மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கில் பறிமுதல் செய்த பைக்கை திருடி விற்க முயன்ற காவலர் கைது: கூட்டாளிகள் இருவரும் சிக்கினர்
4/20/2022 5:34:11 AM
சென்னை: மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடி விற்க முயன்ற காவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாப்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (36). மெரினா காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர், போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி பணி முடிந்து போதையில் வீட்டிற்கு வந்த ஜெயசந்திரன், மனைவி தேன்மொழியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக காவலர் ஜெயசந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மது அருந்த பணம் இல்லாததால் காவலர் ஜெயசந்திரன் வீட்டில் உள்ள பொருட்களை விற்று, அதன்மூலம் குடித்து வந்துள்ளார். இவர், காவலர் என்பதால் அடிக்கடி மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கம். அந்த காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதை பார்த்த காவலர் ஜெயசந்திரன், குடிக்க பணம் இல்லாதால் நேற்று முன்தினம் காவல் நிலைய பின்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த பறிமுதல் மொபட் ஒன்றை காவலர்களுக்கு தெரியாமல் திருடி எடுத்து சென்றுள்ளார்.
பின்னர், அதை தனது கூட்டாளிகளான மயிலாப்பூரை சேர்ந்த கார் டிரைவர் அருள்பிரகாஷ் (52), லஸ் கார்னர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர் நாகராஜன் (50) ஆகியோர் உதவியுடன், மயிலாப்பூர் ரங்கநாதபுரம் தெருவில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் விற்க முயன்றுள்ளார். அப்போது, கடை உரிமையாளர் கபிலன் (40), மொபட்டில் மயிலாப்பூர் காவல் நிலைய குறியீடு இருக்கிறதே என்று கேட்டுள்ளார். அதற்கு ஜெயசந்திரன், இது என்னுடைய வண்டிதான் நான் போலீஸ் என்று கூறி வாகனத்தை எடை போட்டுவிட்டு, அதற்கான பணத்தை தரும்படி கூறியுள்ளார். சந்தேகமடைந்த கடை உரிமையாளர், சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட மொபட்டை காவலர் ஜெயசந்திரன் திருடி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் காவலர் ஜெயசந்திரன், அவரது கூட்டாளிகளான கார் டிரைவர் அருள் பிரகாஷ், நாகராஜன் ஆகியோர் மீது ஐபிசி 379 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள், இதுபோல் வாகனங்களை ஏதேனும் திருடி விற்பனை செய்துள்ளாரா என்று மயிலாப்பூர், மெரினா, பட்டினப்பாக்கம் காவல் நிலையங்களில் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட காவலர் உள்பட 3 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்ட வாகனத்தை காவலரே திருடி விற்பனை செய்ய முயன்ற சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் கிடப்பில் மழைநீர் கால்வாய் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ
சென்னை எம்டிசி பஸ்களை தனியாருக்கு வழங்குவதா? அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!