SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியல் விளையாட்டில் அதிரப்போகுது புதுச்சேரி என்.ஆர் காங்கிரசை பாஜக உடைக்குமா?

4/17/2021 5:24:00 AM

 முதல்வர் பதவிக்கு மாஸ்டர் பிளான்
ரங்கசாமியின் அடுத்த மூவ்

புதுச்சேரி, ஏப். 17:  புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன.  வாக்குப்பதிவுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்க வேண்டுமென என். ஆர் காங்கிரஸ் தரப்பில் பாஜகவுக்கு  பெரும் அழுத்தம் கொடுத்தது. இதனால் கூட்டணி இறுதி செய்ய முடியாமல் கடைசி நேரம் வரை இழுபறி நீடித்தது. முன்னதாக தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பாஜக  தேசிய தலைவர் ஜேபி நட்டா  முதல்வர் வேட்பாளர் குறித்து பேசாததும், பாஜக தனிப்பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் என பேசியதும் கூட்டணிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது. ஒருவழியாக ரங்கசாமியை கடைசி கட்டத்தில் சமாதானம் செய்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை ஏற்பார் என  பாஜக தலைமை அறிவித்தது. இருப்பினும் முதல்வர் யார்? என்பதை தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்யும் என ஜகா வாங்கியுள்ளனர்.  அதன்பிறகு இரண்டு முறை பிரசாரத்துக்கு  புதுச்சேரி வந்த  பிரதமர் மோடி, தேர்தலில் வெற்றிப்பெற்றால் ரங்கசாமிதான் முதல்வர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பேசவில்லை.  இதனால் தேஜ  கூட்டணி தாமரை இலைமேல் தண்ணீர் இருப்பதை போன்று சரியாக ஒட்டவில்லை.  அதே நேரத்தில் ரங்கசாமி  பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம், நான்தான் முதல்வர் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என மக்களிடம்  பேசினார். இருப்பினும் ரங்கசாமியை பாஜக முதல்வராக ஏற்குமா? என்பது என். ஆர் காங்கிரசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பேசுப்பொருளாக  இப்போது மாறியிருக்கிறது.  

அதே நேரத்தில் அதிக இடங்களில் பாஜக வெற்றிபெற்றால் நமச்சிவாயத்தைதான் முதல்வராக்குவார்கள் என்ற மற்றொரு கருத்தும் நிலவிவருகிறது.  எனவேதான் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு இதே கூட்டணி நீடிக்குமா? என்பதுதான் பலரின் கேள்வியாக எழுந்திருக்கிறது. மத்தியில் பாஜக அரசு இன்னும் 3 ஆண்டுகளுக்கு இருக்கும் பட்சத்தில் என்.ஆர் காங்கிரசை பாஜக  உடைத்து தனது அரசியல் திட்டத்தை உறுதி செய்யும் எனவும் பேச்சுகள் உலாவருகிறது. இது போன்ற சூழலில் ரங்கசாமி என்ன முடிவை எடுப்பார் என்பது குறித்து புதுச்சேரி அரசியலில் இப்போதே பலர் பந்தயம் கட்ட துவங்கிவிட்டனர். அதே நேரத்தில் ரங்கசாமியை பொறுத்தவரை முதல்வர் பதவி தமக்குதான் என்பதில் இன்னமும் திட்டவட்டமாக இருக்கிறார்.  தாமரையை மலரவைத்துவிட வேண்டும் என்பதற்காக பல திட்டத்துடன் பாஜக தனது அரசியல் விளையாட்டை அடித்து விளையாடுவதில் உறுதியாக நிற்கிறது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு  பல அரசியல் திருப்பங்கள் நிகழலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை ரங்கசாமியை ஏமாற்றும் வகையில்,  பாஜக துரோகமிழைத்தால் அரசியலில் பல மாற்றங்கள் உருவாகும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்ற பார்முலாவை ரங்கசாமி கையாள்வார் என்றே கூறப்படுகிறது. ரங்கசாமியை அரசியல் சதுரங்கத்தில் வீழ்த்தும் ஆயுதத்தை பாஜக கையில் எடுத்தால் திமுக- காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரிக்க தயார் நிலையில் உள்ளனர்.  தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுடன் கூட்டணி முடிவில் இருந்த ரங்கசாமியை தொடர்பு கொண்ட காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் எங்களின் அரவணைப்பும், ஆதரவு கரமும் உங்களுக்கு எப்போதும் உண்டு கவலைப்பட வேண்டாம் என கொக்கியை முன்கூட்டியே போட்டு வைத்துள்ளனர். இதையெல்லம் வைத்தே  ரங்கசாமி நான்தான் முதல்வர் என்பதை அடித்து கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பாஜக வேறு ஒரு திட்டத்தையும் கடைசி கட்ட ஆயுதமாக பயன்படுத்த இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
ரங்கசாமியின் முதல்வர் விருப்பத்தை நிறைவேற்ற முன் வந்தால், அதற்கு பரிசாக என். ஆர் காங்கிரசை பாஜகவில் கரைத்துவிட வேண்டுமென்ற நிபந்தனை முன்வைக்கப்பட இருக்கிறது. இப்போதைக்கு ரங்கசாமி உள் உணர்வு எல்லாம், தன்னை வீழ்த்த துடிக்கும் சக்திகளுக்கு எதிராக  நிற்கும் காங்கிரசும் திமுகவும் கூடுதல் இடங்களில் வெல்ல வேண்டும் என்பதாகவே இருக்கிறது. புதுச்சேரியின் அரசியல் சதுரங்கத்தில் மே 2ம் தேதிக்கு பிறகு எத்தனை காய்கள் வெட்டப்படும் என்பதில்தான் எல்லாமும் இருக்கிறது.

இது குறித்து என். ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மனநிலை எப்படியாக இருக்கிறது என்பது குறித்து கேட்டபோது: ரங்கசாமியை பாஜக முதல்வராக ஏற்றுத்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு வேறு வழியில்லை. என். ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை முன்னிறுத்தியே பாஜகவும் பிரசாரம் செய்திருக்கிறது. குறிப்பாக பாஜக வேட்பாளர்கள் பலர்  நீங்கள் பிரசாரத்துக்கு வந்தால்தான் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என காத்திருந்து பிரசாரத்துக்கு அழைத்து சென்றனர். ஒருவேளை பாஜக துரோக அரசியலை கையில் எடுத்தால், காங்கிரசும்- திமுகவும் எங்களை காத்து நிற்கும். புதிய கூட்டணி உருவாகி ரங்கசாமி முதல்வர் பதவிக்கு வருவார். இதனையெல்லாம் கணக்கில் கொண்டு  பாஜக சிந்திக்கும். மாநில மக்கள், எதிர்கால நலன் என்பதை மனதில் வைத்து  கூட்டணி அமைச்சரவையில் பாஜக பங்கேற்கும். பாஜக அப்படியெல்லாம் ஒரு அநாகரீக அரசியலை முன்னெடுக்காது என்று நம்புகிறோம். அதற்கு மேல் நடந்தால் மக்கள் பார்த்து கொள்வார்கள் என தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்