SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்லுலாய்ட் பெண்கள்

2018-09-07@ 16:41:48

நன்றி குங்குமம் தோழி

பா.ஜீவசுந்தரி - 43

ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி புஷ்பவல்லி

தென்னிந்திய நடிகைகளில் மிகப் பிரமாதமான அழகியாக அறியப்படும் புஷ்பவல்லி தமிழ்ப் படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர்.  தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று அனைத்து மொழிகளிலுமாகச் சேர்த்து 100 படங்களுக்குள்தான் நடித்திருப்பார்.
அதில்தென்னிந்திய நடிகைங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி தயாரிப்பு நிறுவனத்தின் ஆஸ்தான நடிகையாக,  ஜெமினி சாம்ராஜ்ய மகாராணியாக ஒரு காலத்தில் அறியப்பட்டவர். தமிழிலும் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஜெமினியின்  தயாரிப்புகளே. ஜெமினி நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகையாக, அக்காலத்திலேயே பிற கலைஞர்களை விட மிக அதிக  ஊதியமாக மாதம் 2000 ரூபாய் பெறுபவராக இருந்திருக்கிறார்.

தன் சொந்த வாழ்க்கையில் எத்தனை எத்தனை இடிகளும் சூறாவளிகளும் நிகழ்ந்தபோதும், அதனை விரும்பி ஏற்று அத்தனையையும்  தாங்கி, வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழல விட்டவர். திரைத்துறையில் மட்டுமாவது வெற்றிக்கொடியைச் சில காலம் உயரப் பறக்க விட்டவர்,  தனக்கென்று பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டவர் புஷ்பவல்லி. 1930களின் பின்பாதியில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க  வந்தவர்களில் பலரும் கதாநாயகியாகவும் ஜொலித்தார்கள். எஸ்.வரலட்சுமி, குமாரி ருக்மணி போன்றவர்களுடன் புஷ்பவல்லியும்  முதன்மையான இடத்தைத் தக்க வைத்துக்கொண்ட நாயகியர்களில் ஒருவர்.

பால்ய வயது சீதையாக திரைப் பிரவேசம்


ஆந்திரத்து தாடேபல்லிகுடெம் கிராமம் இவரின் பூர்வீகம். (இந்தப் பெயரை நாம் ‘காதலன்’ திரைப்படத்தின் வாயிலாகக்  கேள்விப்பட்டிருக்கிறோம். கதைப்படி வில்லனாக, தமிழக கவர்னராக நடித்த கிரீஷ் கர்னாடுக்கு சொந்த ஊர் என்று அந்த ஊரே  காண்பிக்கப்படும். மற்றொரு வில்லன் ரகுவரன் அங்கு கழுதை மேய்த்துக் கொண்டு, அவ்வப்போது கவர்னரின் வயர்லெஸ் அழைப்பின்  பேரில் தாடேபல்லிகுடெத்திலிருந்து தமிழகம் வந்து எங்காவது குண்டு வைத்துக் கலவரம் ஏற்படுத்துவார்.) புஷ்பவல்லிக்கு சிறு வயது  முதலே சினிமா மீது தீராக் காதல். சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதற்காகப் பக்கத்து ஊரான ராஜ மகேந்திர புரத்துக்குச்  சென்றவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தால் எப்படியிருக்கும்? துறுதுறுவென அலைபாயும் அகன்ற கண்களில் ஆர்வம்  மின்ன நின்ற அந்தச் சிறுமியைப் பார்த்த இயக்குநர் சி.புல்லையாவுக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப் போய் விட்டது. தன் ‘சம்பூர்ண  ராமாயணம்'(1936) தெலுங்குப் படத்தில் பால்ய வயது சீதையாக அறிமுகப்படுத்தினார். (பின்னாளில் தமிழ் சம்பூர்ண ராமாயணம் படத்தில்  தசரதச் சக்கரவர்த்தியின் மூன்று தேவியரில் மூத்தவரான கோசலையாகவும் நடித்தார்.) இப்படித்தான் குழந்தை நட்சத்திரமாக  புஷ்பவல்லியின் திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. தொடர்ந்து ‘சல்மோகனரங்கா’ என்ற படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
புரட்சிகர நாயகியாக வார்ப்பு

புஷ்பவல்லி கதாநாயகியாக நடித்த ‘வர விக்ரயம்’ தெலுங்கின் சூப்பர் டூப்பர் ஹிட் படம். புஷ்பவல்லி கதாநாயகியாகவும் தங்கை  கமலாவாகவும் நடிக்க பி. பானுமதி அக்காள் காளிந்தியாக நடித்தார். மூத்த மகளை மூன்றாம் தாரமாக வயதான நபருக்குக் கல்யாணம்  செய்து கொடுக்க நினைக்கும் தந்தை, கிழட்டு மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுப்பதற்காகக் கடன் வாங்குகிறார். கிழட்டு மாப்பிள்ளையை  மணக்க விரும்பாத மகள் காளிந்தி, தன் விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாள். மனம்  கொந்தளித்த தங்கை கமலா அந்தக் கிழவரை மணந்து கொள்ளச் சம்மதிக்கிறாள். பின்னர், வரதட்சணைக் கொடுமைக்காகக் கணவன் மீது  வழக்குத் தொடுக்க நீதிமன்றத்தின் படிக்கட்டுகள் ஏறுகிறாள். இந்தப் புதுமைப்பெண்ணாக புஷ்பவல்லி நடித்திருக்கிறார். ‘வர விக்ரயம்’  என்பது வரனை விற்றல் என்பதாகும். 1939லேயே வரதட்சணைக்கு எதிராகப் புரட்சிகரமாகக் கதை பின்னப்பட்டிருக்கிறது. அத்துடன்  புஷ்பவல்லியைக் கண்டு வியந்த பானுமதி, அவரைப் போலவே தன் பெயரையும் கனகவல்லி என்று மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற  விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், கமலா, காளிந்தி சகோதரிகளின் தாயாராக நடித்த  சீனியர் ரஞ்சனி, தெலுங்கு சினிமாவின் முதல் திரைப்பட நடிகை ஆவார்.

அபரஞ்சியைக் கனவினில் கண்டாலும் ஆபத்து…

தன் அழகின் மீது பெரும் கர்வமும் ஆணவமும் கொண்ட அழகிய தாசி அபரஞ்சி, யார் தன்னைக் கனவில் கண்டாலும் அவர்கள் தனக்கு  அபராதம் செலுத்த வேண்டும் என்ற திமிர் கொண்டவள். கோயில் குருக்கள் தாசி அபரஞ்சியைக் கனவில் கண்ட ஆனந்தத்தில் அது பற்றி  புலம்பித் திரிய, அது அபரஞ்சியின் காதுக்குப் போகிறது. அபராதம் செலுத்தும்படி அவள் வலியுறுத்த, குருக்கள் பஞ்சாயத்துக்காக அவ்வூர்  செட்டியாரிடம் செல்கிறார். செட்டியார் வழக்கை விசாரித்தாலும், அவர் வளர்க்கும் அபூர்வமான ஒரு கிளியே அந்த வழக்கில் தீர்ப்பு  சொல்கிறது. அந்தக் கிளியின் உடலில் இருப்பவன் மன்னன் விக்கிரமாதித்தன். ஆம்! இறந்து போன கிளி ஒன்றுக்காகக் கூடு விட்டுக் கூடு  பாய்ந்து அதனுள் புகுந்தவன். அவன் உடல் என்னவாயிற்று என்பது தனிக்கதை. கோயில் குருக்களின் வழக்கைத் தீர விசாரித்த கிளி,  “குருக்கள் கனவிலே உன்னைக் கண்டதற்கு அபராதமாக அதோ அந்தக் கண்ணாடியில் தெரியும் பொன்னின் பிரதி பிம்பத்தை எடுத்துக்  கொள்” என்று தீர்ப்பு சொல்கிறது.

விக்கிரமாதித்தன் கதைதான். இதைப் படிப்பதற்கே இவ்வளவு சுவாரசியமாக இருந்தால், படம் எப்படியிருக்கும்? நல்ல ஃபாண்டஸி கதை.  ஆனால், அதன் பிரதிதான் இப்போது இல்லை. தாசி அபரஞ்சியாக அப்படத்தில் அறிமுகமானவர் புஷ்பவல்லி. தமிழில் அவருக்கு முதல்  படம் இது. அவருக்காக வைக்கப்பட்ட கட் அவுட் அந்தக் காலத்தில் வெகு பிரபலம். எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் புஷ்பவல்லியின்  கண்கள் பார்ப்பவர்களை உற்று நோக்குவது போன்ற உணர்வை ஏற்படுத்துவது போல் அந்த கட் அவுட் வடிவமைக்கப்பட்டிருந்ததாம். கதை,  வசனம், பாடல்கள், இயக்கம் அத்தனை பொறுப்புகளையும் ஏற்றவர் கொத்தமங்கலம் சுப்பு. தாசி அபரஞ்சியைக் கனவில் கண்ட குருக்களாக  நடித்தவரும் இவரே. அத்துடன் தெலுங்கு பேசும் நாயகி புஷ்பவல்லிக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து அவரை அழகாகத் தமிழில் பேச  வைத்த தமிழ் வாத்தியாரும் அவர்தான்.

தமிழின் முதல் சமூக நையாண்டிப் படம்

1947ல் வெளியான ‘மிஸ் மாலினி’ பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் எழுதிய ‘மிஸ்டர் சம்பத்’ என்ற கதையைத் தழுவி  எடுக்கப்பட்ட, தென்னிந்தியாவின் முதல் சமூக நையாண்டிப் படம். 1939-1945 வரையிலான இரண்டாவது உலகப்போர் காலகட்டத்தின்  வாழ்க்கையை, எள்ளல் தொனிக்க நாசுக்காகச் சொல்லும் படம். அறிவுஜீவிகளுக்கான படமும் கூட. படத்திலும் நடிகை மாலினியாக,  கதாநாயகி வேடம் ஏற்றிருந்தார் புஷ்பவல்லி. நகைச்சுவை ததும்பும் வசனங்களை எழுதியதுடன் கதாநாயகன் சம்பத் வேடம் ஏற்றவர்  கொத்தமங்கலம் சுப்பு. சினிமா இயக்குநராக நடித்தவர் சீதாராமன். இவர் பின்னர் ‘ஏழை படும் பாடு’ படத்தில் இன்ஸ்பெக்டர் ஜாவர் வேடம்  ஏற்றதால் ஜாவர் சீதாராமன் என்று பின்னாளில் அறியப்பட்டார். மற்றொருவர் உதவி இயக்குநர் வேடம் ஏற்ற ஆர்.ஜி. என்ற ராமசாமி  கணேசன். இவரே பின்னாளில் பிரபல ‘காதல் மன்னன்’, புஷ்பவல்லியின் துணைவர் ஜெமினி கணேசன்.

கைநழுவிப் போன சந்திரலேகா

‘சந்திரலேகா’ என்ற பிரம்மாண்டத்துக்கு முன்னதாகத் தயாரிக்கப்பட்ட ‘தாசி அபரஞ்சி’, ‘மிஸ். மாலினி’ இரண்டு படங்களுமே மிகக் குறுகிய  காலத்தில் தயாரிக்கப்பட்ட ஜெமினியின் வெற்றிப் படங்கள். ‘சந்திரலேகா’ மட்டும் புஷ்பவல்லியின் கையிலிருந்து நழுவி ‘கனவுக்கன்னி’  டி.ஆர்.ராஜகுமாரி வசமானது. அந்தப் படத்தின் பிற்பகுதியில் பெரும்பான்மையாக இடம்பெற்ற சர்க்கஸ் காட்சிகளுக்கான உடைகள் மிக  எல்லை மீறிய வகையில் இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி ஆட்சேபித்தவர் புஷ்பவல்லியின் கணவர் அட்வகேட் ரங்காச்சாரி.  வாசன் எவ்வளவு எடுத்துச்சொல்லி மன்றாடியும் அவர் அதை ஏற்கத் தயாராகயில்லை. அதனால் புஷ்பவல்லி, சந்திரலேகா ஆகும் வாய்ப்பு  கைநழுவிப் போனது. அப்படி நடித்திருந்தால், ஒருவேளை தன் மகள் ரேகா போல அல்லது அவருக்கு முன்னதாக அகில இந்திய  நட்சத்திரமாக மாறி இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. 1948ல் தெலுங்கில் ‘விந்தியா ராணி’ என்றொரு படம். நாகேஸ்வர ராவ்,  எஸ்.வரலட்சுமி என நட்சத்திரப் பட்டியல் நீண்டாலும் டைட்டில் ரோல் விந்தியா ராணியாக நடித்தவர் புஷ்பவல்லியே. இப்படம்  ஆங்கிலத்திலும் ‘Queen of Vindhyas’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

தாய்மையின் பெருவெள்ளம்

‘சக்ரதாரி’ பாண்டுரங்கனின் மீது தீராத காதலும் பக்தியும் கொண்ட கோர கும்பரின் கதை. பல மொழிகளில் இப்படம் மீண்டும் மீண்டும்  தயாராகிக் கொண்டேயிருந்தது. மண்பாண்டங்கள் செய்து பிழைக்கும் குலாலர் கோர கும்பர் (சித்தூர் வி.நாகையா). அவரின் மனைவி  துளசிபாயாக புஷ்பவல்லி. கோர கும்பரின் பாண்டுரங்க பக்தி எந்த அளவுக்கு என்றால், பாண்டுரங்கனின் மகிமைகளைப் பாடித்  துதித்தவாறே களி பொங்க களிமண்ணை மிதிக்கும்போது, தன்னை நோக்கித் தவழ்ந்து வந்த குழந்தையைக் கூட கவனிக்காமல்  மண்ணோடு மண்ணாக மிதித்துக் கொல்லும் அளவுக்குக் கண்மூடித்தனமான பக்தி. வறுமையின் பொருட்டும், எதையும் கண்டுகொள்ளாமல்  பக்தியில் மட்டுமே மூழ்கியிருப்பதாலும் கணவனிடம் சிடுசிடுக்கும் சுபாவம் கொண்ட மனைவியாக மிக இயல்பாக நடித்திருப்பார்  புஷ்பவல்லி.

குழந்தையின் மரணத்துக்குப் பின் மனம் உடைந்து கதறினாலும், போலீஸ்காரர்களிடமிருந்து கணவனைக் காப்பாற்ற ஓட்டுக்கூரையைக் கீழே  சரித்துத் தள்ளி குழந்தை அதில் சிக்கி இறந்ததாகப் பொய் சொல்லும்போதும், பின்னர் குழந்தையை நினைத்து நினைத்து மனம் கலங்கிக்  கதறும்போதும் புஷ்பவல்லியின் நடிப்பு சற்றும் மிகையில்லாமல் மிக இயல்பாக இருக்கும். மெலோ டிராமாக்களும், அதீத நடிப்பும்  மலிந்திருந்த காலத்தில் அவ்வளவு இயல்பான நடிப்பை புஷ்பவல்லி  ‘சக்ரதாரி’ யில் வழங்கியிருப்பார். மண் பொம்மைகளைக் கூடையில்  அடுக்கி, விற்பதற்காக ஊருக்குள் கொண்டு செல்லும்போது பொம்மை வேண்டுமென்று ஓடி வரும் குழந்தைகளை எல்லாம் தான் பெற்ற  குழந்தையாக எண்ணி, கூடை நிறைய கொண்டு வந்த பொம்மைகளை இலவசமாகக் கொடுத்துக் கூடையைக் காலி செய்து விட்டு இறந்து  போன தன் குழந்தையை நினைத்துக் கலங்கும் காட்சியில் தாய்மையின் பரிதவிப்பையும் துடிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.
 
கவர்ச்சி நிறைந்த கதாநாயகியாக நடித்த காலமெல்லாம் முடிந்து அதன் பின் நடித்த படம் இது. புஷ்பவல்லியின் அசல் தங்கை சூர்யபிரபா  இப்படத்திலும் தங்கையாகவே நடித்திருப்பார். தங்கையையும் தன் கணவர் கோரகும்பருக்கு இரண்டாம் தாரமாக மணம் செய்வித்து  வைப்பவரும் புஷ்பவல்லியே. ஜெமினி கணேசன் இப்படத்தில் நடித்திருந்தாலும் கௌரவ வேடம் மாதிரிதான். பக்தர்களை அதி தீவிர  சோதனை களுக்கு உட்படுத்தி, இறுதியில் பலன்அளிக்கும் வழக்கமான கடவுள் பாணியில், பாண்டுரங்கனாகப் படத்தில் பங்கேற்றிருப்பார்.

காசாக மாறிக் கொட்டிய பெண்களின் கண்ணீர்

‘சம்சாரம்’ தெலுங்கில் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றிப்படம். ஆனால், சரியான அழுமூஞ்சிப் படம். பெண்களின் கண்ணீரைப் பிழிந்து  மூக்கைச் சிந்த வைத்த படம். வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய குடும்பம் பசி, பட்டினி என்று அரற்றல் தாங்காமல் குடும்பத்தலைவன்  (எம்.கே.ராதா) பெண்டாட்டி பிள்ளைகளைத் தவிக்க விட்டு ஓடிப் போகிறான். பிள்ளைகள் பிச்சையெடுத்துப் பிழைக்க சம்சாரமோ உலகின்  ஒட்டுமொத்தத் துயரங்களையும் ஒருசேர அனுபவிக்கிறாள். தெலுங்கில் இப்படத்தின் வெற்றியைப் பார்த்து மிரண்ட வாசன், ‘அம்மா  பசிக்குதே… தாயே பசிக்குதே….’ என்று தமிழிலும் பாட்டுப் பாடி பிள்ளைகளைத் தெருவில் பிச்சை எடுக்க வைத்தார். ‘சம்சாரம் சம்சாரம்  சகல தர்ம சாரம்’ என்று சம்சாரத்தின் பெருமைகளைப் பட்டியலிட்டது மற்றொரு பாடல்.

சம்சாரமான கதா நாயகி புஷ்பவல்லியே கையெழுத் திட்டுத் தமிழ்நாட்டுத் தாய்மார் களுக்கெல்லாம் கடிதம் எழுதியது போல், தபால்  கார்டுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. முகவரி உபயம்: தேர்தல் ஆணையத்திடம் பெற்ற வாக்காளர் பட்டியல். அந்த  அழைப்பை ஏற்றுப் பெண்களும் கூட்டம் கூட்டமாக வந்து காசு கொடுத்து, தியேட்டரில் ஒப்பாரி வைக்காத குறையாக அழுது விட்டுப்  போனார்கள். பெண்களின் கண்ணீரால் சம்பாதித்த அவ்வளவு பணமும் வாசனின் அடுத்த ‘இந்தி’ சம்சாரமாக மாறி வட நாட்டுப்  பெண்களையும் சேர்த்துக் கண்ணீரில் குளிப்பாட்டியது. இதே கதை மீண்டும் 70களில் ‘துணையிருப்பாள் மீனாட்சி’ என சிவகுமார், சுஜாதா  நடிக்க வெளியானது. ஆனால், அப்போதைய பெண்கள் தியேட்டரில் வந்து அழத் தயாராக இல்லாததால் படம் தோல்வி கண்டது. “சீட்டியுமில்லை, சில்க்குமில்லை. Publicity – விளம்பரம் – வியாபார தந்திரம். This is the age of Publicity. Be Wise and Advertise ன்னு  சும்மாவா சொன்னான்?” என்று ஒரு வசனம் ‘மிஸ்.மாலினி’ படத்தில் கதாநாயகன் சம்பத் பேசுவதாக இடம் பெறும். இந்த வசனம் அச்சு  அசலாக ஜெமினியின் தயாரிப்புகள் அனைத்துக்கும் அப்படியே பொருந்தும். அவ்வளவும் விளம்பரம் – வியாபார தந்திரம்.

முடிவுக்கு வந்தது ஜெமினி சாம்ராஜ்ய பங்கேற்பு

ஜெமினி கணேசனுடன் இணைந்து புஷ்பவல்லி பங்கேற்ற மற்றோர் படம் ‘மூன்று பிள்ளைகள்’. இது ‘முக்குரு கொடுக்குலு’ என  தெலுங்கிலும் வெளியானது. 1964ல் ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் சிவாஜி கணேசனுக்குத் தாயாக வேடம் கட்டினார். இந்தப் படத்தின்  நாயகி சாவித்திரி. புஷ்பவல்லி யாரைக் கார் ஏற்றிக் கொல்ல முயன்றார் என்றெல்லாம் அப்போது திரையுலகில் பேசப்பட்டதோ, அந்த  சாவித்திரி யுடன் இணைந்தே இப்படத்தில் நடித்தார் புஷ்பவல்லி. இது தவிர, 1965ல் வெளியான ‘வாழ்க்கைப்படகு’ திரைப்படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகன், தேவிகா கதாநாயகி. கதையோட்டத்துக்கு ஏற்ப,  படத்தின் பிற்பாதியில் தேவிகா கணவனைப் பிரிந்து சென்று அடைக்கலமாகும் ஒரு வசதி படைத்த இஸ்லாமிய ஜமீன் குடும்பத்துப்  பெண்ணாக, பாலையாவின் மனைவியாக புஷ்பவல்லி நடித்திருப்பார். ஜெமினி நிறுவனத்தில் இவர் நடித்த இறுதிப் படமும் இதுதான்.  1967ல் ‘தாயின் மேல் ஆணை’ என்ற படத்துக்குப் பின் அவர் திரைப்படங்களில் நடிப்பதை ஏறக்குறைய நிறுத்திக் கொண்டு விட்டார்.
 
மகளின் திரையுலகப் பிரவேசம்


எல்லா நடிகைகளையும் போலவே ‘மலேயா மாமியார்’ என்று சொந்தமாக ஒரு படம் எடுத்துக் கையைச் சுட்டுக் கொண்டார். கடன்  கழுத்துக்கு மேல் போனது. அதை அடைப்பதற்காகவே மகள் பானு ரேகாவை திரைப்படத்தில் அறிமுகப்படுத்த நினைத்தார். 1966லேயே  பேபி ரேகாவாக  ‘ரங்குல ராட்னம்’ தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி, தாயும் மகளும் இணைந்தே அந்தப் படத்தில் நடித்தார்கள். 1970ல்  ‘வியட்நாம் வீடு’ படத்தில் சிவாஜியின் மகளாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வெளியான நிலையில் அந்த வாய்ப்பும் தட்டிப் போனது.  தமிழ்த் திரைப்பட உலகம் ரேகாவை நடிகையாக ஏற்கக் கொடுத்து வைக்கவில்லை. தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எவரும் தன்  மகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதில் புஷ்பவல்லிக்கும் தீராத வருத்தம் இருந்தது. ஆனால், இந்தித் திரையுலகம் ரேகாவை  வாரியணைத்து உச்சி முகர்ந்து தங்கள் செல்லப்பெண்ணாக ஏற்றுக்கொண்டதன் மூலம் அவரும் அகில இந்திய நட்சத்திரமானார்.  

ஜெமினி கணேசனுடன் கொண்ட காதல்…

ஜெமினி ஸ்டூடியோவில் காஸ்டிங் அசிஸ்டென்ட்டாக, புஷ்பவல்லி கதாநாயகியாக நடித்த படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்  கொண்டிருந்த இளைஞர் கணேசனும், கதாநாயகியாகப் புகழ் பெற்றிருந்த புஷ்பவல்லியும் வாழ்க்கையில் ஒன்றிணைந்தார்கள் என்பதே  ஆச்சரியம்தான். காதலுக்குக் கண்ணில்லை என்பது உண்மைதான் போலிருக்கிறது. 26 வயதில் முதல் திருமணம் தோல்வியுற்று மகனுடன்,  தனித்து நின்ற ஒரு பெண்ணுக்கு, சாய்ந்து கொள்ளக் கிடைக்கும் தோள்கள் எல்லாம் ஆறுதலளிப்பவையாக மட்டுமே எப்போதும்  இருப்பதில்லை என்பதற்கு இவர்கள் இருவரின் வாழ்க்கையே நல்ல உதாரணம். திருமண அங்கீகாரம் இன்றி ஆணும் பெண்ணும் இணைந்து  வாழ்தல் சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி விட்ட இக்காலத்திலும், ‘லிவிங் டு கெதர்’ என்ற இந்த அமைப்பு,  சமூகரீதியாக முழுமையாக ஏற்கப்படவில்லை. ஆனால், அந்தக் காலத்திலேயே அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் புஷ்பவல்லி  தன் காதல் இணையாக கணேசனைத் தேர்ந்து கொண்டு விட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் ரேகா என்ற பானுரேகா, ராதா என்ற இரு  பெண் குழந்தைகளையும் அதன் பலனாகப் பெற்றார். அதே வேகத்தில் இருவரும் பிரிந்தும் போனார்கள். ரேகாவின் தங்கை ராதாவும்  ஒருசில படங்களில் நடித்தார். ஆனால், நடிப்பைத் தொழிலாகத் தொடரவில்லை. திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில்  ஆகிவிட்டார். புஷ்பவல்லியின் மகன் பாப்ஜி சில திரைப்படங்களில் தலைகாட்டினார்.

தோல்வி காணா கதாநாயக பிம்பம்

கதாநாயக பிம்பத்தின் வெற்றியையும் அதன் வீச்சையும் பற்றி இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஜெமினி கணேசன் என்ற நாயக  பிம்பம் 70களின் இறுதிவரை தொடர்ந்தது. அதன் பின்னும் இடைவெளி விட்டு ‘உன்னால் முடியும் தம்பி’, ‘மேட்டுக்குடி’  தொடங்கி   ‘அவ்வை சண்முகி’ யில் பெண் வேடமிட்ட கமலின் மீது காதல் கணை வீசும் ‘கிழட்டுக் காதல் மன்னனாக’ வும் ஆண்டுகள் பல  கடந்தாலும் அவரால் தொடர முடிந்தது. அசல் வாழ்க்கையிலும் 80களைக் கடந்துவிட்ட  இறுதிக் காலத்திலும் ‘வாழ்க்கைத்துணை’ என்னும்  பெயரில் ஒரு இளம்பெண் வரை அவசியமானதாகிறது. ஆணாகப் பிறந்ததாலேயே அதை இந்தச் சமூகத்தின் பெரும்பான்மையும் ஏற்கிறது. எல்லாவற்றிலும் ஆகப் பெரிய வருத்தம் ஒன்று உண்டென்றால், தமிழ்த் திரையுலக நாயகியர் பற்றி ஆய்வு செய்ய நேரும்போதும்,  தகவல்கள் திரட்டும்போதும் அவர்களுடைய தனித் திறமைகள், திரையுலகில் அவர்களது சாதனைகள் பற்றி அதிகம் குறிப்பிடப்படாமல்,  தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த தகவல்கள் மட்டுமே, அதிலும் மலிவான கொச்சை மொழியில் ஏராளமாக இறைந்து கிடக்கின்றன.  புஷ்பவல்லியின் நிலையும் அதுதான்.

30களில் குட்டி நட்சத்திரமாகத் தொடங்கிய புஷ்பவல்லியின் திரைப் பயணம், 50களிலேயே நாயகியாக நடிப்பது முற்றுப் பெற்றது.  அதற்குப் பின் ஒரு சில படங்களில் நடுத்தர வயதுப் பாத்திரம், பின் முற்றிலும் மறந்து போன நடிகையாகி விட்டார். செய்திகளிலும் கூட  ஜெமினி கணேசனின் ‘இரண்டாவது மனைவி’ என்றோ, தாய் புஷ்பவல்லியையும் தாண்டிப் புகழ் பெற்ற, இந்தியா முழுமையும் அறியப்  பெற்ற, நடிகை ரேகாவின் தாய் என்றோதான் குறிப்பிடப்பட்டார். புஷ்பவல்லி இருக்கிறாரா இல்லையா என்பது கூட வெளியுலகுக்கு  அதிகம் தெரியாமல் வாழ்ந்த அவர், வாழ்க்கையில் பட்ட மனவேதனைகள், உளைச்சல்களின் பலனாகக் கடும் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டு  1991ல் மறைந்து போனார். புஷ்பவல்லி என்ற பெயருக்கு மலர்க்கொடி என்று பொருள். புயலில் சிக்கி அலைக்கழிக்கப்பட்ட  மலர்க்கொடியாகத்தான் அவர் வாழ்க்கையும் அமைந்து போனது.  

(ரசிப்போம்!)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dell_aacccc

  கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

 • 20-04-2021

  20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • spain-school-beach

  ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

 • 19-04-2021

  19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2021

  18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்