SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் அவலம்

2/26/2020 5:31:48 AM

* சரியான செயல் திட்டம் இல்லாததே காரணம்
* தொழிற்சங்க நிர்வாகிகள் சரமாரி குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: தமிழகத்தின் பழமையான அனல் மின் நிலையங்களில் எண்ணூர் அனல் மின் நிலையமும் ஒன்று. சுமார் 237 ஏக்கர் பரப்பளவில் 1970ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அனல் மின் நிலையத்தில் 110 மெகாவாட் தயாரிக்கும் 3 அலகுகள், 60 மெகாவாட் தயாரிக்கும் 2 அலகுகள் மூலம்  சுமார் 450 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு இங்குள்ள அலகுகள் பழுதாக தொடங்கியது. இதை சரிசெய்ய மின்வாரியம் பல கோடி ரூபாய் செலவு செய்தது. ஆனாலும் முழுமையான மின் உற்பத்தி கிடைக்காத நிலை ஏற்பட்டது.  ஒவ்வொரு அலகும் படிப்படியாக செயல் இழந்ததால் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் எஞ்சிய அலகுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு மூடப்பட்டது. இதனால், இங்கு பணிபுரிந்த சுமார் 700 நிரந்தர தொழிலாளர்களும், 300 ஒப்பந்த தொழிலாளர்களும், பல துணை ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து நிரந்தர தொழிலாளர்கள் வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனிடையே தமிழகத்தில் நிலவி வந்த மின் பற்றாக்குறையை போக்க, எண்ணூர் அனல் மின் நிலையத்தை புதிய தொழில்நுட்பங்களுடன் விரிவாக்கம் செய்ய கடந்த 2009ம் ஆண்டு, திமுக ஆட்சியின் போது திட்டமிடப்பட்டது. இந்த அனல்மின் நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் எண்ணூர் கழிமுகம், கொசஸ்தலை ஆறு மற்றும்
வங்காள விரிகுடா மத்தியில் உள்ளதால் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுவதால் சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பிக்கபட்டது.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை குறிப்பிட்டு 2019ம் ஆண்டுக்குள் இந்த புதிய அனல் மின் நிலையம்  செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மின் பற்றாக்குறையை கட்டுப்படுத்த இந்த எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி அதிக மின் திறன், அதிக தொழில்நுட்பம் அடிப்படையில் ஒரே அலகில் 660 மெகாவாட் உற்பத்தி செய்யும் அதிநவீன மின் நிலையம் அமைக்க 3,960 கோடி மதிப்பீட்டில் சிறப்பு திட்டம் தயாரானது.

இதற்காக ஏற்கனவே உள்ள 237 ஏக்கர் நிலத்தில் 110 ஏக்கர் நிலத்தை புதிய விரிவாக்க திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு 7 இடங்களில் மண் பரிசோதனை மற்றும் நீர் வள பரிசோதனையும் செய்யப்பட்டு, திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உலகளாவிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அனல் மின் நிலையம் அமைப்பதில் பிரசித்தி பெற்ற சீன நிறுவனங்கள், பெல், எல்&டி, ரிலையன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால் ஹைதராபாதைச் சேர்ந்த லான்கோ இன்பிராடெக் லிமிடெட் என்ற நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றது.  இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எண்ணூரில் புதிய அனல் மின் நிலைய விரிவாக்கம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். தொழில்நுட்ப கட்டமைப்பான பி.டி.ஜி (பாய்லர் டர்பன் ஜெனரேட்டர்) மற்றும் இயந்திரங்களை பாதுகாக்கும் கட்டுமானங்களான பி.ஓ.பி (பேலன்ஸ் ஆஃப் பிளான்ட்) என இருவகையாக பிரித்து பணிகள் நடைபெற்றது.
இதற்காக பல துணை ஒப்பந்ததாரர்கள், நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். தொழில்நுட்ப இயந்திரங்கள் அமைப்புக்கான அடித்தளம், கட்டிடங்கள் மற்றும் 275 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட புகைபோக்கி,  தீயணைப்பு நிலையம் மற்றும் மின் உற்பத்திக்கு குளிர்ந்த நீரை சேமிக்க பயன்படும் இன்டெக் என கூடிய கடல் நீர் உறிஞ்சி தொட்டியை அன்னை சிவகாமி நகர் கடலோரத்தில் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

ஆனால், அடுத்த இரண்டாவது ஆண்டில் இந்த கட்டுமான பணி பல்வேறு காரணங்களால் தொய்வு ஏற்பட்டது. இங்கு துணை ஒப்பந்தம் எடுத்திருந்த ஒப்பந்ததாரர்களுக்கு அதற்கான தொகை வழங்குவது காலதாமதம் ஆனதால் இங்கு பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் படிப்படியாக எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணியிலிருந்து வெளியேறினர். கிடப்பில் போடப்பட்ட பணிகளை மீண்டும் துவக்க மின் துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்துடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் 14.4.2018க்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட விரிவாக்க பணிகள் 30% பணியிலேயே முற்றிலும் முடங்கியது. இவ்வாறு திட்டப்பணி முடங்கியதற்கு அரசு தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறினாலும், விரிவாக்க திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர் தகுதியானவர் அல்ல என்று எதிர்க்கட்சிகளால் பேசப்பட்டது.

இதையடுத்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் பல்வேறு பொதுநல சங்கங்களும் இந்த திட்டம் முடங்கினால் மின் பற்றாக்குறை மற்றும் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதால் மின்துறை துறைக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறி போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஏற்கனவே கொடுக்கப்பட்ட லான்கோ இன்பிராடெக் லிமிடெட் ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்து அறிவிப்பாணை வெளியிட்டது. பின்னர் கடந்த 2019 டிசம்பர் மாதம் 4442.75 கோடிக்கு பி.ஜி.ஆர்.எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு மறு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்தப்பணி பணி உத்தரவு வழங்கிய தினத்திலிருந்து 36 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஆனாலும் டெண்டர் எடுத்து மூன்று மாதங்களாகியும் பி.ஜி.ஆர்.எனர்ஜி நிறுவனம் இதுவரை எந்த பணியையும் துவங்கவில்லை. எனவே இந்த நிறுவனமானது திட்டமிட்டபடி பணியை முடிப்பார்களா என் கேள்வி எழுந்துள்ளது.

மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள்  கூறுகையில், “மின் உற்பத்தி இயந்திரங்களை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு  மாற்ற வேண்டும் என்பது விதி. ஆனால் எண்ணூர் அனல் மின் நிலைய 5 அலகுகளில்  செயல்பட்ட இயந்திரங்களும், உதிரி பாகங்களும் சரியான நேரத்திற்கு  மாற்றப்படாததால், அதன் சக்திக்கு மீறி இயக்கப்பட்டதால் முற்றிலும்  செயலிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் 2011 முதல் 17ம் ஆண்டு வரை பராமரிப்பு செலவு என்ற பெயரில் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதோடு, முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.  இதேபோல் இதன் விரிவாக்க திட்டத்திலும் தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு  கொடுக்காமல் உள்நோக்கத்துடன் வேண்டியவர்களுக்கு கொடுத்ததால் தற்போது அந்த  திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியாமல் போனதோடு பல கோடி  ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. அரசின் சரியான செயல்திட்டம்  இல்லாததே விரிவாக்கத் திட்டம் முடங்கியதற்கு முக்கிய காரணம்.

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க  திட்டம் செயல்படுத்தும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மூலதன செலவாக 478 கோடியும், ஆண்டுதோறும் 48 கோடியும் செலவிட திட்டமிடப்பட்டு அதற்கான  நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுமட்டுமன்றி சென்னையில் உள்ள மெட்ராஸ்  சமூகப்பணி பள்ளியின் ஆய்வு அறிக்கையின்படி எண்ணூர் சுற்றுப்பகுதியில்  வசிக்கும் பொதுமக்களுக்கு சிஎஸ்ஆர் திட்டத்தின்படி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு பல கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேற்கண்ட  இந்த நிதிகள் செலவு விவரங்கள் என்ன? அவ்வாறு செய்யப்பட்டிருப்பின் அதற்கான  பயன்பாடுகள் மக்களுக்கு கிடைத்துள்ளதா என்றால் அது கேள்விக்குறியாகவே  உள்ளது,’’ என்றனர்.

வைப்பு தொகை தாமதம்

வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளை பி.எச்.எல் என்ற நிறுவனத்துடன் இணைந்து பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனம் செய்து வருகிறது. அந்த தகுதி அடிப்படையில் தற்போது தமிழக அரசு எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்ட பணிக்கான மறு ஒப்பந்தத்தை பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்காக பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனம் ₹1200 கோடி வங்கி வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இந்த தொகையை செலுத்துவதற்கு காலதாமதம் ஆவதால்  மறு ஒப்பந்தம் எடுத்தும் இதுவரை பணியை துவக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிபாரிசு

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்கு நிதி நெருக்கடி இல்லாத, அனுபவமிக்க பல நிறுவனங்கள் போட்டியிட்டபோது ஜெயலலிதாவிற்கு உதவிகரமாக இருந்த அப்போதைய தமிழக அரசின் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் தலையீட்டின் காரணமாக அவருக்கு நெருக்கமான ஹைதராபாத்தைச் சேர்ந்த மதுசூதன்ராவ் என்பவரின் இன்பிராடெக் லிமிடெட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் கடன் சுமையால் பணியை தொடர முடியவில்லை, என கூறப்படுகிறது.

உள்ளூர் மக்கள் புறக்கணிப்பு

எந்த ஒரு திட்டமும் விரிவாக்கம் செய்யப்படும்போது அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் வடசென்னையில் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணி, மணலி சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப்பணி போன்ற மத்திய, மாநில அரசுகளில் விரிவாக்க திட்டங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் புறக்கணிக்கப்படுகிறது. லாப நோக்கத்தைக் கருத்தில் கொண்டு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவது வேதனைக்குரியது. இதற்கு உள்ளூரைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உடந்தையாக உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்