SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி மாவட்டத்தில் போதை, விபத்துக்கள் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் பேச்சு

5/12/2022 5:49:36 AM


நாகர்கோவில், மே 12: குமரி மாவட்டத்தில் போதை பழக்கமும், விபத்துக்களும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்று எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் கூறினார். நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் போதை ஒழிப்பு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கல்லூரி முதல்வர் பத்மா தலைமை வகித்தார். தாளாளர் ஆசீர் பாக்யசிங் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் பங்கேற்று பேசியதாவது: கல்வியுடன் சமுதாய விழிப்புணர்வு பணியிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட வேண்டும். தற்போது குமரி மாவட்டத்தில் போதை மற்றும் விபத்து மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இந்த பிரச்னையில் இருந்து மீண்டு வர பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகளின் ஒத்துழைப்பு தேவை. தங்கள் பகுதிகளில் நடைபெறும் சமூக சீர்கேடுகள் தொடர்பாக காவல்துறையின் ஹெல்ப் லைன் நம்பர் 70103 63173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எந்த விதமான பிரச்னைகள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். இந்த நம்பருக்கு போன் செய்து பேச முடியாது. வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். சம்பவத்தை வீடியோ பதிவு செய்தும் அனுப்பி வைக்கலாம்.

தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். இதில் வரும் புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். நான் பதவி ஏற்று சுமார் 45 நாட்கள் ஆகின்றன. இதில் வந்த தகவல் மூலம் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைத்தால் குற்ற நடவடிக்கைகளை நிச்சயம் குறைக்க முடியும். தகவல் தெரிவிப்பவர்கள் காவல்துறை விசாரணைக்கு அழைக்கும் என்ற அச்சம் கொள்ள தேவையில்லை. தகவல் தெரிவிப்பவர்களை எந்த வகையிலும் காவல்துறை தொந்தரவு செய்யாது. சமூகத்தை நல்ல விதமாக கட்டமைக்க மாணவ, மாணவிகள் ஒத்துழைப்பு அவசியம் ஆகும்.

போதைக்கு அடுத்த படியாக குமரி மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது விபத்துக்கள். சிறிய மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு  குறைந்தது 4,5 விபத்துக்கள் நடக்கின்றன. இதில் உயிரிழப்பவர்களும் உண்டு. பண பிரச்னை, சொத்து பிரச்னைகளை காவல்துறை தீர்த்து வைக்கலாம். உயிர் போய் விட்டால் யாராலும் அதை திரும்ப பெற்று தர முடியாது. எனவே வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அவசியம் ஆகும். ஒரு சிலர் ஹெல்மெட்டை அணியாமல் பைக்கின் முன் பகுதியில் வைத்துள்ளனர். காவல்துறை சோதனை நடக்கிறது என தெரிந்தால் அதை அவசர, அவசரமாக தலையில் மாட்டி ெகாள்கிறார்கள்.

காவல்துறைக்கு அஞ்சி நீங்கள் ஹெல்மெட் அணிய வேண்டாம். உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்வதற்காக, குடும்ப நலனுக்காக ஹெல்மெட் அணியுங்கள்.  பல வருடமாக பைக் ஓட்டுகிறேன். இதுவரை விபத்தில் சிக்கியதில்லை. நான் எதற்கு ஹெல்மெட் அணிய வேண்டும். எங்கள் உயிரை  காப்பாற்ற எங்களுக்கு தெரியும் என்கிறார்கள். காவல்துறை பொதுமக்களுக்காக சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. சட்டம் அனைவருக்கும் சமம் ஆகும். எனவே பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும். சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், அக்கம் பக்கத்தினரையும் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்ட அறிவுறுத்துங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


பெற்றோர், ஆசிரியர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி., வாழ்வில் முன்னேற பெற்றோர், ஆசிரியர்களை மதிப்புடன் நடத்துங்கள். அவர்கள் தான் உங்களை நல்வழிப்படுத்தும் மிகப்பெரிய சக்தி என்றார். காவல்துறை ஹெல்ப் லைன் நம்பர் தொடர்பாக மாணவிகளுக்கு விளக்குவதற்காக 70103 63173 என்ற எண்ணில் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் ஒரு வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்தார். அதில் மாலை வேளையில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே சிலர் நின்று மாணவிகளை கிண்டல் செய்வதாக கூறி இருந்தார். காவல் துறை ஹெல்ப் லைனில் இது பதிவானது. அதன்படி நேற்று மதியம் முதல் போலீஸ் ரோந்து வாகனம் கல்லூரி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்