SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரம்ப சுகாதார மையத்தின் அலட்சியத்தால் 12 ஆண்டுகளாக பிறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்: அலைகழிக்கப்படும் பெற்றோர்

3/16/2021 3:35:01 AM

செய்யூர்,  மார்ச் 16: ஆரம்ப சுகாதார மையங்களில் பிறக்கும் குழந்தைகளின் பதிவேட்டை குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பாமல் சுகாதாரத் துறையினர் அலட்சியம் காட்டி வருவதால் கடந்த 12 வருடங்களாக தங்களின் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ் பெற முடியவில்லை என குழந்தைகளின் பெற்றோர்கள் குமுறுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சூனாம்பேடு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் கடப்பாக்கம், பொளம்பாக்கம், பெரிய கயப்பாக்கம் ஆகிய நான்கு துணை சுகாதார நிலையங்கள் வருகின்றன. ஆண்டுதோறும் இந்த சுகாதார மையங்களில் சராசரி 80 முதல் 100 குழந்தைகள் பிறக்கின்றனர். இம்மையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு 30 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ்கள் அம்மையத்திலேயே வழங்கப்படுகின்றது. குறிப்பிட்ட நாட்களில் சான்றிதழ்கள் வாங்க தவறும் பெற்றோர்கள் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.  சான்றிதழ்கள் பெறாத குழந்தைகளின் பதிவேட்டை அந்தந்த மைய சுகாதார அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆனால், சூனாம்பேடு ஆரம்ப சுகாதார மையத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகளோ குழந்தை பிறப்பு பதிவேட்டை   வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்காமல், பல வருடங்களாக இருப்பதாகவும், குழந்தைகள் பிறப்பு சான்றிதழ் கேட்க  சென்றால் தங்களை அங்கும் இங்கும் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகவும் பெற்றோர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர் ஒருவர் கூறியதாவது: பெரிய கயப்பாக்கம் துணை சுகாதார மையத்தில், எனது மனைவிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் பிறப்பு சான்றிதழ் வாங்க முடியவில்லை. அதனால், மறுமாதம் மையத்திற்கு சென்று சான்றிதழ் கேட்டேன். ஆனால், அங்குள்ள பணியாளர்கள் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று வாங்கிக்கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டனர். பின்னர்  வட்டாட்சியர் அலுவலகம் சென்று கேட்டபோது, இன்னும் துணை சுகாதார மையத்திலிருந்து பிறப்பு பதிவேடு எங்களுக்கு வந்து சேரவில்லை என கூறிவிட்டனர். நானும் சான்றிதழுக்காக பலமுறை அங்கும் இங்கும் நடந்து தற்போது 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும், சான்றிதழ் கிடைத்தபாடில்லை. சான்றிதழ் இல்லாததால் குழந்தையை பள்ளியில் சேர்க்க முடியவில்லை.

ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை, ஏன் குடும்ப அட்டையில் கூட என் குழந்தையின் பெயரை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எங்களைப்போல், பெற்றோர்கள் பலர் இப்பிரச்னையால் பெருத்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம். மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள்தான் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து செய்யூர் வட்டாட்சியர் ராஜேந்திரன் கூறுகையில், ‘இதுகுறித்து புகார் எதுவும் எனக்கு வரவில்லை. இருப்பினும் அந்தந்த மைய சுகாதாரத்துறை அதிகாரிகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றார். சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார ஆய்வாளர் குமாரிடம் கேட்டதற்கு, முன்பெல்லாம் குழந்தை பிறப்பு சான்றிதழை கையால் எழுதி தந்துவிடுவோம். ஆனால், இப்போது கணினி பதிவேற்றம் செய்ய இருப்பதால் காலதாமதம் ஆகிறது. கடந்த 2009 முதல் இம்மையங்களில் பிறந்த குழந்தைகளின் பதிவேடு அனைத்தும் எங்களிடம் தான் உள்ளது. விரைவில் அனைத்து பதிவேடுகளும் கணினி பதிவேற்றம் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி விடுவோம்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்