SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூரில் ரெஸ்டாரென்ட் என்ற பெயரில் முறைகேடாக இயங்கும் ‘பார்’, சூதாட்ட கிளப்

8/22/2020 5:09:14 AM

திருப்பூர்,ஆக.22: திருப்பூரில் ‘ரெஸ்டாரென்ட்’ என்ற பெயரில் முறைகேடாக மதுபான கூடங்களும், சூதாட்ட கிளப்புகளும் அதிகளவு இயங்கி வருகின்றன. திருப்பூர் தொழில் வளர்ச்சியில் சிறப்பாக இருந்தாலும், வேதனையளிக்கும் வகையில் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நகரமாக உள்ளது. மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, திருப்பூரில் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளும், மது விற்பனையும் அதிகளவு காணப்படுகிறது. காலை முதல் மாலை வரை மதுக்கடைகளின் பார்கள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில் தற்போது, முறைகேடாக செயல்படும் பார்கள், சூதாட்ட கிளப்களும் முளைத்துள்ளன. இந்த ‘ரெஸ்டாரென்ட்’களில் மது விற்பனை, மது அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, சூதாட்டமும் நடக்கிறது. புறநகர் பகுதிகள், மாநில, தேசிய நெடுஞ்சாலை ஓரங்கள், போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடுகள் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக இவை செயல்பட்டு வருகின்றன. அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விற்பனை, பார்களை தவிர மற்ற பகுதிகளில் மது அருந்த தடை ஆகிய விதிமுறைகள் இருக்கும்போது விதிமுறைகளை மீறி மது விற்பனை, பார், சூதாட்ட கிளப்கள் நடந்து வருகின்றன. ‘டாஸ்மாக்’ பார்களில் கூட்ட நெரிசல், உரிய வசதி இல்லாத நிலையில், தனித்தனி அறைகள், குடிசைகள், டேபிள்கள் என இந்த ‘ரெஸ்டாரென்ட்’கள் களைகட்டுகின்றன.

எனவே காற்றோட்டமாக அமர்ந்து குடிக்கவும், பாஸ்புட் உணவுக்காகவும், பயம் இல்லாமல் குடிக்கவும் இதுபோன்ற ‘ரெஸ்டாரென்ட்’களை ‘குடி’மகன்கள் தேர்வு செய்கின்றனர். இவ்வாறு விதிமுறை மீறி இயங்கும் ‘ரெஸ்டாரென்ட்’களில், முறைகேடாக மது விற்பனை, மது அருந்த அனுமதிக்கப்படுகிறது. உணவு பொருட்கள் விற்பனையும் நடக்கிறது. இதேபோல், உடல் நலத்திற்கான விளையாட்டு கிளப்கள் என அனுமதி பெற்று, முறைகேடாக சூதாட்ட கிளப்களாக மாற்றப்படுகின்றன. இங்கும் மது விற்பனை படுஜோராக நடக்கிறது.

சூதாட்டத்தில் தினமும் லட்சக்கணக்கில் பணம் புழங்குகிறது. இவ்வாறு அனுமதியில்லாமல் திருப்பூர் நகரம், புறநகர் பகுதியில் 30க்கும் மேற்பட்ட ‘ரெஸ்டாரென்ட்’கள், சூதாட்ட கிளப்கள் இயங்கி வருகின்றன. சில இடங்களில் குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், கோவில்கள் மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அருகிலேயே இவை இயங்குகின்றன. இதற்காக உள்ளூர் போலீசார், அப்பகுதி ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு குறிப்பிட்ட தொகை மாதம்தோறும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதையே மிகப்பெரிய அனுமதியாக கருதி, முறைகேடாக தற்போது மேலும் பல இடங்களில் புதிது, புதிதாக இந்த மையங்கள் முளைத்து வருகின்றன.

முறைகேடாக இயங்கும் இங்கு போலி மது வகைகளும் விற்கப்படுகின்றன. எஸ்.பி., தனிப்படையினர் சில இடங்களில் திடீர் ‘ரெய்டு’ நடத்தி பிடித்தாலும், ஆளும் கட்சியினர் ஆசியுடனும், உள்ளூர் போலீசார் ஆசியுடனும் மீண்டும் வழக்கம்போல் இவை இயங்கி வருகின்றன. சட்டத்துக்கு புறம்பாக இயங்கும் ‘ரெஸ்டாரென்ட்’ மற்றும் சூதாட்ட கிளப்கள் குறித்து, கமிஷனர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற மையங்கள் நடத்துபவர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும். இவற்றில் நேரடியாக திடீர் ஆய்வு நடத்துவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அப்பகுதி காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • delhipollution20

  கொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி!: மக்கள் உச்சகட்ட பீதி..!!

 • catroot20

  2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

 • chennairain20

  காலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை!: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

 • kolu20

  நவராத்திரி கொண்டாட்டம்!: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..!!

 • upschool20

  உ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்