காஞ்சிபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைமையகம் தாம்பரத்திற்கு மாற்றப்படுமா?: ஊழியர்கள் எதிர்பார்ப்பு
9/22/2022 5:12:50 AM
காஞ்சிபுரம், செப். 22: காஞ்சிபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைமையகத்தை தாம்பரத்திற்கு மாற்றப்படுமா....? என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாக சிரமங்களை தவிர்க்கவும், ஊழியர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், பல்லாவரம், போரூர், நந்தம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள், சேமிப்பு கிடங்குகள், பெட்ரோல் பங்க்குகள், காய்கறி கடைகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இதற்கான நிர்வாக அலுவலகம் சென்னை பாரிமுனை, பிரகாசம் சாலையில் உள்ள மண்ணடியில் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான நிர்வாக அலுவலகம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளை கடந்து மிக தொலைவில் உள்ளதால் போக்குவரத்துக்காக தேவையற்ற காலவிரயம் ஏற்படுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சென்னை பாரிமுனையில் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அலுவலகத்தில் சுமார் 75 சதவீதத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து செல்கின்றனர். இவர்களில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த தலைமை அலுவலகத்துக்கு சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை பாரிமுனையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு ரயில் மார்க்கமாக செங்கல்பட்டு - தாம்பரம் - சென்னை கோட்டை சென்று அங்கிருந்து போக்குவரத்து நெரிசலில் பிரகாசம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தை சென்றடைய வேண்டியுள்ளது. பேருந்து மார்க்கமாக செல்ல வேண்டுமானால் தாம்பரம்- சென்னை பாரிமுனை சென்று அங்கிருந்து செல்ல வேண்டும். தாம்பரத்தில் இருந்து கடும் போக்குவரத்து நெரிசலில் பாரிமுனை சென்றாலும் அங்கிருந்து அலுவலகத்தை சென்றடைவது மிகுந்த சிரமமாக உள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை ஒருங்கிணைத்து கிளை அலுவலகம் காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூரில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமை அலுவலகம் சென்னை பாரிமுனையில் இருப்பதால் அலுவலக வேலையாக ஊழியர்கள் சென்று வர ஒரு முழுநாள் செலவிட வேண்டியுள்ளது. மேலும் கூட்டுறவு ரேஷன் கடை புகார்கள் குறித்து நேரடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க முடியாமலும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர். எனவே, காஞ்சிபுரத்தில் உள்ள கிளை அலுவலகம் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள தலைமை அலுவலகம் இரண்டையும் இணைத்து தாம்பரத்தில் தலைமை அலுவலகம் அமைத்தால் நிர்வாகச் செலவுகள் குறைவதுடன் எங்களின் சிரமமும் குறையும் என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த வாரத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ரேஷன் கடை பணியாளர்கள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலை அலுவலகத்தை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இதுகுறித்து, நியாயவிலை கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது, காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்களே பெரும்பாலோனோர் பணிபுரிகின்றனர். காஞ்சிபுரம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஊழியர் அலுவலகம் வருவதற்கு காலை 6 மணிக்கு காஞ்சிபுரத்தில் ரயிலை பிடிக்க வேண்டியுள்ளது. இதற்காக காலை 5 மணிக்கு வீட்டில் கிளம்பி வர வேண்டிய சூழல் உள்ளது. இதனால் சரியான நேரத்திற்கு உணவருந்த முடியாமல் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, காஞ்சிபுரத்தில் உள்ள கிளை அலுவலகம், சென்னை தலைமை அலுவலகத்தை இணைத்து தாம்பரத்தில் தலைமை அலுவலகம் அமைந்தால் நிர்வாகச் செலவுகள் குறைவதுடன், பண்டகசாலை வளர்ச்சி பன்மடங்கு பெருகும். அதோடு, சென்னை தலைமை அலுவலகத்தை வாடகைக்கு விடுவதன் வாயிலாக அதிக வருவாய் கிடைக்கும் என்றார். மேலும், பண்டகசாலை இணைப் பதிவாளர் முருகானந்தம், ஏற்கனவே, காஞ்சிபுரம் கிளை அலுவலகத்தில் துணை பதிவாளராக பணியாற்றியவர் என்பதால் ஊழியர்களின் சிரமங்களை நன்கு அறிந்தவர். எனவே, எங்கள் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து நிறைவேற்றித் தருவார் என்று நம்புவதாக தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைக்கு உயர் அதிகாரிகள் செவிமடுத்து, சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தலைமையகத்தை தாம்பரத்திற்கு மாற்ற வேண்டும் என்ற ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிட வேண்டும். காஞ்சிபுரத்தில் உள்ள கிளை அலுவலகம் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள தலைமை அலுவலகம் இரண்டையும் இணைத்து தாம்பரத்தில் தலைமை அலுவலகம் அமைத்தால் நிர்வாகச் செலவுகள் குறைவதுடன் எங்களின் சிரமமும் குறையும் என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
கடுக்கலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
காஸ் குடோன் தீவிபத்து சிகிச்சை பலனின்றி உரிமையாளர் பலி
முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது
குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது
காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!