SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலூர் மாவட்டத்துக்கு ரயில் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும்

10/1/2022 5:41:31 AM

கடலூர், அக். 1: குறிஞ்சிப்பாடி தாலுகா ரயில் நிலையங்களுக்கு போதிய ரயில்களை இயக்காமல் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் புறக்கணித்து வருவதாக ரயில் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் வரலாற்று சிறப்புமிக்க வடலூர், நெய்வேலி ஆகிய முக்கிய ஊர்கள் இடம்பெற்றுள்ளன. கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரிக்கு அடுத்தப்படியாக பெரிய ஏரியான பெருமாள் ஏரியும் இந்த தாலுகாவில் அமைந்துள்ளது. இப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக கடலூர்-விருத்தாசலம்-சேலம் ரயில்பாதை ஏற்படுத்தப்பட்டு குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டது. இங்கிருந்து சேலம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் சேவை அளிக்கப்பட்டது.

குறிப்பாக இவ்வழியாக இயக்கப்பட்ட பயணிகள் ரயிலை பயன்படுத்தி இப்பகுதி பொதுமக்கள் கடலூர், திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சென்னை, மதுரை, நெல்லை, கோவை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு சென்று வந்தனர். நாடு முழுவதும் மீட்டர்கேஜ் ரயில்பாதைகளை மாற்றிவிட்டு அகலப்பாதையாக அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடலூர்- சேலம் இடையே அகல ரயில்பாதை பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக கடலூர்- விருத்தாசலம் இடையே பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2003ம் ஆண்டு முதல் ரயில்கள் இயக்கப்பட்டது.

ஆனால், இப்பாதையில் மீண்டும் ரயில் சேவை துவங்கி சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் 2 ஜோடி ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அவையும் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயங்கும் பயணிகள் ரயில்கள் ஆகும். முன்பதிவு பெட்டிகள் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்காத பாதையாக இப்பாதை திகழ்ந்து வருகிறது. தற்போது, காலை நேரத்தில் 2 பயணிகள் ரயில்களும், மாலை நேரத்தில் 2 ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.வடலூர் சத்திய ஞான சபைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதேபோன்று, மாதாமாதம் வரும் பூச தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்களும், தைப்பூச தினத்தன்று லட்சக்கணக்கான மக்களும் கூடுவர். நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஏராளமான தென் மற்றும் மேற்கு மாவட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி ஜவுளி வர்த்தகம் நிறைந்த பகுதியாகும். இந்த ரயில் நிலையங்களில் இருந்து அதிகளவு ரயில் சேவை இருந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வடலூர் ரயில் நிலையம் சரக்கு ரயில் போக்குவரத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக உள்ளது. இருப்பினும் இந்த ரயில் நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கூடுதல் ரயில் சேவைகளை பற்றி திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.திருச்சி- விருத்தாசலம்- விழுப்புரம் பாதையில் பராமரிப்பு பணி அல்லது விபத்து ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு இப்பாதை நினைவுக்கு வருகிறதே தவிர, அடிப்படை வசதி, ரயில் சேவை அதிகரிப்பு, ரயில் நிலைய மேம்பாடு குறித்து எந்த சிந்தனையும் இல்லை.

மற்ற ஊர்களுக்கு புதிது புதிதாக ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் குறிஞ்சிப்பாடி தாலுகாவை பொருத்தவரை ஏற்கனவே ஓடிய ரயில்கள் கிடைத்தாலே போதும் என்ற மனநிலைக்கு மக்கள் உள்ளனர். கடலூர்- சேலம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்ற பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக போராடி வருகிறது. எனவே, இந்த ரயில் நிலையங்களுக்கு போதிய அளவில் ரயில் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், அப்படியில்லையெனில் சேலம் முதல் கடலூர் வரையிலான ரயில்பாதையை சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kerala-fest-beauty-28

  அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

 • isreal-22

  இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

 • ADMK-edappadi-palanisamy

  அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 • germanysstt1

  ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

 • switzerland-japan-win

  சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்