SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்மிடிப்பூண்டி அருகே வெடிகுண்டுகளை செயலிழக்கும் போது வீடுகளில் அதிர்வு

3/25/2021 5:29:48 AM

கும்மிடிப்பூண்டி, மார்ச். 25:  கும்மிடிப்பூண்டி அருகே ராமச்சந்திராபுரம் பகுதியில்  வெடிகுண்டுகளை செயலிழக்கும் போது  வரும் சத்ததால்  வீடுகளில் அதிர்வு  ஏற்படுவதாகவும் குழந்தைகள் அஞ்சுவதாகவும் வட்டாட்சியரிடம்  புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள பழைய கிணற்றில், கடந்த 2006ம் ஆண்டு, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஜென்சன் மற்றும் பாபு என்கிற முகிலேசன் என்ற சிறுவர்கள் கிணற்றில் ஒரு மூட்டையில் இருந்த துப்பாக்கி தோட்டாக்களை எடுத்து விளையாண்டபோது சிறுவர்கள் இருவரும் இதனை விளையாட்டு பொருள் என நினைத்து கற்களை வைத்து உடைத்தபோது வெடித்துச் சிதறியது.  இதில், படுகாயமடைந்த சிறுவர்களை சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைகண்ணன் உத்தரவின்பேரில், பொறுப்பிலிருந்த கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நவீன் சந்தர் நாகேஷ் தலைமையிலான போலீசார்,  ஒட்டுமொத்த கிணற்று நீரையும் மின் மோட்டார் மூலம் வெளியேற்றி கிணற்றுக்குள் தேடியபோது, ஏ.கே. 47 ரகம் மற்றும்  சிறிய ரக துப்பாக்கிகள் மூட்டை மூட்டையாய் சிக்கின. ஏ.கே. 47 துப்பாக்கியின் தோட்டாக்கள் முதல் சிறிய ரக துப்பாக்கி தோட்டாக்கள் வரை இருந்தன.

இதையடுத்து, காவல்துறையினர் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள 22 இரும்பு உருக்காலைகளை தீவிரமாக கண்காணித்தபோது, கண்ணிவெடி குண்டுகள் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் என ஒவ்வொரு இரும்பு உருக்காலைகளிலும்  டன் கணக்கில் சிக்கின. அதிர்ச்சியடைந்த காவல்துறை உயர் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு அவற்றின் தன்மையை ஆராய்ந்தனர். அப்போது, அவை வெளிநாட்டிலிருந்து உருக்காலைக்கு பழைய இரும்புகள் என்ற போர்வையில் மூலப்பொருளாக இறக்குமதி செய்யப்பட்டவை என்பது தெரிந்தது. அமெரிக்க நாட்டின் முத்திரையும் பொறிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் அவை எந்த நேரத்திலும் வெடிக்கும் தன்மையுடன் இருப்பதை தெரிவித்து மூடிவைத்துள்ள தனியார் தொழிற்சாலையில் குண்டுகளை புதைத்து வைத்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பூனாவில் உள்ள  கார்கில் ரேஞ்ச் (அப்போதைய) அதிகாரியான சுபேதார் அப்துல்  ஜபார், கடந்த 16-10-2008 அன்று இந்த குண்டுகளை நேரில்  பார்வையிட்டு, பெரும்பாலான குண்டுகள் வெடிக்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்து அதனை அழிக்க கடலுக்கு கொண்டு செல்ல அரசு முனைப்பு காட்ட வேண்டும் எனவும், அதற்கு ஆகும் செலவினத்தை தமிழக அரசுதான் ஏற்க வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து கடந்த வாரம் 20 தேதி முதல் சூரப்பூண்டி ஊராட்சி, ராமச்சந்திராபரம் பகுதியில்  மேற்கண்ட வெடிகுண்டுகளை ராணுவ அதிகாரிகள் அணில் கபூர், கேப்டன் விக்ரம், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் முன்னிலையில் செயலிழக்க செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் தொடர்ந்து வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் போது அருகே உள்ள மாநெல்லூர், எம். ஜி.ஆர் நகர், மல்லய்யா  தெரு,மாநெல்லூர் காலனி, குந்தேலிமேடு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சுவர்கள் விரிசல்  அடைந்துள்ளது.

 அத்தோடு கிராமத்தில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டியில் உள்ள தூண்கள் உதிர்ந்து கீழே விழுந்துள்ளது, வீடுகளில் உள்ள குழந்தைகள் சத்தம் அதிகம் கேட்பதால்  அஞ்சுகின்றன. இதனை உணர்ந்த கிராமப்புற மக்கள் சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன்பின்பு நேற்று வெடிகுண்டுகள் வெடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் உள்ளிட்ட ஊர்மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரிடம் மேற்கண்ட இடத்தில் வெடிகுண்டுகளை செயலிழக்கும் பணிகளை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்கள் . இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • planet Vaikundam

  ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

 • 04-12-2021

  04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • lunch-ofz

  லஞ்ச் டைம் ஆச்சா...இதோ வந்துட்டோம்: வேலை சுமையில் ஓடுபவர்களுக்கு அலுவலகத்திற்கு சென்று சாப்பாடு கொடுத்து அசத்தும் ஒரே குடும்பத்தினர்..!!

 • Ministers

  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

 • Ohmicron_Rajiv Gandhi_Bed

  ஓமைக்ரான் எதிரொலி; வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தயார் நிலையில் 150 படுக்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்