செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பெண் உள்பட 2 பேர் படுகாயம்
12/11/2019 12:17:48 AM
செங்கல்பட்டு, டிச. 11: செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு ராணுவம், ரயில்வே துறை, தமிழக காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியின்போது பயன்படுத்திய வெடிபொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் அனுமந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கும். இதையொட்டி கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை துப்பாக்கி பயிற்சி நடந்தது.
இந்நிலையில், அனுமந்தபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (47). நேற்று மதியம் இவர், புளியந்தோப்பு தெரு வழியாக பயிற்சி மையத்தில் வெடிக்காத ஒரு வெடி பொருளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பைக்கில் இருந்து கீழே விழுந்த வெடி பொருள் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. இதில் ராமகிருஷ்ணனின், வலது காலில் படுகாயம் ஏற்பட்டு, அவர் அலறி துடித்து கீழே விழுந்தார். வெடி வெடித்ததில் அங்குள்ள வீட்டின் வாசலில் துணி சலவை செய்து கொண்டிருந்த கோவிந்தம்மாள் (60) என்பவருக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதில் அவர், மயக்கமடைந்தார். அதேநேரத்தில், அவ்வழியாகச் சென்ற பசுமாடு படுகாயமடைந்தது. அங்கிருந்த ஓட்டு வீடு அதிர்வில் சேதமானது. இரும்பு மின் கம்பத்தில் பெரிய துளை விழுந்தது. சிமென்ட் சாலை விரிசல் அடைந்தது.
தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடித்த பொருள் என்னவென்று விசாரிக்கின்றனர்.
இதைதொடர்ந்து எஸ்பி கண்ணன், திருப்போரூர் தாசில்தார் செந்தில்குமார், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடித்த பொருளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தம்மாளுக்கு மார்பு பகுதியில் பெரிய துளை விழுந்துள்ளது. அந்த வெடி மருந்து உள்ளே சென்று உயிர் பாதிப்பு ஏற்படலாம். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளோம். ராமகிருஷ்ணனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூறுகையில், நேற்று மாலை வயலுக்கு செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தேன். திடீரென வெடிசத்தம் கேட்டது. அதில் எனக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு எனக்கு மயக்கம் ஏற்பட்டது. என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்றார். கடந்த 3 மாதத்துக்கு மானாம்பதி பகுதியில் வெடிகுண்டு வெடித்து 2 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். வெடிக்காத அதிபயங்கர ராக்கெட் லாஞ்சரை, வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன ரகம் என தெரியவில்லை
எஸ்பி கண்ணன் கூறுகையில், அனுமந்தபுரம் துப்பாக்கி பயிற்சி மையத்தில் வெடிக்காத பொருட்களை பைக்கில் ராமகிருஷ்ணன் எடுத்து சென்றார். அவர், சிமென்ட் சாலையில் சென்றபோது, அந்த பொருள் விழுந்தவுடன் வெடித்துள்ளது என தெரியவந்துள்ளது. அது, எந்த ரக வெடிப்பொருள் என தெரியவில்லை. இது சம்பந்தமாக வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். துப்பாக்கி சுடுகளத்தை சுற்றி கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மர்ம பொருள் ஏதேனும் இருந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டில் வைத்திருந்தால் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
அடிக்கடி விபத்து
20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அடிக்கடி துப்பாக்கி பயிற்சி மையத்தில் இருந்து ராக்ெகட் லான்சர்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திலும், வீடுகளிலும் விழுந்து எரிவது வழக்கம். இதுபோல் விவசாய நிலத்தில் விழுந்ததில் மாடு மேய்த்து கொண்டிருந்த 2 பேர் காயமடைந்தனர். ஒருமுறை அங்கன்வாடி மையத்தில் விழுந்தது. அப்போது அங்கு குழந்தைகள் இல்லாததால் உயிர் சேதம் இல்லை.
அஞ்சூர் பகுதியில் தொகுப்பு வீட்டில் விழுந்து கட்டிடம் சேதமானது. கடந்த 5 மாதத்துக்கு முன் வெடிக்கப்படாத ஏராளமான ராக்கெட் லாஞ்சர்களை கண்டெடுத்த போலீசார், அதனை மீனம்பாக்கம் ராணுவ தளத்தில் ஒப்படைத்தனர். இந்த பகுதியில் இந்த பயிற்சி மையம் வேண்டாம் என பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. இரவு நேரங்களில் பயிற்சியின்போது அதிக சத்தம் கேட்பதால் எந்நேரம் உயிர்போகுமோ என்ற பயத்தில் வசித்து வருகிறோம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழக அரசின் அறிவுறுத்தல்படி பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன: காஞ்சி கலெக்டர் பேட்டி
மதுராந்தகம் அருகே சோகம் வாகன விபத்தில் தம்பதி பலி
மதுராந்தகம் விவோகானந்தா பள்ளியில் கொரோனாவால் பலியானர்களுக்கு அஞ்சலி
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சபை கூட்டங்கள்: மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தகவல்
மனைவியை குடும்பம் நடத்த அனுப்பாததால் மாமியாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மருமகன் கைது
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டு தொகை 11 லட்சம் வசூல்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!