செங்குன்றத்தில் பயங்கரம்: முன்விரோத தகராறில் ரவுடி வெட்டி கொலை: 2 பேர் கைது
6/28/2022 5:49:45 AM
புழல்: முன்விரோத தகராறில் பிரபல ரவுடியை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர். செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரை சேர்ந்தவர் மதிவாணன் (26). பிரபல ரவுடியான இவர் மீது கஞ்சா விற்பனை, கொலை, வழிப்பறி உள்பட ஏராளமான வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதிவாணன் அதேபகுதியை சேர்ந்த தனது 3 நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் மதிவாணனை அரிவாள் மற்றும் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது 3 நண்பர்களுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அந்த மர்ம கும்பல் அவரை விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது.
மேலும் இதை தடுக்க வந்த அவரது 3 நண்பர்களுக்கும் சரமாரி வெட்டு விழுந்தது. இந்த தாக்குதலில் ரவுடி மதிவாணன் பலத்த வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியானார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி சரிந்தனர்.
பின்னர் அந்த கும்பல் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே, சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட மதிவாணனின் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த ஹேமந்த் (18), சரத்குமார் (19), தனுஷ் (18) ஆகிய 3 பேரையும் மீட்டு அதே மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடந்த ஆண்டு நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரை சேர்ந்த கஞ்சா மணி கொலை வழக்கு தொடர்பாக ரவுடி மதிவாணன் கோஷ்டிக்கும், மணியின் சகோதரர் பிரபா (எ) பிரபாகரன் கோஷ்டிக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து மதிவாணனை அந்த ரவுடி கும்பல் வெட்டி கொன்றது தெரியவந்தது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆவடி முத்தாபுதுப்பேட்டை அருகே போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் 4 பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆட்டோவில் வந்த 2 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் செங்குன்றம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த ராம்கி (25), பாக்கம் அருகே நத்தம்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா (28) என்பதும், கஞ்சா மணி கோஷ்டியை சேர்ந்த இவர்கள், ரவுடி மதிவாணனை கொலை செய்துவிட்டு ஆட்டோவில் தப்பி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஆட்டோ, 4 பட்டாக்கத்தி மற்றும் அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், தலைமறைவான கஞ்சா மணியின் சகோதரர் பிரபா (எ) பிரபாகரன் உள்பட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
திருத்தணியில் புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
அஞ்சிவாக்கம் - குருவாயல் இடையே இருள் சூழ்ந்த புதிய மேம்பாலம்: விபத்து, திருட்டு அதிகம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 336 மனுக்கள் பெறப்பட்டன
108 ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது: அவசர காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆம்புலென்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டு
பள்ளி கட்டிடம் கட்ட பள்ளம் தோன்றியபோது 2 அடி புத்தர் சிலை கண்டெடுப்பு
குளம், குட்டை அமைத்தல், தூர்வாருதல் இணையத்தில் பதிவேற்றுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!