SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவேற்காட்டில் அரசு மகளிர் விடுதி கட்ட எதிர்ப்பு,..அமைச்சர்களுக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி: தாசில்தாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு

9/20/2019 12:25:07 AM

சென்னை: திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட அயனம்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியைச் சுற்றி சுமார் 9 ஏக்கர் அளவில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் மகளிர் விடுதி கட்ட முடிவு செய்யப்பட்டது. பணிக்கு செல்லும் பெண்கள் தங்குவதற்காக சுமார் 4 ஆயிரம் சதுர அடியில் 13 அறைகளுடன் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் இந்த மகளிர் விடுதி கட்ட திட்டமிட்டு அதற்கான பூமி பூஜை நேற்று பள்ளியின் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன், ராஜலட்சுமி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர்.

இதற்கிடையே பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், அப்பகுதியில் மகளிர் விடுதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியில் கூடினர். மேலும் அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டவும் திட்டமிட்டு ஒரு காரில் ஏராளமான கருப்புக் கொடிகளுடன் வந்திருந்தனர். தகவலறிந்து பூந்தமல்லி தாசில்தார் காந்திமதி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரை சந்தித்து சமாதானப்படுத்தினார். ஆனால் அவர்கள் தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர் பள்ளியில் இருந்து விழா நடக்கும் இடத்துக்கு சென்று விட்டார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட இருந்தவர்கள் கருப்புக் கொடியுடன் விழா நடக்கவிருந்த இடத்துக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதற்கிடையே காலை 10.30 மணி அளவில் விழா நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். காலை 9.30 மணியிலிருந்து ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள், பூந்தமல்லி வட்டாட்சியர் காந்திமதி, திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்ரா மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் என பலர் காத்திருந்தனர். ஆனால் பிற்பகல் 1.30 மணி வரை அமைச்சர்கள் வரவில்லை. பின்னர் 1.30 மணி அளவில் அமைச்சர்கள் பெஞ்சமின், ராஜலட்சுமி, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் வந்தனர். நீண்ட நேர தாமதத்திற்குப் பின் பூமி பூஜை விழா நடைபெற்றது. அசம்பாவிதங்களை தவிர்க்க பூந்தமல்லி   காவல் உதவி ஆணையர் செம்பேடு பாபு, ஆவடி உதவி ஆணையர் ஜான்சேவியர் தலைமையில்  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
சென்னை புறநகர் பகுதியான திருவேற்காடு பகுதியில் வெளியூரிலிருந்து வந்து தங்கி படிப்பதற்காகவும், பணிக்காகவும் செல்லும் பெண்களுக்காகவும் அரசு சார்பில் மகளிர் விடுதி கட்டப்பட உள்ளது. குறிப்பாக பணிபுரியும் பெண்கள் மட்டுமன்றி ஆதிதிராவிட வகுப்பை சார்ந்த பெண்களுக்கு பாதுகாப்பாக தங்குவதற்கு இந்த விடுதி உதவியாக இருக்கும்.  அரசுக்கு சொந்தமான இடத்தில்தான் விடுதி கட்டுகிறோம். இதில் சிலர் தங்கள் சுயநலத்துக்காக தூண்டிவிட்டு பிரச்னை செய்ய முயல்கின்றனர். ஆனால் திட்டமிட்டபடி மகளிர் விடுதி கட்டி முடிக்கப்படும் என்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். பள்ளியை ஒட்டி உள்ள இந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு எடுக்கக்கூடாது. பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தரவும், பள்ளியின் பிற பயன்பாட்டுக்கு மட்டுமே இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக இந்த இடத்தை யாரும் ஆக்கிரமிக்காதவாறு, பள்ளிக்காக காப்பாற்றி வந்துள்ளோம், என்றனர்.

வெடித்தது கோஷ்டி பூசல்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெஞ்சமின், பாண்டியராஜன் என இரு அமைச்சர்கள் உள்ளனர். திருவேற்காடு அமைச்சர் பாண்டியராஜனின் ஆவடி தொகுதிக்குள் வருகிறது. இந்த மாவட்டத்தில் இரு அமைச்சர்களுக்கிடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்களுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்களில் பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அமைச்சர் பெஞ்சமின் ஆதரவாளர்களின் தூண்டுதலால்தான் இவர்கள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அமைச்சரின் சொந்த தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை. அதே நேரத்தில் மற்ற அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டவில்லை. போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தவர்கள் அதன்பிறகு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்