SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதியைக் காக்கும் நிசும்பசூதனி : தஞ்சாவூர்

2015-07-27@ 14:29:24

கொடுங்கோன்மையின் முழு உருவான சும்ப-நிசும்ப சகோதரர்களின் அணுக்கத் தொண்டர்களான சண்டனும், முண்டனும் இமயக்கிரியில் திரிந்திருந்தபோது கௌசிகீயை கண்டனர். சிம்மத்தின் மீது அமர்ந்த அந்த அழகுப் பெட்டகத்தைப் பார்த்து திகைத்துப் போயினர். தம் அசுரத் தலைவர்களுக்கு இவளை அர்ப்பணித்தால் என்ன என்று குரூரமாக யோசித்தனர். சும்பனிடம் தாம் கண்ட பேரழகுப் பெண்ணைப் பற்றிச் சொல்ல அவனுக்குக் காமம் தலைக்கேறியது, இவளே மாதேவி என அறியாத அற்பன் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள யோசித்தான். அவனின் அழிவுக்கான ஆரம்ப காரணமாக அது அமைந்தது.

 அசுரன் தன் அரசவையில் அழகிய குரலையுடையோனான சுக்ரீவன் என்பானை அழைத்தான். ‘எப்படியாயினும் இனிய மொழி பேசி அந்தப் பேரெழில் பெண்ணை அரசவைக்கு அழைத்துவா’ என்றான். மன்னனின் கட்டளையை ஏற்று அதிவிரைவாக இமயக் கிரியை அடைந்தான் சுக்ரீவன். கிரி கன்னிகையாக அமர்ந்திருந்த கௌசிகீயை பார்த்து, ‘‘சும்பனின் அரசவையை ஒளிரூட்டும் பேரழகு படைத்தவளே...’’ என்று தொடங்கி அமிர்த வாக்காலும், மயக்கு வார்த்தைகளாலும் பேசி, அவள் வர சம்மதமா என்று அழைத்தான். இவள் சம்மதித்து விடுவாள் என்ற பெருநம்பிக்கையோடு அவள் முகத்தைப் பார்த்தான். அதேபோல அவளும் சம்மதம் என்றாள்.

ஆனால், ‘‘யார் என்னுடன் போரிட்டு வெற்றி பெறுகிறார்களோ அவரையே மணப்பேன். அதையே நான் வரமாகப் பெற்றிருக்கிறேன்’’ என்றாள். தன் பேச்சில் அவள் மயங்காத ஏமாற்றத்தால் பெருங்கோபம் கொண்டான் சுக்ரீவன். அவள் அப்போது தன்னுடன் வரப்போவதில்லை என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டான். உடனே தன் தலைவன் அரசவைக்குத் திரும்பினான். கடுங்கோபத்தோடு நுழைந்த அவன் விவரம் சொல்ல சும்பன் அந்தப் பேரழகிமேல் இன்னும் காமம் கொண்டான். இன்னொருத்தனான தூம்ரலோசனனை அழைத்தான்; அதே பணிக்கு அவனை விரட்டினான். ‘தூம்ரம்’ என்றால் ‘புகை’ என்று பொருள். பொங்கும் புகையோடு பெரும் படையோடு கிளம்பியவன் கௌசிகீயின் எதிரே கர்ஜித்து நின்றான்.

ஆனால், அவளுடைய வாகனமான சிம்மம் அவனைப் பார்த்து ஹூங்காரமிட, அந்த ஒலியிலேயே கரைந்து வீழ்ந்தான். தூம்ரலோசனன் மாண்டான் என்பதை கேள்வியுற்ற சும்ப-நிசும்பரின் படைத் தலைவர்களாக விளங்கிய சண்டனும், புத்தியற்ற வெறும் உடற் கொழுப்பு கொண்ட முண்டனும் ‘எங்களுக்கு நிகர்த்தவள் யாரவள்?’ என்று திமிறிக் கொண்டு கிளம்பினர். மாபெரும் படையோடு வந்த அவர்கள் கௌசிகீயை பார்த்து, ‘இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அப்படியே எங்களோடு வந்துவிடு’ என விகாரமாக அழைப்பு விடுத்தனர். சண்டன் ஓர் அம்பை எடுத்து சிம்மத்தின் பிடரி நோக்கிச் செலுத்தினான்.

கௌசிகீயின் கண்கள் சிவந்தன. அசுரப் படையின் ஒரு பகுதியை தம் கதையாலே ஏவித் தாக்கியபோதுதான் முதன் முறையாக சிம்மவாஹினி சாதாரணவள் இல்லை. இவளே சாமுண்டி என்பதை சண்ட, முண்டர்கள் உணர்ந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்புலம், தேவர்களின் சூழ்ச்சியே என்று தீர்மானித்த அவர்கள், தேவர்களை மிகக் கடுமையாகத் தாக்கினர். அதுவரை சாந்தமாக இருந்த கௌசிகீயின் நெற்றிப் பொட்டிலிருந்து அதிபயங்கர உருவோடு காளி வெளிப்பட்டாள். தெற்றுப் பற்களோடு கூடிய அதிகோர முகத்துடனும், செம்பட்டைச் சடையுடனும், கன்னங்கரியவளாக இருந்தாள்.

கத்தியும், கழுத்தைச் சுருக்கிட்டு இழுத்துப் போடும் பாசமும், கபாலம் சொருகிய கட்வாங்கம் என்ற குண்டாந்தடியும் ஏந்திய அவள், அனேக கபாலத்தை மாலையாக பிணைத்து கழுத்தில் தொங்கவிட்டிருந்தாள். தலையில்லா உடலை இடையில் கட்டி முடிந்திருந்தாள். வரிப்புலியின் தோலை உரித்து சேலையாக்கி போர்த்திக் கொண்டிருந்தாள். உடல் முழுதும் ரத்தக் குழம்பை கஸ்தூரி சந்தனமாகப் பூசிக்கொண்டாள். உலகம் முழுதும் துழாவிப் புசிப்பது போல் நாவைச் சுழற்றியபடி இருந்தாள். கண்கள் செந்தனல் துண்டங்களாகத் தகித்தன. அவள் கர்ஜனை தாங்காது அசுரர்களின் ரத்தமே உறைந்து போயிற்று. ஒட்டு மொத்த படைக் கலன்களையும் சிம்மமும், சாமுண்டியும் சம்ஹரிக்க சும்ப-நிசும்பர்கள் பலம் மொத்தமும் சேர்த்துக் கொண்டு அருகே வர, தேவியின் வாள் நிசும்பனின் தலையை வெட்டியது. சூலத்தை சும்பன் மார்பினில் பாய்ச்சினாள்.

சண்ட, முண்டர்களை அழுத்திக் கொன்றாள். தேவர்களும், வானவரும் கண்களில் நீர் பெருக இருகைகூப்பி துதித்தனர். ‘ஜெய் நிசும்பசூதனி’ என்று ஜெயகோஷம் எழுப்பினர். இந்த சக்தியே மகா சரஸ்வதியான சத்தியம், தர்மத்தை நிலைத்துச் செய்ய வந்த நிசும்பசூதனி. சோழர்களுக்கு நிசும்பசூதனியே வெற்றித் தெய்வம். சத்ரு நாசம் செய்யும் மாகாளி என எண்ணிய சோழகுலச் சக்ரவர்த்தியான விஜயாலயச் சோழன் எண்ணூற்று ஐம்பதாவது வருடம் தஞ்சையில் அவளுக்கு ஒரு கோயில் நிறுவினான். போருக்குச் செல்லும் போதெல்லாம் ‘தஞ்சையை காப்பாய் தேவி’ என்று அவள் பாதம் பணிந்துவிட்டுத்தான் யுத்த களத்திற்குச் செல்வான்.

மிகவும் ஆதாரபூர்வமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் ‘‘தஞ்சாபுரீம் சௌத சுதாங்கராகாம.... என்று தொடங்கும் வடமொழி வரிகளின்படி சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற காளி தேவியை அங்கு பிரதிஷ்டை செய்தான். தேவியின் அருளால் நான்கு கடல்கள் ஆகிய ஆடையை அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையாகத் தரித்துக்கொண்டு சுலபமாக ஆண்டு வந்தான் என்று முடிக்கிறது. மாமன்னன் பரம்பரையை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் அவள் திருவடி பணிந்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவானாம்.

போருக்கு முன்பு லட்சம் படை வீரர்களாயினும் சரி இவள் சந்நதியில் வீழ்ந்து வெற்றி வரம் கோரி யுத்தகளம் ஓடுவார்களாம். இவளே தஞ்சையின் காவல் தெய்வம். தஞ்சையின் புகழை தரணியெங்கும் ஒலிக்கச் செய்த காருண்ய சூலினி. செல்வம் பெருக்கித் தந்த அட்சய மாகாளி இவளே. அன்றிலிருந்து இன்றுவரை அதே பொலிவோடும், அதே சக்தியோடும் விளங்குகிறாள் நிசும்பசூதனி. தேவி மகாத்மியம் உரைக்கும் உருவத் தோற்றத்தை சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் சோழர்கள். மிக கோரமான உருவம். மூக்கு அழுந்தி அதற்குக் கீழே தெற்றுப்பற்கள் துருத்தியிருக்க, பக்கவாட்டில் தலை சாய்த்து அரை பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் நிசும்பசூதனி.

தீச்சுடர் போன்ற கேசம். விலா எலும்புகளைக் காட்டும் வற்றிய தோல். பதினாறு கைகள். அவற்றில் விதவிதமான ஆயுதங்கள். பாம்பை கச்சமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். மெல்லியனவாக இருந்தாலும் அந்தக் கால்களுக்குக் கீழே நான்கு அசுரர்களை வதைத்து அழுத்தும் கோபம் சிற்பத்தில் உயிரோட்டமாக வடித்திருப்பது பார்க்கப் பிரமிப்பூட்டும். இவர்களே சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன். யுத்த களத்தில் உக்கிரமாக போர் புரியும்போது நெஞ்சு நிமிர்த்தி எதிரியை நோக்கி பாயும் வன்மத்தையும், அதனால் முதுகுப் புறம் சற்று வளைந்து குழிவாக இருப்பதையும், எதிர்காற்றில் கபால மாலைகள் இடப்புறம் பறக்கும் வேகத்தையும் சிற்பமாக்கி கலையின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். பெண் எனும் சக்தி பொங்கியெழுந்தால் இப்படித்தான் வீருகொண்டெழும் என்பதே நிசும்பசூதனி சொல்லும் விஷயம். அதேசமயம் தர்மத்தின் பக்கம் நிற்கும் நீதி தேவதை அவள் என்பதையும் மறக்கலாகாது.

தொகுப்பு: கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்