SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்

8/10/2022 5:05:04 AM

தொண்டி, ஆக.10: தொண்டி,நம்புதாளை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் தூர்வாரப்பட வில்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாக கடலில் கலப்பதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்கழஞ்சியமாக திருவாடானை தாலுகா உள்ளது. சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிர் விவசாயம் செய்யப்படுகின்றது. அதிலும் அதிக விளைச்சல் தரக்கூடிய பகுதியாக தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம், திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. மழைநீரை மட்டுமே நம்பி இப்பகுதியில் விவசாயம் நடை பெறகிறது.

ஆற்று நீரோ ஊற்று நீரோ இல்லாமல் மழைநீரை சேமித்தே விவசாயம் செய்கின்றனர். ஒரு போக விவசாயம் மட்டுமே செய்யப்படுகிறது. பாசனத்திற்கென 300க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களும் 100க்கும் மேற்பட்ட பெரிய கண்மாய்களும் உள்ளது. 100 ஏக்கருக்கு கீழ் விவசாயம் செய்யும் இடங்களில் உள்ள கண்மாய் ஊராட்சி ஒன்றியத்தின் மேற்பார்வையிலும் 100 ஏக்கருக்கு மேல் பாசனம் செய்யும் கண்மாய்கள் பொதுப்பணி துறை வசம் உள்ளது. மழை நீரை நம்பியே விவசாயம் நடைபெறுவதால் மழை காலங்களில் பெய்யும் மழை நீரை கண்மாய்களில் சேமிக்க விவசாயிகள் படாதபாடு படுகின்றனர்.

ஒரு சில கண்மாய்கள் தவிர்த்து மற்ற பெரும்பாலான கண்மாய்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தூர்வாரப்படாததால் மழை காலங்களில் மழை தண்ணீரை சேமிக்க முடியாமல் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் தூர்வார நடவடிக்கை எடுத்த போது மழை பெய்து விட்டதால் அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் கண்மாய்கள் அனைத்தும் மேடாக காட்டு கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளது. போதிய அளவு தண்ணீர் சேமிக்க முடியாததால் ஒவ்வொரு வருடமும் விவசாயத்தில் நஷ்டம் அடைவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒரு போக விவசாயம் அதுவும் நெல் பயிர் விவசாயம் மட்டுமே செய்யப்படுகிறது. பருத்தி உள்ளிட்ட பயிர் வகைகள், வாழை போன்றவை இப்பகுதியில் விவசாயம் பெரும்பாலான இடங்களில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபோக விவசாயத்தையும் ஒழுங்காக செய்ய தண்ணீர் முக்கிய தேவையாக உள்ளது. இனி வரும் காலம் மழை காலம் என்பதால் கண்மாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்புதாளை பெரிய கண்மாய் மற்றும் சின்ன கண்மாய், முகிழ்த்தகம் கண்மாய், திருவெற்றியூர் கண்மாய்கள் மீண்டும் தூர்வாரப்பட வேண்டும். போதிய அளவு தண்ணீரை சேமித்து வைத்தால். மட்டுமே இந்த கண்மாய்களை நம்பி விவசாயம் பார்க்கும் விவசாயிகள் பயன் அடைய முடியும். கண்மாயில் தண்ணீர் இல்லாத போது மாற்று வழியில் தண்ணீர் கிடைப்பது என்பது முடியாத செயலாகும்.

இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் சங்கிலி தொடர் போல் இருக்கும். அஞ்சு கோட்டை கண்மாயிலிருந்து திருவாடானை கண்மாய்க்கும் அங்கிருந்து ஆதியூர் கண்மாய்க்கும் அங்கிருந்து கருப்பூர் உள்ளிட்ட கண்மாய்களை நிறைத்து விட்டு திருவெற்றியூர் கண்மாய்க்கும் அங்கிருந்து முகிழ்த்தகம் கண்மாய்க்கும் சங்கிலி தொடராய் தண்ணீர் செல்லும். தற்போது வரத்து கால்வாய் முழுவதும் தூர்ந்து விட்டதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அனைத்து கண்மாய்கள் தூர் வாரப்படும் போது மடைகள், கழுங்குகள்,வரத்து கால்வாய்கள் சரி செய்யப்பட வேண்டும்.

இது குறித்து விவசாயி ராமலிங்கம் கூறியது, திருவாடானை தாலுகாவில் அஞ்சு கோட்டை, ஆதியூர், திருவாடானை, முகிழ்த்ததம், திருவெற்றியூர் கண்மாய்கள் பெரியது. இந்த கண்மாய்கள் நிரம்பி விட்டால் அந்த வருடம் விவசாயம் லாபம் தரும். நல்ல மகசூல் கிடைக்கும். இவற்றில் பெரும்பாலான கண்மாய்கள் பல வருடங்களாக தூர் வாரப்பட வில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைகாலம் துவங்கும் முன்பு தூர்வார வேண்டும் என்றார். விவசாயி பாண்டியராஜ் கூறியது, கண்மாய்கள் தூர்வாரப்படாததால் கண்மாய் முழுவதும் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்து விட்டது. இதனால் மேடாக மாறி விட்டது. மழை பெய்யும் போது சிறிது தண்ணீர் சேர்ந்ததும் வெறியேறி விடுகிறது. நல்ல ஆழமாக தூர் வார வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

  • noru-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

  • field-paint-former-27

    விநாயகர், புறா, கருஞ்சிறுத்தை!: வயலில் ஓவிய சிற்பம்... பல்வேறு வடிவங்களில் அசத்தும் பொறியாளர்..!!

  • Tirupati

    திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலம்

  • nepal_snowfall

    நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்