SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வக்புவாரியத்தை கண்டித்து கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

9/20/2022 5:38:41 AM

கோபி,செப்.20: கோபி அருகே உள்ள மேவாணி கிராமத்தில் பட்டா நிலத்தில் உள்ள 550 வீடுகளும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என வக்பு வாரியம் அறிவித்ததை கண்டித்து கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபி அருகே உள்ள மேவாணி வருவாய் கிராமத்தில் கடந்த 100 ஆண்டுக்கும் மேலாக 550க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பட்டா நிலத்தில் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டை விற்க கோபியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற போது,

அவரது வீடு உட்பட 550 வீடுகளும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்றும், அந்த இடம் தொடர்பாக எவ்வித பரிவர்த்தனைகளும் நடத்த கூடாது என்றும்,வில்லங்க சான்று உட்பட எவ்வித சான்றும் வழங்க கூடாது என்று வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் சென்னையில் இருந்து ஈரோடு கலெக்டர் மற்றும் கோபி, பெருந்துறை, பவானி, நம்பியூர் உட்பட 11 தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால் மேவாணி கிராமத்தில் உள்ள 550 குடும்பத்தினரும் விற்பனை செய்யவும், அடமானம் வைக்கவும், வங்கி,கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கிராம மக்கள் வீட்டு வரி,சொத்துவரி, குடிநீர் வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் சொத்துகளை வாரிசுகளுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த மாதம் மேவாணி கிராம மக்கள் கோபி கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகரிகளுக்கு மனு அளித்தனர். அந்த மனுவில் தவறுதலாக வக்பு வரியத்திற்கு சொந்தமான நிலம் என மாற்றப்பட்டு உள்ளதாகவும், உடனடியாக சரி செய்து தரும்படி கூறினர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் கிராம மக்கள் ஆத்திரமடைந்து நேற்று கோபி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்சினி ஒரு வார காலத்திற்குள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில்:மேவாணி கிராமத்தில் ரீ சர்வே எண் 185/4 ல் 11 சென்ட் அளவிற்கே முஸ்லீம்களுக்கு சொந்தமான மசூதி மற்றும் இடுகாடு உள்ளது.

ஆனால் கடந்த 6 மாதம் முன்பு ரீ சர்வே எண் 186/2 ல் உள்ள சொத்துகள் அனைத்தும் வக்பு வரியத்திற்கு சொந்தமானது என மாவட்ட நிர்வாகம், பத்திர பதிவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் மேவாணியில் மட்டும் 550க்கும் மேற்பட்டோரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அதே போன்று கே.என்.பாளையம் பேரூராட்சியில் உள்ள 3500 வீடுகளும், சத்தி அருகே உள்ள மலையடிபுதூரில் 40 ஏக்கர் விவசாய நிலங்கள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே போன்று கணபதிபாளையம், மொடச்சூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் பழைய சர்வே எண்ணை வைத்து ஏராளமான குடியிருப்புகள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும், கடந்த ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் 550 குடும்பத்தினரும், தவறாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் இதுவரை வருவாய்த்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக வருவாய்த்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கோட்டாட்சியர் ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார். இல்லை எனில் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்