SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை கூற இயலாததால் மக்கள் கவனத்தை திசை திருப்ப எதிர்கட்சியினரை பிரதமர் குறை கூறுகிறார் காங். தேசிய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி

4/3/2021 6:06:38 AM

நாகர்கோவில், ஏப்.3: காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரின்ஸ் (குளச்சல்), விஜயதரணி (விளவங்கோடு), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) ஆகியோர் நாகர்கோவிலில் நேற்று மாலை நிருபர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திரமோடி இன்று (நேற்று) குமரி மாவட்டம் வருகை தந்தார். அவர் பேசும்போது வளர்ச்சிக்கான திட்டம் குறித்து ஏதும் பேசவில்லை. அவரது பேச்சில் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை பற்றி அவர் ஏதும் பேசவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு என்ன செய்தது? அவரால் எதனையும் கூற இயலவில்லை. பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க அரசு தமிழகத்திற்கு செய்ததையும் கூற இயலவில்லை.  பிரதமர் மோடி பேசும்போது காமராஜர், நேசமணி ஆகிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சங்பரிவார் அமைப்புதான் காமராஜரை டெல்லியில் வைத்து தாக்கினார்கள், அவர் தங்கியிருந்த இடத்திற்கு தீ வைத்தார்கள். இன்று (நேற்று) புனித வெள்ளியை மோடி நினைவு கூர்ந்தார். ஒடிசாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் கிரகாம் ஸ்டெயின், அவரது மகன்களை சங்க பரிவார் கும்பல் உயிரோடு கொளுத்தி கொலை செய்தார்கள். உ.பி.யில் சமீபத்தில் கன்னியாஸ்திரியை தாக்கினார்கள்.

 பா.ஜ.க-வில்தான் அதிகமான வாரிசு அரசியல் உள்ளது. அமித்ஷா மகன் ஜெய்ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுனில் கவாஸ்கர், வீராட் கோலி போன்றோருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த வேத பிரகாஷ் கோயல் மகன் ஆவார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில சட்ட மேலவையில் உறுப்பினராக இருந்த கங்காதர்பந்த் பட்னாவிஸின் மகன். இவரது அத்தை ஷோபா பட்னாவிஸ் மகாராஷ்டிரா சட்டசபையில் அமைச்சராக இருந்தவர். அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே பால்வே மகாராஷ்டிரா சட்டசபையில் அமைச்சர்.
கோபிநாத் முண்டேவின் மற்றொரு மகள் எம்.பி. முன்னாள் உத்தரபிரதேச முதல்வர்  கல்யாண் சிங்கின் மகன் ராஜ்வீர் உத்தர பிரதேசம் இதா தொகுதி எம்பி. ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் உத்தரபிரதேச பாஜ செயலாளர். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங் எம்பி. வசுந்தரா ராஜேவின் சகோதரி யசோதரா ராஜே சிந்தியா மத்திய பிரதேசத்தில் தொழில் அமைச்சர். முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா ஜார்க்கண்ட் ஹசரிபாக் தொகுதியின் எம்பி.

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் மகன் ஷிவ்மோகா தொகுதி எம்.பி. இவர்கள் எல்லாம் காங்கிரசை சேர்ந்தவர்கள் இல்லை. பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே மோடி தனது முகத்தை முதலில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும்.  திமுக தலைவர் பதவியை பற்றி கூறுகின்ற மோடி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை எவ்வாறு நடத்தினார் என்பது நாடறியும். காங்கிரஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டார்கள். பணபலத்தில் ஆட்சிகளை கவிழ்க்கிறார்கள்.  ஐந்து ஆண்டுகளாக அதிமுகவை அடக்கி ஆண்டது. பா.ஜ.க விரைவில் அதிமுகவை சாப்பிட்டு விடும். விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்று பிரதமர் இன்றும் கூறுகிறார். அவர் 2014ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோதும் இதனையே கூறினார். பெண்கள் நலன் பற்றியோ, இளைஞர்கள் நலன் பற்றியோ, வேலைவாய்ப்புகள் பற்றியோ, சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் பற்றியோ இன்று அவர் எதுவும் பேசவில்லை. அவரது கட்சியின், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை கூட அவர் அறிமுகம் செய்யவில்லை.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை, சாதனைகளை அவரால் கூற இயலாததால், அந்த குறையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப எதிர்கட்சிகளை குறைகூறி சென்றுள்ளார். புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படுவதால் உள்ளூர் மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார். தேர்தலுக்கு பிறகு மீனவர்களுக்காக புதிய துறைமுகம் கட்டப்படும் என்கிறார். அவரது வருகை குமரி மாவட்ட தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்கட்சியினரை ஒடுக்க வருமான வரித்துறையை பிரதமர் பயன்படுத்துகிறார் நாகர்கோவிலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் நிருபர்களிடம் கூறியதாவது:  பிரதமர் மோடியின் தாளத்திற்கு ஏற்ப இ.பி.எஸ், ஒ.பி.எஸ் ஆடுகிறார்கள். மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை குறைப்பதாக அறிவித்தது. பின்னர்  வட்டி குறைப்பை கைவிட்டுவிட்டதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். தேர்தலுக்கு பிறகு இதனை நிறைவேற்றுவார்கள். அவர்களுக்கு ஏழை மக்களை பற்றி கவலையில்லை, கார்பரேட்களின் வளர்ச்சி பற்றியே கவலைப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை அடக்கி ஒடுக்க பிரதமர் மோடி வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார். அந்த அமைப்புகளை அவர் சுதந்திரமாக செயல்பட விடவில்லை. பாஜ வேட்பாளரின் காரில் இவிஎம் ஐ எடுத்து சென்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். பண மதிப்பிழப்பு நேரத்தில் நாடு முழுவதும் சொத்துக்கள் வாங்கி குவித்த பாஜவினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழுக்கும், தமிழகத்திற்கும் ஆதரவாக பேசும் அவர் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ₹643.84 கோடி நிதி ஒதுக்கியள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஒடியா ஆகியவற்றுக்கு சேர்த்து ஒதுக்கிய நிதி ₹29 கோடிதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்