அசைவ ஓட்டலில் காடை சாப்பிட்ட ஊராட்சி செயலாளருக்கு வாந்தி, மயக்கம் உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு ஆரணியில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்
9/30/2022 6:55:23 AM
ஆரணி, செப்.30: ஆரணியில் அசைவ ஓட்டலில் காடை சாப்பிட்ட ஊராட்சி செயலாளருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் ஒருவர் தனது நண்பருடன் 2 தினங்களுக்கு முன்பு ஆரணி டவுன் காந்தி சாலையில் உள்ள அசைவ ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது, இருவரும் ஓட்டலில் காடை மற்றும் குஸ்கா ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். பின்னர், வீட்டிற்கு சென்ற சில மணி நேரத்தில் ஊராட்சி செயலாளருக்கும், அவரது நண்பருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு புட்பாய்சன் ஏற்பட்டுள்ளது. இதில், உடல்நிலை பாதிக்கப்பட்ட ஊராட்சி செயலாளரை ஆரணி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் கலைஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் அந்த அசைவ ஓட்டலுக்கு நேற்று சென்று உணவு மாதிரிகளை சேகரித்து சேலம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அசைவ ஓட்டலில் காடை, குஷ்கா சாப்பிட்ட ஊராட்சி செயலர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் மற்றும் வீடியோ சமுகவலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் ஆரணி பகுதியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே அசைவ ஓட்டலில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மட்டன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, அதேபகுதியில் உள்ள மற்றொரு அசைவ ஓட்டலில் தந்தூரி சாப்பிட்ட பள்ளி மாணவன் உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழந்தார். அதே ஓட்டலில் தம்பதிகள் சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி, சில வாரங்களுக்கு முன்பு ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அசைவ ஓட்டலில் வாலிபர் தனது நண்பர்களுடன் காடை ஆர்டர் செய்து சாப்பிட்டபோது காடையில் புழு நெளிந்துள்ளது.
அதேபோல், சில நாட்களுக்கு முன்பு பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சைவ ஓட்டலில் துக்க நிகழ்ச்சிக்கு வாங்கிய பார்சல் உணவில் வழங்கப்பட்ட பீட்ரூட் பொரியலில் பெருச்சாளியின் தலை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனால் அந்த ஓட்டலுக்கு விற்பனை உரிமம் ரத்து செய்து, தற்காலிகமாக பூட்டப்பட்டது. மேலும், ஆரணி டவுன் பகுதிகளில் உள்ள அசைவ, சைவ ஓட்டல்களில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்களால் உயிரிழப்புகளும், அதிர்ச்சி சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனால், ஓட்டலில் சாப்பிடுவதற்கு பொதுமக்களுக்கு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளதால், சைவ, அசைவ உணவுகள் சாப்பிட தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதுபோன்ற, சம்பவங்கள் நடக்கும்போது மட்டுமே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு மட்டும் சென்று ஆய்வு என்ற பெயரில் உணவு மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், அதன்பின்னர் அதன் முடிவுகள் வந்ததும் அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. எனவே, ஆரணியில் அசைவ, சைவ ஓட்டல்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூடுதலாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து ஓட்டல்களை கண்காணிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
(தி.மலை) 1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு கலால் போலீசார் அதிரடி ஜமுனாமரத்தூர் பகுதியில் சோதனை
(தி.மலை) மீன்பிடி குத்தகை வழங்க கோரி மலைவாழ் மக்கள் சாலை மறியல் போலீசார் சமசரம் செங்கம் அருகே குப்பநத்தம் அணையில்
(தி.மலை) மண் கொள்ளையர்களை கைது செய்யக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ஏரிக்கரை உடைப்பு
செய்யாற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில்
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜை விடுமுறை தினமான நேற்று
குழந்தைகள் இல்லாததால் மருமகள் தீக்குளித்து தற்கொலை மாமியாருக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!