SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குப்பை, கழிவுநீர் அகற்றாததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

11/5/2019 12:06:39 AM

சென்னை , நவ.5: குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள குப்பை, கழிவுநீரை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை இழுத்து மூடி பூட்டுப்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  சென்னை மாநகராட்சி 6வது மண்டலம், 72வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி நகரில் 32 தெருக்கள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும், துப்புரவு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே சாலையில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. கால்வாய் அடைப்பால், கழிவுநீர் வெளியேறி தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் சுகாதார கேட்டில் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலை மற்றும் வ.உ.சி நகர் சந்திப்பில், கடந்த 10 நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால், இப்பகுதி வழியாக மக்கள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் சரிவர குப்பை அகற்றப்படாததால், குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.

இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று வ.உ.சி.நகர் 1வது தெருவில் உள்ள மாநகராட்சி 72வது வார்டு செயற்பொறியாளர் அலுவலகம், சுகாதார ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்றனர். ஆனால், அங்கு யாரும் இல்லை. அப்போது, அரசு அதிகாரிகள் இல்லாத கட்டிடம் எதற்கு எனக்கூறி, செயற்பொறியாளர் அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார், பொதுமக்களிடம் சமரசம் பேசி உடனடியாக செயற்பொறியாளரை வர வைப்பதாகவும், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தனர். பின்னர், பொதுமக்களால் போடப்பட்டிருந்த பூட்டை அகற்றினர்.இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த அலுவலகத்தில் உதவி பொறியாளர் இருப்பதில்லை. மாறாக மாநகராட்சி ஊழியர்கள் என்ற பெயரில் 5க்கும் மேற்பட்டவர்கள் எந்நேரமும் மது அருந்திக்கொண்டு இருக்கின்றனர். எங்களுக்கு என்று நியமிக்கப்பட்ட 72வது வார்டு செயற்பொறியாளர் ராஜ்குமார் காலையில் இங்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு 74வது வார்டுக்கு சென்று அங்கு அமர்ந்து கொள்கிறார்.

இதனால் எங்களது குறைகளை அவரிடம் கூற முடிவதில்லை. மேலும் இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால், இங்குள்ள குழந்தைகளுக்கு மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல்கள் ஏற்படுகின்றன.இதற்கு மருந்து மாத்திரை வாங்க சுகாதார ஆய்வாளர் பார்க்க சென்றால் அவரும் அங்கு இருப்பதில்லை. இதனால் தனியார் மருத்துவமனைக்கு சென்று அதிக கட்டணம் செலுத்தி வைத்தியம் பார்க்க வேண்டிய நிலைமை உள்ளது.எனவே, இந்த அலுவலகத்துக்கு செயற்பொறியாளர் முறையாக பணிக்கு வந்து, மக்கள் குறைகளை கேட்டறிந்து, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.அரசு அலுவலகத்துக்கு பொதுமக்கள் பூட்டு போட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்