SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செங்கோடு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்: ரிங் ரோடு அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

8/13/2022 6:01:51 AM

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் ரிங் ரோடு அமைக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இத்திட்டம் நிறைவேறும் என்று எம்எல்ஏ உறுதி தெரிவித்தார். ஆன்மீக நகரான திருச்செங்கோடு வருவாய் கோட்ட தலைநகராகவும், பெரிய சாலை சந்திப்பாகவும் விளங்குகிaறது. சேலம், சங்ககிரி, குமாரபாளையம், ஈரோடு, பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், ஜேடர்பாளையம் மற்றும் இறையமங்கலம் பகுதியிலிருந்து வரும் சாலைகள் இங்கு கூடுகின்றன. தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய கூட்டுறவு விற்பனைச் சங்கமும், 25 ஆயிரம் மாணவிகள் படிக்கும்  கல்லூரியும் இங்குதான் உள்ளது. இங்கு ஜவுளித்தொழில் மற்றும் வாகனங்களுக்கான பாடி கட்டும் தொழில், லாரித்தொழில், ரிக் தொழில் சிறந்து விளங்குவதால் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான கல்லூரிகளும், பள்ளிகளும் செயல்பட்டு வருவதால், பெருமளவில் வாகனங்கள் மாணவ-மாணவிகளுக்காக இயக்கப்படுகின்றன. தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் பஸ்கள், வேன்கள் முழு வீச்சில் இயக்கப்படுகின்றன. கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் வழியாக கேரளா செல்ல, திருச்செங்கோடு நகரை கடந்து தான் செல்ல வேண்டும்.
 
இதன்  காரணமாக வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. நகரில் உள்ள நான்கு ரத வீதிகளில் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் நகை மற்றும் ஜவுளிக்கடைகள், வங்கிகள் நிறைந்துள்ளதால் டூவீலர்கள், கார்களை அவசர கதியில் அப்படியே விட்டுச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், ரத வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. 1960-70களில் இருந்த சாலைகளே, இப்போதும் வாகன போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
 
திருச்செங்கோட்டில் பிரசித்த பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. அமாவாசை மற்றும் கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், பவுர்ணமி கிரிவலம் செல்லும் நாட்களில் கூட்ட நெரிசல் அதிகமாக  இருக்கும். முகூர்த்த நாட்களில் மலையில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடப்பதால், அன்றைய தினம் நாமக்கல் சாலையில் அதிக வாகனங்கள் காணப்படும். போக்குவரத்து நெரிசலால் மணமக்கள் திருமலைக்கு செல்லமுடியாமல் முகூர்த்த நேரங்களை தவற விடுவதும் உண்டு. போக்குவரத்து நெரிசலை போக்க, நகரைச் சுற்றி ரிங் ரோடு அமைப்பது மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
சங்ககிரி சாலையில் உள்ள பால்மடை, குமாரபாளையம்  சாலையில் உள்ள தேவனாங்குறிச்சி, ஈரோடு சாலையின் தோக்கவாடி, வேலூர் சாலையின் மீன் கிணறு, நாமக்கல்-ராசிபுரம் சாலைகளின் குமரமங்கலம் பிரிவு ரோடு,  கொக்கராயன்பேட்டையின் ஆண்டிபாளையம், சேலம் சாலையின் சின்னத்தம்பிபாளையம் ஆகியவற்றை இணைக்கும் விதத்தில் ரிங் ரோடு அமைந்தால் தொழிற்சாலைகள், குடியிருப்புகள் நிறைந்த அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
 
பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் பஸ்களைத் தவிர எந்த ஊரிலிருந்து வரும் வாகனமும், கல்லூரி- பள்ளி வாகனங்களும் திருச்செங்கோடு நகருக்குள் தேவையின்றி நுழைய வேண்டிய  அவசியம் ஏற்படாது. தற்போது, புறவழிச்சாலை திட்டம் மட்டுமே அரசிடம் உள்ளது. நிலத்து உரிமையாளர்கள்  நீதிமன்றங்களுக்கு சென்றதால் திட்டம் நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை உள்ளதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து திருச்செங்கோடு ஈஸ்வரன் எம்எல்ஏ கூறுகையில், ‘திருச்செங்கோட்டின் கனவுத்திட்டமான ரிங்ரோடு திட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த திட்டம் நிறைவேறும்,’ என்றார். திருச்செங்கோட்டில் புறவழிச்சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தும் அலுவலகம் சுமார் 8 வருடங்களாக இயங்கி வந்தது. தற்போது, இது மூடப்பட்டு நாமக்கல் புறவழிச்சாலைக்கான நிலம் எடுப்பு வருவாய் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் பணிகளில் தொய்வு ஏற்படும் என்று பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்