SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழுப்புரத்தில் துணிகரம் டாக்டர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

9/30/2020 7:34:08 AM

விழுப்புரம், செப். 30: விழுப்புரத்தில் டாக்டர் வீட்டில் லாக்கரை உடைத்து 60 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் கேகே நகர், அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் ராமசேது(65). கே.கே.ரோட்டில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன், மகள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் மனைவி லட்சுமியுடன் விழுப்புரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே, பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாம். அதன்படி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராமசேது தனது மனைவியுடன் பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டை பார்த்துக்கொள்வதற்காக, கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தனது நண்பரிடம் வீட்டு சாவியை கொடுத்துள்ளாராம்.

அவர், வாரம் இருமுறை வீட்டிற்கு வந்து பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்துள்ளாராம். இதனிடையே, நேற்று காலை கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அந்த நபர், ராமசேது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக ஊரில் உள்ள, ராமசேதுவை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் டிஎஸ்பி நல்லசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ராமசேது வெளியூர் சென்றிருப்பதையும், பல நாட்களாக வீடு பூட்டியே கிடந்ததையும் நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது.

இரண்டு படுக்கை அறையிலும் உள்ள பீரோவை திறந்து பார்த்த கொள்ளையர்கள், கட்டிலின் கீழ் பகுதியில் தரையில் புதைக்கப்பட்ட லாக்கரை கண்டுபிடித்து, அதனை உடைத்து அதிலிருந்த 60 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மோப்பநாய் சாயினா வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.  அப்போது, மோப்ப நாய் சாயினா, கே.கே நகரிலிருந்து புதிய பேருந்துநிலையம், பெருந்திட்டவளாகம் வரை சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்காமல் திரும்பியது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். விழுப்புரத்தில் டாக்டர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • delhipollution20

  கொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி!: மக்கள் உச்சகட்ட பீதி..!!

 • catroot20

  2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

 • chennairain20

  காலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை!: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

 • kolu20

  நவராத்திரி கொண்டாட்டம்!: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..!!

 • upschool20

  உ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்