SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே அவலம் பராமரிப்பின்றி கிடக்கும் கழிப்பறை: தொற்று நோய் பீதியில் மக்கள்

1/20/2021 1:27:20 AM

ஆவடி: ஆவடி, புதிய ராணுவ சாலையில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு மனை மற்றும் கட்டிட உரிமை சான்றிதழ், வரி செலுத்துதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுதல் உள்பட பல்வேறு பணிகளுக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், பொதுமக்கள் தங்களது பகுதிகளுக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்காக அதிகாரிகளிடம் புகார் அளிக்க வந்து செல்கின்றனர். இதுபோல் வந்து செல்லும் மக்கள், இயற்கை உபாதைகளை கழிக்க மாநகராட்சி அலுவலகத்தை ஒட்டி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுமார் ரூ.20 லட்சத்தில், ‘நம்ம டாய்லெட்’ என்ற பெயரில் கழிப்பிடம் கட்டப்பட்டது. மக்களை கவரும் வகையில் இந்த கழிப்பறை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. எவர்சில்வர் பொருட்கள், சோலார் விளக்கில் கூடிய பச்சை நிறத்தில் அமைக்கப்பட்டது.

ஆரம்பத்தில், இந்த கழிப்பறையை, அப்போதைய நகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரித்தனர். இதன் விளைவாக நகராட்சிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் பயனடைந்தனர். தற்போது, கழிப்பறையை பராமரிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அங்கு வரும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை ஒட்டி அமைக்கப்பட்ட கழிப்பறையில் கதவுகள் உள்பட அனைத்து உபகரணங்களும் உடைந்து கிடக்கின்றன. மேலும், கழிப்பறையில் தண்ணீர் வசதியும் இல்லை.

இதனால், இங்கு வரும் பொதுமக்கள் சிலர் கழிப்பறையை பயன்படுத்தாமல், வெளியிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். மேலும், சிலர் கழிப்பறை உள்ளே சிறுநீர், மலம் கழித்து விட்டு அப்படியே சென்று விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுபோன்ற சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இங்கு வரும் பெண்கள் கடும் அவதியடைகின்றனர். மேலும், கழிப்பறையை சுற்றி சரக்கு வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்து விடுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோதிகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் அப்பகுதியில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்பட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதே போல், மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ‘நம்ம டாய்லெட்’ என்ற கழிப்பறை பராமரிப்பு இன்றி பாழாகிறது. ஒவ்வொரு கழிப்பிடத்தையும் பராமரிக்க ஒரு ஊழியரை நியமித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் இதனை காதில் வாங்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். பாரத பிரதமரின் ”தூய்மை இந்தியா” திட்டம் மூலம் பல்வேறு இடங்களில் கூடுதலாக கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்படுகிறது.

ஆனால், ஏற்கனவே கட்டிய ‘நம்ம டாய்லெட்’ முறையாக பராமரிப்பு இன்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கிடக்கிறது. இதனால், மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கில் வீணாகிறது. இதற்கிடையில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை ஒட்டிய கழிப்பறையில் உடைந்து கிடக்கும் கதவு உள்பட அனைத்து உபகரணங்களை சீரமைக்க வேண்டும். தினமும் முறையாக பராமரிக்க ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்