SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் பிடிபட்டனர்

11/20/2019 5:37:07 AM

சென்னை: சென்னை வில்லிவாக்கம், திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் பிரபாகர் (30), ஆட்டோ மெக்கானிக்கான இவர், கடந்த வாரம் தனது நண்பர்களுடன் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனே, அவரது நண்பர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரிக்க பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் மருத்துவமனை வந்தபோது, அவரது நண்பர்கள் தப்பியோடினர். இதையடுத்து, ரேஸ் நடத்திய வாகனங்களின் எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலத்தைச் சேர்ந்த மதார்ஷா (30), வெங்கடேசன் (32), ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த உதயா (28), கிண்டியை சேர்ந்த தனசேகர் (26), அயப்பாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரன் (30), கே.கே. நகரை சேர்ந்த கார்த்திக் (30) ஆகிய 6 பேர் ஆட்டோ ரேசில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிமிருந்து 3 ஆட்டோக்கள், ஒரு கார், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைதானவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: ஆட்டோ ரேசில் இறந்த பிரபாகர், ரேஸ் ஆட்டோக்களை தயார் செய்வதிலும், ரேசில் பங்கு பெறுவதிலும் கைதேர்ந்தவர். சென்னையில் ரேஸ் நடத்தி, அதில் வெற்றி பெறுவதில் இவர்தான் “டான்”. ரேசில் இவரை வெற்றி கொள்வதையே அனைத்து ரேஸ் பிரியர்களும் கவுரவமாக கருதியதாக கூறப்படுகிறது. இவர் ஆட்டோ ரேஸ்கள் மற்றும் அதற்கு பயன்படும் ஆட்டோக்களை  தயார் செய்யும் பணியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக இவருக்கு 2 முறை திருமணம் நடந்தும் இரண்டு மனைவிகளும் விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆட்டோ ரேசில் ஈடுபடுவதற்கு என்று தனி ஒரு வாட்ஸ்அப் குழுவை வைத்துள்ளனர். அந்தக் குழுவில் ரேஸ் குறித்தும், அதில் பங்கெடுக்கும் ஆட்டோக்கள், பங்கெடுப்பவர்கள், மெக்கானிக்குகள், பந்தயம் கட்டுபவர்கள் என தகவல்களைப் பறிமாறிக் கொள்வார்களாம். ரேஸ் நடத்துவதற்கு முன்பு அதற்காக தனியாக ஒரு ஒப்பந்தம் போடப்படும்.

பெரும்பாலும் அதிகாலை  4 மணிக்கு ரேஸ் தொடங்கும்.  மதுரவாயல் தாம்பரம் புறவழிச்சாலை, வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்டச்சாலை, திருப்பதி செல்லும் புறவழிச்சாலை போன்ற பகுதிகளில் ரேஸ் நடத்துவார்களாம். பந்தய தூரம் 5 முதல் 15 கிலோ மீட்டராகவும், பரிசு தொகை 1000 முதல் 5000 வரையிலும் இருக்கும் என கூறப்படுகிறது. ஆட்டோ ரேசில் ஈடுபட ஆட்டோ டிரைவர்களை உற்சாகப்படுத்த 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ரேஸ் விரும்பிகள், டிரைவர்கள்  மற்றும் மெக்கானிக்குகள் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் அவர்களை உற்சாகப்படுத்திய படி இந்த ஆட்டோக்களை பின் தொடர்ந்து அவர்களது செல்போன்களில் விடியோ மற்றும் போட்டோ எடுப்பார்களாம். ரேசின் போது செல்பியும் எடுத்துக் கொள்வதுண்டாம்.
குறிப்பாக கார்களில் கண்ணாடி கதவுகளை திறந்து விட்டு அதிலிருந்து உடல் பாதி வெளியே தெரியும் அளவிற்கு தொங்கியபடியே ஆபத்தான விபரீதமான விதத்தில் ஆட்டோ ரேஸ் காட்சிகளை பதிவு செய்வார்கள். இவர்களது முக்கிய நிபந்தனை என்னவென்றால் ரேஸ் நடக்கும்போது விபத்து ஏற்பட்டு விட்டால் யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது. விபத்து ஏற்பட்டால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விபத்து நடந்து விட்டதாகவே போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது முக்கிய விதிமுறைகளில் ஒன்று.  அதேபோல், பிரபாகர் விபத்தில் சிக்கியபோது மொபட்டில் இருந்து தவறி விழுந்ததாகத்தான் முதலில் போலீசாரிடம் தெரிவித்து அதன்படியே முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அவரது தம்பியும் உடைந்தையாக இருந்துள்ளார்.  மேலும், விபத்தில் சிக்கிய மொபெட்டை போலீசார் விசாரணைக்காக  கேட்டபோது அதற்காக வேறு ஒரு மொபட்டை கல்லால் அடித்து உடைத்து விபத்து ஏற்படுத்தியது போல் செட்டப் செய்து கொண்டு வந்து கொடுக்க முடிவு செய்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், இந்த ஆட்டோ ரேஸில் பங்கெடுத்த முக்கிய நபர்களான மாசி (என்ற) ரமேஷ், ஈஸ்வர அரி, லத்தீஸ் இறந்துபோன பிரபாகரன் தம்பி பிரதீப் உள்ளிட்ட பலரை போலீசார் தேடி வருகின்றனர். பந்தயத் தொகை குறைவாக இருந்தாலும், பந்தயத்தில் வெற்றி பெற்றவர் அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் ஹீரோ போல வலம் வருவாராம். இது போன்ற ஆட்டோ ரேஸில் பணம் சம்பாதிப்பதைவிட யார் கெத்து என்பதை காட்டவே இந்த ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது.  ஆட்டோ ரேஸ் மற்றும் பைக் ரேஸ் நடப்பதை தடுக்க தொடர்ந்து கண்காணிக்கவும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரேஸ் நடப்பதால் அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பீதியடைவதுடன், விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே, இது போன்ற ரேஸில் ஈடுபடுவர்கள் பிடிபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

 • monkey_thaayklannn1

  குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

 • eelephanttt11

  35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

 • muskes_ambani11

  27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

 • delhi_farmnmmmeee

  திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்