பறக்கின் கால்வாய் பகுதிகளில் 90 ஆக்ரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
1/12/2022 12:11:16 AM
நாகர்கோவில், ஜன.12: நாகர்கோவில் பறக்கின் கால்வாய் கரையில் 90 ஆக்ரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. நாகர்கோவில் பழையாற்றில் இருந்து சபரி அணை வழியாக சுசீந்திரம் பறக்கை குளத்திற்கு தண்ணீர் செல்ல பறக்கின் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகரில் வயல்கள் வீடுகளாக மாறியதை அடுத்து, பறக்கின் கால்வாய் ஒட்டுமொத்த நாகர்கோவில் மாநகரின் கழிவுநீர் கலக்கும் குமரி கூவமாக மாறி விட்டது. இதற்கிடையே இதன் கரையோரம் ஒழுகினசேரி முதல் குளத்தூர் வரை 200க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த கால்வாயை தூர்வார முடியாமல் மிதமான மழைக்கே கூட தாக்கு பிடிக்க முடியாமல் ஊருக்குள் வௌ்ளம் புகுந்து விடுகின்றன. பல ஆண்டுகளாக நீடித்த இந்த பிரச்னைக்கு தீர்வு காண இதன் கரையோரம் வீடுகள் கட்டியோருக்கு பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் வங்கி கடன் உதவி பெற்று தந்து, மாற்று வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு சிலர் மாறி சென்று விட்டாலும் பலர் செல்லவில்லை.
மாவட்ட நிர்வாகம் வழங்கிய அடுக்குமாடி வீடுகள் புறநகர் பகுதி என்பதால் பலரும் வீடுகளை காலி செய்ய மறுத்து வந்தனர். இந்நிலையில், கோட்டாறு ரயில் நிலையம் அருகே சக்தி நகர் முதல் குளத்தூர் வரை 147 வீடுகளை இடித்து அகற்ற பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை, ஆர்.டி.ஓ சேதுராமன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கெபின் ஜாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஆக்ரமிப்பு வீடுகளை இரு குழுக்களாக இடிக்க தொடங்கினர். இதில், குளத்தூர் பகுதியில் உள்ள மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் சார்பாக வழக்கறிஞர் ஜவகர் அதிகாரிகளிடம் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நீங்கள் வழங்கிய நோட்டீசிற்கு சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க கால அவகாசம் அளித்திருக்க வேண்டும். மேலும் குளத்தூரில் உள்ள 75 வீடுகளுக்கு நீங்கள் மாற்றிடம் வழங்கவில்லை. எனவே மாற்றிடம் வழங்கி விட்டு அகற்றும் பணியை தொடருங்கள். முதலில் மிகவும் வறுமையில் வாடுபவர்களுக்காவது மாற்று இடம் வழங்குங்கள் என்றார்.
இதனையடுத்து அங்கு ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கலெக்டர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தகுதியானவர்களை கண்டறிந்து மாற்றிடம் வழங்கப்படும். மேலும் வீடுகளை காலி செய்ய போதிய அவகாசம் பெற்று தரப்படும் என தாசில்தார் சேகர் கூறியதை அடுத்து, அங்கு மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து சக்திநகர் மற்றும் தாமரைக்குளம் தெரு பகுதியில் 90 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. தாமரை குளம் தெருவிலும் சில வீடுகளுக்கு மாற்றிடம் வழங்கப்பட வில்லை என சிலர் தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணை செய்து வேறு எங்கும் வீடு அல்லது மாற்றிடம் இல்லை எனில் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் மாற்றிடம் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
குமரியில் பரவலாக பெய்த சாரல் மழை
ஓடும் பஸ்சில்பெண்ணிடம் செயின் அபேஸ்
கன்னியாகுமரியில் பைக் அரசு பஸ் மோதல் மாணவர் உள்பட 2 பேர் பலி: வாலிபர் படுகாயம்
குமரி கடலில் சூறைக்காற்று விசைப்படகுகள் கரை திரும்பின மீன்பிடி தொழில் பாதிப்பு
குமரி முழுவதும் சூறைக்காற்றுடன் மழை
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி பயணிகள் மகிழ்ச்சி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!