SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட கிழக்கு பருவமழை, சபரிமலை சீசன் எதிரொலி குமரி வன பகுதியில் யானை கூட்டங்கள் வர வாய்ப்பு

10/1/2022 4:40:49 AM

நாகர்கோவில், அக்.1 : வடகிழக்கு பருவமழை மற்றும் சபரிமலை சீசன் ஆகியவற்றையொட்டி யானைகள் கூட்டம் வரலாம் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறை தொடங்கி உள்ளது. குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மிகவும் தொன்மையான, பழமையை உள்ளடக்கியதாகும். மொத்த பரப்பளவான ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 184 ஹெக்டேரில், சுமார் 48 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு அரசு வனப்பகுதியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி குமரி மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவு உள்ள கிளாமலை வனப்பகுதி நெய்யார் வன உயிரின சரணாலயத்தில் துவங்கி கோதையாறு வரையிலும், கோதையாற்றில் துவங்கி தடிக்காரன்கோணம் பகுதி வரையிலான வீரப்புலி வனப்பகுதி சுமார் 33 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலும், தடிக்காரன்கோணத்தில் இருந்து மூக்குத்தி மலை வரை உள்ள 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்புள்ள பகுதி அசம்பு வனப்பகுதியாகவும் உள்ளது. இதுபோல மூக்குத்தியில் துவங்கி ஆரல்வாய்மொழி வரை உள்ள 797 ஹெக்டேர் பரப்பு தாடகை மலை வனப்பகுதியாகவும்,

ஆரல்வாய்மொழியில் துவங்கி ஐ.எஸ்.ஆர்.ஓ. வரையிலான ஆயிரத்து 243 ஹெக்டேர் பகுதி பொதிகை மலை வனப்பகுதியாகவும், ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் துவங்கி பணகுடி வரையிலான 4 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பு மகேந்திர கிரி வனப்பகுதியாகவும் கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகள் உள்ளன. குமரி மாவட்ட வனப்பகுதியில் யானை, அபூர்வ மிளா, வரையாடுகள், பெரிய அணில்கள், யானை, புலி, காட்டுப் பன்றி, பல்வேறு வகையிலான குரங்குகள் என பல்வேறு அரிய உயிரினங்கள்  வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை மற்றும் சபரிமலை சீசன் காலங்களில் யானைகள் அதிகளவில் கேரள வனப்பகுதியில் இருந்து குமரி மாவட்ட வனப்பகுதிக்கு இடம் பெறும். அதன்படி செப்டம்பர் நிறைவடைந்ததும், சீதோஷ்ண நிலை மாற்றத்தை உணர்ந்து யானைகளின் இடப்பெயர்ச்சி தொடங்கும். அக்டோபர், நவம்பர், டிசம்பர்,

ஜனவரி ஆகிய 4 மாதங்களும் குமரி வன பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த காலங்களில் பரளியாறை ஒட்டிய பகுதியான மேல கோதையாறு, ஆனை துறுத்தி, ஆனை முகத்தி வழியாக யானைகள் கூட்டம் கூட்டமாக குமரி மாவட்ட எல்லைக்குள் வரும். இது தவிர காட்டு எருமைகள், வரையாடுகள், கருமந்தி, கரடி, சிங்கவால் குரங்கு போன்றவைகளும் குமரி வனப் பகுதியில் வருவது உண்டு. இதனிடையே வன விலங்குகள் வருகையை கண்காணிக்கவும், வன விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கவும்  வனச் சரகங்களில் வேட்டை தடுப்பு முகாம்கள் வனத்துறையால் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் குமரி மாவட்ட வன அலுவலகத்தில் யானைகள் பாதுகாப்பு மற்றும் மனிதர்கள் மீதான தாக்குதல்களை தடுத்தல் குறித்தும், அதற்கான பயிற்சியும்  நடந்தது. பயிற்சிக்கு மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்தார். டாக்டர் சிவகணேசன் பயிற்சி அளித்தார். காட்டில் யானைகளுக்கு எந்தவிதமான உணவுகள் தேவை என்பது பற்றியும், யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு தலைமை வகித்த வன அலுவலர் இளையராஜா கூறியதாவது: குமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான், புலி, காட்டுப்பன்றி, மிளா, வரையாடுகள் உள்பட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி குமரி மாவட்ட வனத்தில் 15 முதல் 20 யானைகள் வரை வசித்து வருவது தெரிய வந்தது. குமரி மாவட்ட வனபகுதி மேற்கு தொடர்ச்சி மலையுடன் ஒட்டி இருப்பதால், கேரள மாநிலத்தில் இருந்து யானைகள் குமரி வனப்பகுதிக்கு வந்து செல்கிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையில் கேரளாவில் இருந்து யானைகள் அதிகளவில் குமரி வனப்பகுதிக்கு வரும். இதனால் யானையின் எண்ணிக்கை 50 வரை உயரும்.  யானைகளை எப்படி கையாளுவது, ஊருக்குள் புகாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. வனத்துறையும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்