  வருமானம் கிடைக்கும்’’ என்றவர், இவற்றை சந்தைப்படுத்தும் முறை குறித்தும் விளக்கினார்.

‘‘அழகுக்கு ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை எடுத்துச்சொல்லி முதலில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களிடம் விற்பனை  செய்யலாம். அடுத்தக் கட்டமாக அக்கம்பக்கத்து கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் கொடுக்கலாம். தரம் நிறைவாக இருக்கும்  பட்சத்தில் விற்பனை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்து மிக முக்கியம் நமக்கான வாடிக்கையாளர்களின் தேவையறிந்து விற்பனை  செய்துவந்தால், தொடர்ந்து நிரந்தரமான வருமானத்தை வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்’’ என கூறி முடித்தார்.  
                     

- தோ.திருத்துவராஜ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்