SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரி அருகே பயங்கரம் வயலுக்கு சென்ற தாய், மகள் படுகொலை சொத்து தகராறு காரணமா? போலீசார் விசாரணை

3/2/2021 1:20:51 AM

கடலூர், மார்ச் 2: புதுச்சேரி அருகே வயலுக்கு சென்ற தாய், மகளை மர்மகும்பல் வழிமறித்து சரமாரி வெட்டி கொன்றது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி (48). இவர்களது மூத்த மகள் ஜீவஜோதிக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில், அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் விஜயலட்சுமி தனது இளைய மகள் சந்தியா (எ) மாதங்கி (24) மற்றும் மகன் சிவகுரு (எ) வசந்தகுமார் (20) ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார். இதில் சந்தியா அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு மேற்படிப்புக்காக தயாராகி வந்தார். வசந்தகுமார் கல்லூரி படித்து வருகிறார். இதனால் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி தேர்வு எழுதுவதற்காக மதுரைக்கு சென்றுவிட்டார். சிதம்பரம் குடும்பத்திற்கு சொந்தமான நிலம் கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி அடுத்த இடையார்பாளையம் கிராமத்தில் உள்ளது. இதில் விவசாயம் செய்து வரும் விஜயலட்சுமியும், அவரது பிள்ளைகளும் அடிக்கடி சென்று நிலத்தை பார்த்து வருவது வழக்கம். இந்த நிலத்திற்கு அருகில் சிறிய அளவிலான இடம் ஒன்றும் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக சிதம்பரத்தின் உறவினர்களுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.
 
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு விஜயலட்சுமி குடும்பத்தினருக்கு சாதகமாக வரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயலட்சுமியும், அவரது மகள் சந்தியாவும் தங்களது வயலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரையும், மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.அவ்வழியே வயல்வெளிக்கு சென்றவர்கள் 2 பெண்கள் வெட்டப்பட்டு பிணமாக கிடப்பது குறித்து தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொலை நடந்த இடம் தமிழக பகுதி என்பதால் ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாயை வரவழைத்தபோது, அது சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், சொத்து தகராறு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பு, கூலிப்படையினரை தூண்டி இந்த கொலையை செய்திருக்கலாம் என தெரிய
வந்துள்ளது. வயலுக்கு சென்ற தாய்-மகளை மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்