உணவுத் தொழிற்சாலை
2016-04-01@ 17:01:25

நன்றி குங்குமம் தோழி
சீக்ரெட் கிச்சன்
சமையலறையின் நடுவில் நின்று சுற்றிலும் ஒருமுறை பார்த்தேன். எத்தனை விதமான பொருட்கள், கருவிகள். நம் வீட்டில் அதிகபட்ச பொருட்களின் ஆக்கிரமிப்பு சமையலறையில்தானே இருக்கிறது? அரைக்க - அதிலும் பொடியாக அரைக்க ஒன்று, திரிக்க ஒன்று, கலக்க ஒன்று என்று எத்தனை விதம்?
வெவ்வேறு அளவுகளில், நிறங்களில், தரங்களில் எத்தனை பொருட்கள்? சாப்பிட ஒரு ஸ்பூன், ஐஸ்க்ரீம் எடுக்க தனியாக ஸ்கூப், தர்பூசணியை கூட கத்தியில் வெட்டாமல் அழகான உருண்டையாக எடுக்க ஒரு உபகரணம், கத்தி என்று எடுத்தாலே எத்தனை வகைகள்!
கொஞ்சம் பின்னோக்கி சென்றால் 4 பேர் இருக்கும் குடும்பத்துக்கு மொத்தமே ஒரு சாக்குப்பையில் கட்டக்கூடிய அளவுக்கே பாத்திரங்கள் இருக்கும். ஆட்டுக்கல்லும் அம்மியும் உரலும் உலக்கையும் மாவு திரிக்கும் கல்லும் மட்டுமே இயந்திரங்களாக இருந்தன. இப்போதோ இட்லி சாம்பார் சட்னி செய்ய எத்தனை பாத்திரம் உபயோகிக்கிறோம்? கிரைண்டர், மிக்ஸி, இட்லி குக்கர், தேங்காய் துருவ மிஷின், வெங்காயம் நறுக்க ஒன்று... இப்படி பல பக்கவாத்தியங்கள் இல்லாவிட்டால் நம்மால் ஒரு வேளை சாப்பாட்டைக் கூட சமாளிக்க முடியாது. காலை வேலையில் மின்சாரம் இல்லா நாட்களில் இதை எளிதாக உணரலாம்!
4 பேருக்கே இத்தனை இயந்திரங்கள் தேவைப்படுகிறதே? தினம் நானூறு, 4 ஆயிரம் என்று சமைக்கும் ஹோட்டல், கல்யாண மண்டபங்களில் எப்படி சமாளிப்பார்கள்? சீக்ரெட் கிச்சனில் இந்த இயந்திரங்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இதோ...
பைனாப்பிள் தனியாக பிரித்தெடுக்க, தர்பூசணியை
அழகான கோலிகுண்டு உருண்டைகளாக எடுக்க, சேவை பிழிய, சப்பாத்தி இட, வடை
போட... இப்படி ஏராளமாக சிறுசிறு கருவிகள் வீட்டுப் பயன்பாட்டுக்கு உள்ளது.
அதே போல் பெரிய அளவில் சமையல் செய்யவும் ஏகப்பட்ட இயந்திரங்கள் பல்வேறு
வசதிகளுடன் கிடைக்கின்றன.
தட்டுவடை, முறுக்கு பிழிய அச்சுகளுடன்,
கை முறுக்குக்கு தனியாக... ஆட்டோமேட்டிக் வடை சுடும் இயந்திரத்தில் ஒரு
இடத்தில் நீங்கள் மாவை கொட்டினால் இறுதியில் வடையாக வரும். ஒரு சிறிய ரன்வே
போன்ற பாதையில், சீரான அளவில், அழகாக, பிசிறின்றி, கொதிக்கும் எண்ணெயில்
பயணித்து, திருப்பி விடப்பட்டு, சரியான பொன்னிறத்தில் வடை பொரிக்கும்
இயந்திரத்தை பார்த்துக் கொண்டிருந்தாலே நாவில் நீர் ஊறும். தோசை, சமோசா,
சப்பாத்தி என்று எல்லாமே கை தொடாமல் ஒரே மாதிரியான அளவுகளில் சீராக
செய்யலாம்.
லட்டு, பேடா, உருண்டை இனிப்புகள், குலாப் ஜாமூன் என
எல்லாமே தேவையான அளவுகளில், அழுத்தத்தில், கைபடாமல் உருட்டி ஒரு மணி
நேரத்தில் 5 ஆயிரத்துக்கு மேலும் செய்யக்கூடிய வசதிகள் ஒரே மிஷினில்
உள்ளது. கைவிடாமல் கிளற வேண்டும் என்பதாலேயே அல்வா சில நேரம்
பாத்திரத்திலிருந்து வராமல் போய்விடும். அதற்கும் இயந்திரம் உண்டு. இந்த
இயந்திரங்கள் இந்தியாவில் சில பகுதிகளில் செய்யப்பட்டாலும், தமிழகத்தில்
கோவையே முன்னிலையில் உள்ளது.
எஸ்.எம். இண்டஸ்ட்ரீஸ் நிறுவனரும்
இந்த தொழிலில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ளவருமான என்.சங்கரமூர்த்தி,
திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு ட்ரே மற்றும் உணவு சமைக்கும் பெரிய
பாத்திரங்களை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். சேலம் ஸ்டீல் நிறுவனத்தின்
நேரடி முகவரான இவரது நிறுவனம், சுனாமியின் போது யுனிசெஃப் உடன் இணைந்து 5
ஆயிரம் தண்ணீர் டேங்க்குகள் தயாரித்து அளித்திருக்கிறது.
பெரிய
ஹோட்டல் அல்லது கல்யாண மண்டபத்துக்குத் தேவையான ஸ்டீம் பாய்லர் எனப்படும்
பெரிய இயந்திரங்கள், பல்வேறு அளவிலான கேஸ் ஸ்டவ், பர்னர்கள், சூடான உணவை
தள்ளிக்கொண்டு வரும் ட்ராலி, சர்வீஸ் கவுன்டர், சின்க் யூனிட், சப்பாத்தி,
புரோட்டா டேபிள், டைனிங் டேபிள்கள், ஹாட் கேஸ், சாட் கவுன்டர், சிப்ஸ்
கட்டிங், அரிசி சுத்தம் செய்யும் / கழுவும் இயந்திரங்கள், எல்.பி.ஜி. கேஸ்
பாய்லர், ஸ்டீம் குக்கிங் பாத்திரங்கள், இட்லி ஸ்டீமர், சைனீஸ் ரேஞ்ச்
எனப்படும் நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் போன்றவற்றுக்கான டேபிள்கள்.
தட்டுகள்
அடுக்கும் பெரிய அளவிலான ரேக்குகள், காபி மேக்கர், மாவு பிசையும்
இயந்திரம், வெஜிடபிள் கட்டர் என்று எண்ணிலடங்காத இயந்திரங்கள் இந்தத்
தொழிற்சாலையில் தயாராகி இந்தியா எங்கும் பயணிக்கிறது. எந்த இயந்திரத்தையும்
வாடிக்கையாளரின் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப வடிவமைத்து தயாரிக்க
முடியும் என்கிறார் சங்கரமூர்த்தி. ஸிக்மா கமர்ஷியல் கிச்சன்
எக்யுப்மென்ட் நிறுவனத்தின் தலைவர் சுந்தர பிரபு, நடுத்தர - அதே நேரம்
ஏராளமான வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் நுணுக்கமான இயந்திரங்களை
தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
பிபிஏ பட்டதாரியான பிரபு,
தன்னுடைய பத்தாண்டு அனுபவத்தில் பல்வேறு சோதனை முயற்சிகளை செய்து
வருகிறார். மொத்தமாக ஒரு ப்ளான்ட் அமைத்து தருவது இவருடைய தனிச்சிறப்பு.
அதாவது, ஜாம் தயாரிக்கும் ஒரு நிறுவனம் அமைக்க வேண்டும் எனில், இவர்
அதற்குத் தேவையான பழத்தை சுத்தம் செய்தல், பழத்திலிருந்து சாறு மற்றும்
சதைப்பகுதிகளைப் பிரித்தல், சூடாக்குதல், கலக்குதல் முதல் பேக்கிங் வரை
அனைத்துக்கும் இயந்திரம் வடிவமைப்பதுடன், அந்த நிறுவனம் நடத்த தேவையான
ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
பேக்கரி இயந்திரங்களும் இவரது
நிறுவனத்தின் தனிச்சிறப்பு. மாவு பிசைதல், ஸ்பைரல் மிக்ஸர், கேக் மிக்ஸர்,
ரொட்டி மிக்ஸர், பிரெட் ஸ்லைசிங் மிஷின், டீசல் அவன், எலெக்ட்ரிக் அவன்,
கேஸ் அவன், டோ டிவைடர் எனப்படும் ஒரே அளவாக மாவைப் பிரிக்கும் இயந்திரம்,
பன் டிவைடர், ஷீட்டர் எனப்படும் மாவை ஷீட் போன்று நகர்த்தும் இயந்திரம்,
காராசேவ் மிஷின், எண்ணெய் பலகாரங்களில் இருந்து எண்ணெயை பிரித்து எடுக்க
சின்ன கிரைண்டர் போன்ற அமைப்புடன் கூடிய ஆயில் எக்ஸ்ட்ராக்டர், பூந்தி
மிஷின், லேய்ஸ் சிப்ஸ் மிஷின், சிமென்ட் கலவை போன்ற அமைப்புடன் இருக்கும்
மசாலா கோட்டிங் மிஷின், உருளைக்கிழங்கு தோல் உறிக்கும் இயந்திரம், பருப்பு
கழுவி சுத்தம் செய்யும் கருவி, அல்வா மிஷின், சேமியா, நூடுல்ஸ் மிஷின்,
நிலக்கடலை வறுக்க... இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
சில
வகை சிப்ஸ்களில் மேலே ஒரு மிக மெல்லிய கோட்டிங் மசாலா இருக்கிறதல்லவா...
அதை நுணுக்கமாகச் செய்யக்கூட மிஷின் உள்ளது. கையால் சுத்தப்படுத்தி,
புடைத்து, கல் நீக்கி, ஊற வைத்து அரைத்து, ஈர மாவு அல்லது வெறும் மாவாகவோ,
மிக நைசான மாவு அல்லது ரவா பதமாகவோ - எல்லாமே ஒரு மிஷினில் செய்யலாம்.
அவ்வளவு ஏன்... துளி ரத்தம் வெளியில் தெறிக்காமல் கோழியை சுத்தம் செய்து
அளவான கறியாக வெளித்தள்ளும் இயந்திரம் கூட இப்போது இருக்கிறது.
தினம்
ஒரு ஆராய்ச்சி, தினம் ஒரு கண்டுபிடிப்பு என்று மலைக்க வைக்கும் படியாக
முன்னேறிக் கொண்டிருக்கிறது உணவுப்பொருள் உபகரணத் துறை. இருப்பினும், நம்
சின்னஞ்சிறு வீட்டில், நம் குடும்பத்தினருக்கு விரும்பிச் சமைக்ைக யில்
நேரமும் வாய்ப்பும் இருப்பவர்கள், என்றேனும் ஒரு நாள் அம்மி, குழவி,
ஆட்டுரல் போன்றவற்றை உபயோகிப்பதும் குழந்தைகளை அதில் ஈடுபடுத்துவதும்
அடுத்த தலைமுறைக்கு அவற்றைக் கடத்துவதற்கான வாய்ப்பாக அமையும். இந்தச்
சங்கிலி அறுந்தால், நம் பாரம்பரியம் தெரியாமலே போக வாய்ப்புண்டு.
உபயோகிக்கிறோமோ
இல்லையோ... இடமும் வாய்ப்பும் இருந்தால் வீட்டில் ஒரு சிறிய அம்மியாவது
வைத்திருங்கள். சமையல் என்பது வெறும் மசாலாவோ பல்வேறு பொருட்களின் கலவையோ
மட்டுமே அல்ல... ஓர் இடத்தின் பாரம்பரியம், ஒரு சமுதாயத்தின் பழக்கம், ஒரு
நாகரிகத்தின் வளர்ச்சியும் கூட! அதோடு, நம் திறமைக்கும்
விருப்பத்துக்கும் உரிய ஒரு கலை. இதுவே நம் குடும்பத்தின் ஆரோக்கியம்...
அவர்களுக்கான நம் அன்பும் அக்கறையும் கலந்த சுவையும் கூட!ஹேப்பி குக்கிங்
:-)
Tags:
Food Factoryமேலும் செய்திகள்
சிக்கன் கறி தோசை
ஆட்டையாம்பட்டி முறுக்கு அமெரிக்காவில் கமகமக்குது
ஹோட்டல் உணவை வீட்டிலேயே செய்யலாம்!
தேன் மிட்டாய்
இலந்தைவடை
கமர் கட்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!