SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரக்காணம் அருகே உடல் தோண்டியெடுப்பு சிறுவனை கொலை செய்தது ஏன்? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

10/23/2020 7:27:24 AM

மரக்காணம், அக். 23: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நொச்சிக்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தேவன்ராஜ்(13). இவன் எட்டாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தான். இந்நிலையில் கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்று உள்ளான். ஆனால் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியான பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை கோவிந்தராஜ் மரக்காணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர்.
மேலும் தேவன்ராஜ் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது சிறுவன் மாயமான அன்று அதே கிராமத்தில் உள்ள கலைமணி மகன் அபினேஷ் என்பவன் கடைசியாக பேசியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் நொச்சிக்குப்பம் மீனவர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசி.டிவி கேமராவை ஆய்வு செய்தபோது தேவன்ராஜ் மாயமான சமயத்தில் அபினேஷ்வுடன் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அபினேஷை பிடித்துவந்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரனை நடத்தினர். விசாரணையில் தேவன்ராஜை அபினேஷ் அடித்துகொலை செய்ததை ஒப்புக்கொண்டான். மேலும் நொச்சிக்குப்பம் சுடுகாடு அருகில் உள்ள அடர்ந்த பகுதியில் உடலை புதைத்து வைத்துள்ளதையும் கூறியுள்ளான். இதனைத்தொடர்ந்து மரக்காணம் வட்டாட்சியர் உஷா முன்னிலையில் போலீசார் நேற்று சிறுவனின் உடலை தோண்டி எடுத்தனர்.

பின்னர் கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை மருத்துவர் உதித் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிறுவனின் உடலை அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுவனின் உடலில் இருந்த முக்கிய பாகங்களை சேகரித்து மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். இதுபோல் விழுப்புரத்தில் இருந்து வந்த தடைய அறிவியல் நிபுணர் ராஜி சம்பவ இடம் மற்றும் உடலில் இருந்த தடயங்களை சேகரித்துச் சென்றார். தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து சிறுவனின் உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக்கொண்ட சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.  

இந்த கொலைக்கான காரணம் குறித்து கைதான அபினேஷ்(20) போலீசாரிடம் கூறிய வாக்குமூலம்:  கடந்த இரண்டு வாரத்திற்கு முன் என் தந்தை கலைமணியும், தேவன்ராஜ் தந்தை கோவிந்தராஜியும் சீட்டு ஆடினர். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக தேவன்ராஜியின் அண்ணன் எனது தந்தையை அடித்துவிட்டான். இதனால் அவர்களின் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்துடன் தேவன்ராஜை விளையாட அழைத்துச் சென்று அவன் அணிந்து இருந்த சட்டையால் அவன் கழுத்தை இருக்கி கொலை செய்து ஊருக்கு ஒதுக்குபுறமாக யாருக்கும் சந்தேகம் வராதபடி உடலை புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் இருந்தேன்.

ஆனால் போலீசார் விசாரணை செய்து என்னை கைது செய்துவிட்டனர் என்று கூறியுள்ளான்.  ஆனால் தேவன்ராஜ் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த இடத்தில் கடந்த ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சிறுவனும் மர்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் கிடந்த உடலை போலீசார் கைப்பற்றி சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடக்கடி நடக்கின்றது. எனவே இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்