எட்டயபுரம் அருகே புதிதாக கல்குவாரி அமைப்பதா? கருத்து கேட்பு கூட்டத்தில் கூடுதல் கலெக்டரை மக்கள் முற்றுகை
11/25/2020 1:32:36 AM
எட்டயபுரம், நவ.25: எட்டயபுரம் அருகே மீனாட்சிபுரம் அடுத்த மலைப்பட்டி கிராமம் அருகே புதிதாக 400 ஏக்கரில் கல் மற்றும் சரள் குவாரி அமைக்க தனியார் நிறுவனம் அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இதையடுத்து தனியார் குவாரி உரிமையாளர்கள் சார்பில் குவாரி அமைவிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள், குவாரியால் கிராமங்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் 20 பேருக்கு வேலைவாய்ப்பு, சுயஉதவி குழுக்கள் மூலம் சுயவேலைவாய்ப்பு, மேலும் சமூக கலாசாரம் சம்மந்தமான எந்த விதமான பாதிப்பும் இல்லை என்கின்ற உத்திரவாதம் குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கல்குவாரி அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எட்டயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட உதவி கலெக்டர் விஷ்ணுராம் தலைமையில் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நேற்று காலை நடந்தது.
இதில் மலைப்பட்டி, மீனாட்சிபுரம், சின்னமலைக்குன்று, சாத்தூரப்பன்நாயக்கன்பட்டி, திப்பனூத்து, கடலையூர், குமரெட்டியாபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் கூடுதல் கலெக்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘ ஏற்கனவே மலைப்பட்டி, நாவலக்கம்பட்டி, மீனாட்சிபுரம் கிராமத்தில் 20 ஆண்டுகள் அனுமதி பெற்ற 3 கல்குவாரிகள் உள்ளன மேலும் இதற்கு முன் இருந்த மூடப்பட்ட குவாரிகளில் கல் எடுக்கப்பட்ட குழி பல அடி ஆழத்தில் மூடப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இந்த குழிகளில் பள்ளி மாணவர்கள் தவறி விழுந்து இறந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் கிராமங்களை சுற்றி கல்குவாரிகள் இருப்பதால் மானாவாரி நிலங்கள் முழுதும் கல்தூசி படிந்து விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்களாக மாறிவிட்டது. அப்பகுதியில் வளரும் புற்கள் மற்றும் செடிகளில் கல்தூசி படிந்து விடுவதால் அதனை சாப்பிடும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் குவாரியில் கல் எடுப்பதற்காக கிணற்றை விட ஆழமான ராட்சத பள்ளத்தை ஏற்படுத்துவதால் நீர்மட்டம் அந்த பள்ளத்திற்கே சென்று விடுகிறது. எனவே கிராமங்களில் குடிநீர் தேவை கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் கிராமச்சாலைகளில் அதிகமான கல்பாரத்தை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளால் சாலை மிகவும் சேதமடைந்து விடுகின்றன.
இதனால் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் இந்த பகுதியில் கல்குவாரி அமைக்கபட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ஊரைக்காலி செய்யவேண்டிய நிலை ஏற்படும் தனியார் குவாரி நிர்வாகம் தங்கள் லாபத்தை குறிக்கோளாக வைத்து இந்த குவாரியை ஆரம்பிக்கின்றனர். எனவே, அனைவரையும் பாதிக்கும் இந்த குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது’’ என்றனர். இதற்குப் பதிலளித்த கூடுதல் கலெக்டர் விஷ்ணுசந்திரன் ‘இதுகுறித்த கருத்து அறிக்கையாக அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சத்தியராஜ், உதவிப் பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். இதையொட்டி எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் கலா, எஸ்ஐ பொன்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புரியாத புதிர் இதனிடையே மலைப்பட்டியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் கூறுகையில், ‘‘எங்கள் ஊரில் துவக்கத்தில் 40 வீடுகள் இருந்தன. 120 பேர் வாக்காளர்கள் இருந்தோம். இந்த பகுதியில் கல்குவாரிகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து பல வீடுகள் அதிர்ச்சியில் இடிந்து போனது. மீண்டும் அவற்றை பழுதுபார்க்க முடியால் பலர் ஊரை காலி செய்து சென்றுவிட்டனர். தற்போது 10 வீடுகள் தான் உள்ளன. மீண்டும் இங்கு குவாரி ஆரம்பித்தால் இந்த கிராமமே இல்லாமல் போகும். மேலும் தற்போது குவாரி அமையவிருக்கும் பகுதியல் ஆரம்பகாலத்தில் மதுரையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் 60 அடி அகலம் கொண்ட ராணி மங்கமாள் சாலை இருந்தது. தற்போது அது மாயமாகிவிட்டது. சந்தைகளுக்கு மாட்டுவண்டியில் பயணம் செய்ய அமைக்கப்பட்ட சாலை மாயமானது புரியாத புதிராகும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
கோவில்பட்டியில் பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்
உடன்குடியில் பொங்கல் கோலப்போட்டி கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்
தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 14,81,799 வாக்காளர்கள் இறுதிபட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
ஓட்டப்பிடாரம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்