SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அஹோபிலம் என்ற அற்புதம்

2015-05-13@ 09:44:54

ஒரே ஒருஅரக்கனை வதைக்க மஹாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது! பிரபலமான ராம, கிருஷ்ணஅவதாரங்கள் பல அசுரர்களை வதம் செய்தன என்பதிலிருந்து அடுத்தடுத்த யுகங்களில் அரக்கத்தனம் அதிகரித்து வந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஹிரண்யன் என்ற ஒரு அரக்கன், பல்லாயிர அசுரர்களின் ஒட்டுமொத்த உருவமோ என்று வேதனையுடன் வியக்க வைத்தவன். தன்னையே கடவுளாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு அதை ஏற்காதவர்களை, இரக்கமின்றி கொன்றழித்தவன். ஆனால், எந்த அக்கிரமத்துக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை மெய்ப்பிப்பதுபோல அவனுடைய மகனே அவனுக்கு எதிரானான்.

நாராயணன்என்று ஒரு தெய்வம் இல்லை என்று மூச்சுக்கு முன்னூறு தரம் ஹிரண்யன் சிந்தித்ததாலும், பேசியதாலும், செயல்பட்டதாலுமே அவனுடைய மூச்சிழையாக ‘நாராயண’ நாமம் அவனுக்குள்ளேயே ஓடிக்கொண்டுதான் இருந்தது! நாராயணனை வழிபடுபவர்கள் தன்னுடைய எதிரிகள், அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட ஹிரண்யனால், தன் மகனை, தன் தளபதிகளை வைத்துதான் பலவாறாகத் துன்புறுத்தினான் என்பதும், தன் வீட்டிற்குள்ளேயே வளையவரும் தன் எதிரி பிரஹலாதனை தானேநேரடியாக தண்டிக்க முடியாதநிலை ஏற்பட்டதும் ஏன்? மகனையே கொல்லத் துணியாத தந்தைப் பாசமா?

அல்லது எத்தனையோ வகை தண்டனைகளுக்கு உட்படுத்தியும், அவன் சிறிதும் பாதிக்கப்படாதது கண்ட அதிர்ச்சியா? அல்லதுஅம்பை நோகாமல், நேரடியாக எய்தவனையே தாக்கி, மூலகாரணமே இல்லாது செய்துவிடவேண்டும்; அதன் பிறகு பிரஹலாதன்வேறு வழியில்லாமல் தன்னைத்தான் துதிப்பான் என்ற எதிர்பார்ப்பா? ஆனால், பிரஹலாதனின் பக்தி காரணமாகவோ, அதை உலகுக்கே தெரிவிக்க வேண்டும் என்ற பகவானின் ஆவல் காரணமாகவோ மட்டும் நரசிம்ம அவதாரம் நிகழவில்லை; அக்கிரமம் செய்பவன் எத்தனை சலுகைகளை வரங்களாகப் பெற்றிருந்தாலும் அவனால் தப்பிக்கவே முடியாது என்பதை உணர்த்தவே நிகழ்ந்திருக்கிறதுஎன்றே தோன்றுகிறது.

இந்த நிகழ்ச்சியைக் கதையாகக் கேட்டு, மனம் விம்மினாலும், அந்த வதை சம்பவம் நிகழ்ந்த இடத்தை,பகவான் நரசிம்மமாக வெளிப்பட்ட இடத்தை, தரிசிக்கவும் முடியும் என்ற உண்மை நம்மை சிலிர்க்கவைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆமாம், அஹோபிலம் என்ற திவ்ய தேசம், நரசிம்மம் பிளந்துகொண்டு வந்ததூண், ஹிரண்யனின் அரண்மனை மண்டபம் எல்லாம் இன்றளவும் நாம் கண்டு இன்புற காட்சிப் பொருட்களாகத் திகழ்கின்றன. இரண்டாகப் பிளந்து நிற்கும் மலைதான் அந்தத் தூண், ஆங்காங்கேசிதறிக் கிடக்கும்மலைப் பிஞ்சுகள், நரசிம்மம் வெளிப்பட்டபோதுஉண்டான பூகம்ப அதிர்ச்சியின் அடையாளங்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. கருடன் வேண்டிக்கொண்டபடி மஹாவிஷ்ணு நரசிம்மஅவதாரத்தை அவருக்காக மறுபடியும் நிகழ்த்திக் காட்டினார் என்கிறது அஹோபில தலபுராணம்.

கருடனுக்கு அந்த அவதாரத்தைக் காண்பித்த பரந்தாமன், கலியுகத்தில் நாமெல்லாம் வணங்கி,போற்றிக் கொண்டாடும் வகையில் நரசிம்மத்தின் ஒன்பது தத்துவங்களையும் விளக்கும் வகையில் ஒன்பது அர்ச்சாவதார மூர்த்திகளாகக் காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வார்பத்துப் பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்து மகிழ்ந்திருக்கிறார். மென்றபேழ்வாய் வாளெயிற்றோர் கோளறியாய் அவுணன் பொன்றஆகம் வள்ளுகிரால்போழ்ந்த புனிதனிடம்நின்றபசுந்தீ மொன்டு சூறை நீள் விசும்பூடிரியசென்றுகாண்டற் கரிய கோயில் சிங்கவேள் குன்றமே‘‘சிம்மஉருவினனாக, வாள் போன்ற கூரிய பற்களைக் கொண்டவனாக, தன் கூரிய நகங்களால் ஹிரண்யன் உடலைக்கிழித்து, பிளந்து தன் கோபத்தை வெளிப்படுத்திய தலம் இந்த சிங்கவேள் குன்றம்.

இங்கு மூட்டப்படும் தீயானது வானையே தொடும் அளவுக்கு நீண்டு செல்லும். மிக உயரமான மலைகளைக் கொண்ட, அவ்வளவு எளிதாகச் சென்றடைந்து விட முடியாத இந்த சிங்க வேள் குன்றத்தில் எம்பெருமான்திவ்ய தரிசனம் நல்குகிறார்,’’ என்கிறார் ஆழ்வார்.இந்ததிவ்ய தேசம் இரண்டு பகுதிகளாகப் போற்றி வணங்கப்படுகிறது. கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலம் என்று மலைக்குக் கீழே உள்ள கோயில்களையும், மேலே உள்ள கோயில்களையும் சேர்த்து ஒரே திவ்யதேசமாக வழிபடுகிறோம். தன் விருப்பத்தை நிறைவேற்ற எம்பெருமான் தனக்கு நரசிம்மராகக் காட்சி அளித்ததோடு, தன் லீலைகளையும் காட்சிகளாக்கிக் கொடுத்துத் தன்னை உய்வித்தப் பேரருளை எண்ணி வியந்த கருடன், ‘அஹோபிலம், மஹாபலம்’ என்றுபோற்றிப் பணிந்தார்.

உயர்ந்த மலையில் ஒரு குகையில் இவ்வாறு காட்சி தந்ததாலேயே (பிலம்என்றால் குகை) பெருமைமிக்க, பலம் வாய்ந்த அஹோபிலம் என்ற கருடனின் கூற்றாலேயே இத்தலம் இப்பெயர் பெற்றது. மகா பெரியஅசுரன் ஒருவனை எந்த ஆயுதமும் கைக்கொள்ளாமல், விரல் நகங்களாலேயே வதம் செய்த பராக்கிரமத்தைக் கண்ட தேவர்கள், ‘ஆஹா, பரந்தாமனுக்குதான் என்ன பலம்!’ என்று வியக்க, அந்த ஆச்சரியமே ‘அஹோப(பி)லம்’ என்ற பெயரை இத்தலத்திற்கு அளித்ததாகவும் சொல்வார்கள். முதலில்கீழ் அஹோபிலத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தை தரிசிப்போம். இவர் நவநரசிம்மர்களில் ஒருவர் அல்ல என்றாலும், மிகவும் பிரபலமானவர்.

நவநரசிம்மர் தரிசனம் காண இவரத அருளையும், ஆசியையும் முதலில் பெறுவது பொதுவான சம்பிரதாயம். இந்தக்கோயில் அமைந்திருக்கும் சந்நதித் தெருவின் முனையில் ஆஞ்சநேயருக்கான ஒரு சந்நதி அமைந்திருக்கிறது. இவர் பீகாள ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். இவர் ஊருக்கு மட்டுமல்லாமல், அஹோபிலம் கோயிலுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்ந்திருக்கிறார். ஆமாம், அஹோபில மடத்தின் ஆதரவில்கோயில் நிர்வாகம் மேற்கொள்ளப்படுமுன் கோயில் சாவிகளை இந்த ஆஞ்சநேயரிடம் சமர்ப்பித்து,பிறகு அவரது ஆசியுடன் எடுத்துச் சென்று கோயிலைத் திறப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த சந்நதிக்கு அருகில் தேரடி அமைந்திருக்கிறது. தொடர்ந்து போகும்போது இவ்வழியாகவீதிவுலா வரும் பெருமாள் எழுந்தருளும் திருவேந்திக்காப்பு மண்டபத்தைக் காணலாம்.

அதையும் கடந்து சென்றால் நரசிம்ம தீர்த்தம் என்னும்புஷ்கரிணி எதிர்ப்படுகிறது. சற்றே தலை நிமிர்ந்தால் ஐந்து நிலை ராஜகோபுரம் நம்மை ஆசீர்வதிக்கிறது. லக்ஷ்மி நரசிம்மர், சேஷசயனர் முதலானோரின் சிற்பங்களுடன் கோபுரம் அழகுற மிளிர்கிறது. நம்மை இன்னும் அண்ணாந்து பார்க்க வைக்கிறது, கோபுர வாசலருகே நிலை கொண்டிருக்கும் ஒரு ஸ்தம்பம். வெற்றித்தூண் அதாவது, விஜயஸ்தம்பம் என்ற பெயர் கொண்டிருக்கும் இத்தூண், 80 அடி உயரத்திற்குஒரே கல்லால் உருவாகி, நெடிதுயர்ந்து நிற்கிறது. பூமிக்குக் கீழே முப்பது அடி ஆழத்திற்கு இத்தூண் வேரூன்றியிருக்கிறது என்று கேள்விப்படும்போது வியப்பாக இருக்கிறது.

மாமன்னர் கிருஷ்ண தேவராயர் தாம் அடைந்த வெற்றியைக் குறிக்கும் சின்னமாக இதனை நிறுத்தியிருக்கிறார்.இதனருகே நின்று நம் பிரார்த்தனைகளை சமர்ப்பித்தோமானால் அவை எல்லாமேநிறைவேறுகின்றன என்பது காலங்காலமாக இங்கே நிலவி வரும் நம்பிக்கை. இந்தத்தூணுக்குக் கீழே ஆஞ்சநேயர் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மலர் சமர்ப்பித்து அனைவருமே வழிபடலாம். சந்நதி மண்டப முகப்பில் லக்ஷ்மி நரசிம்மரை சிற்ப ரூபமாகதரிசிக்கலாம். சற்றருகே கருடாழ்வார் சந்நதி. இவருக்குப் பக்கத்தில் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த வசந்த மண்டபம். இதனைக் கடந்தால் ஊஞ்சல் மண்டபம். பிராகாரச்சுற்றில், முதலில் ஸ்ரீநிவாசர் சேவை சாதிக்கிறார்.

இவருடன் அலர்மேல் மங்கைத் தாயார்,விஷ்வக்சேனர் மற்றும் கிருஷ்ணரும் மூலவர்களாகவே திவ்ய தரிசனம் தருகிறார்கள். தமது திருமணத்திற்குப்பிறகு ஸ்ரீநிவாசனும், பத்மாவதிதாயாரும் இத்தலம் வந்து இந்த லக்ஷ்மி நரசிம்மரை வணங்கியதாகவும் அந்த சம்பவத்தின் ஆதாரசாட்சியாகத்தான் இவ்விருவரும் கருவறையில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றும்தெரிய வருகிறது. கிருதயுகத்தில் சிவபெருமானும் இந்த நரசிம்மரை ‘மந்திரராஜபத’ ஸ்தோத்திரம் சொல்லி வழிபட்டிருக்கிறார்; அதே போல திரேதாயுகத்தில் ராமபிரான், லக்ஷ்மணனுடன் இத்தலம் வந்து நரசிம்மரைத் தொழுதுராவணன் மீதான தம் வெற்றிக்கு உறுதுணையாக உதவுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறது புராணம்.

பிராகாரத்தைமேலும் வலம் வரும்போது ஸ்ரீராமானுஜரை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். அவருடன் வேதாந்ததேசிகரும், அஹோபில மடத்தை உருவாக்கிய ஸ்ரீ ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகரும் எழுந்தருளியுள்ளார்கள்.உலக பக்தர்களுக்கெல்லாம் நரசிம்ம தரிசனத்துக்கு வழிகாட்டிய இந்த மகான், மைசூர் திருநாராயணபுரத்தைச் சேர்ந்தவர். கிடாம்பி கேசவாசார்யாஎன்பது இவரது பூர்வீகப் பெயர். இப்படி ஒரு சேவை செய்திருக்கும் இவருக்கு இத்தலத்தில்உறையும் பகவான் லக்ஷ்மி நரசிம்மரே மரியாதை செய்திருப்பதிலிருந்து இந்த மகானின் பெருமையைப்புரிந்துகொள்ளலாம். ஆமாம், இவருக்கு ‘ஸ்ரீவண் சடகோப ஜீயர்’ என்ற தாஸ்ய நாமத்தையும்,காஷாயத்தையும் பெருமாளே வழங்கினார் என்ற செய்தி மேனியை சிலிர்க்க வைக்கிறது.

பரந்தாமனைத்தொடர்ந்துஸ்ரீராமானுஜரும் தம்மிடமிருந்த த்ரிதண்டத்தைஅளித்திருக்கிறார். பிரதாப ருத்திரன் என்ற காகதீய வம்சத்து அரசன், தங்கத்தாலான மாலோல நரசிம்மரை அளித்தான். (இந்த மாலோலர் இப்போதும் மடத்து ஜீயருடன் புறப்பாடு கண்டருள்கிறார்.) கி.பி.1300ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற இச்சம்பவங்கள் மடத்திலுள்ள சாசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. சடகோப ஜீயரை மீண்டும் ஒருமுறை தரிசித்துநம் சந்தோஷத்தையும், நன்றியையும், தெரிவித்துக் கொள்வோம். பட்டாபிராமன் தனிச் சந்நதியில் அழகுக் கோலம் காட்டுகிறார். இவருக்கு இடப்புறம் சீதை. வலப்புறத்தில்உள்ள லக்ஷ்மணன், வித்தியாசமாக இரு வில்களைத் தாங்கி நிற்கிறார்.

அண்ணன் பட்டாபிஷேகம்காணும்போது, அதுவரை அவருக்கு உறுதுணையாக இருந்த வில், இப்போது பட்டாபிஷேக சம்பிரதாயங்களுக்குக் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்குமென்று தம்பி கருதினாற் போலிருக்கிறது; அண்ணனுடைய வில்லையும் தானே ஏந்தி நிற்கிறார்!இவர்களை மண்டியிட்டுத் தொழுதபடி ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார்.பக்கத்தில்கண்ணாடி மண்டபம். அடுத்து தாயார், ஆண்டாள் சந்நதிகள். சற்று தள்ளி ரங்க மண்டபம். அதற்கடுத்தகல்யாண மண்டபம் தனிச் சிறப்பு கொண்டது. மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடமைந்த 64 தூண்கள்இந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இது வேமாரெட்டி என்ற மன்னரால் 14ம் நூற்றாண்டில்நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

நவநரசிம்மர்களை தரிசிப்பதற்கான முன்னோடியாக இந்த இரு மண்டபத் தூண்களிலும், வராஹ நரசிம்மர், வில் ஏந்திய காராஞ்ச நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்ட கம்ப நரசிம்மர், ஹிரண்யனைப் பற்றும் நரசிம்மர், அவனை வதம்செய்து அவன் குடலை மாலையாகப் போட்டுக் கொள்ளும் ஜ்வாலா நரசிம்மர், பிரஹலாதன்மற்றும் கருடாழ்வாருடன் காட்சியளிக்கும் சதுர்புஜ நரசிம்மர், அபய பிரதான நரசிம்மர், ராம - லக்ஷ்மணருக்குக் காட்சி தந்த பிரத்யக்ஷ நரசிம்மர், வேறு எங்குமே காணவியலாத லக்ஷ்மியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கும் யோக நரசிம்மர், செஞ்சுலக்ஷ்மித் தாயாருடன் நரசிம்மர், காளிங்க நர்த்தன கிருஷ்ணன்,வெண்ணெய்த் தாழியுடன் கண்ணன், வேணுகோபாலர், சஞ்சீவி மலையைத் தாங்கிய ஆஞ்சநேயர், வராஹப் பெருமாள், யோகானந்த நரசிம்மர், மேற்கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ்க் கரங்களில் மலர்களையும் ஏந்திய மஹாவிஷ்ணு, மன்னன் பிரதாப ருத்ரன், ஆதிவண் சடகோபஜீயருக்கு மாலோலனை வழங்கும்காட்சி என்று பல வடிவங்களைக் கண்டு மகிழலாம்; பிரமிக்கலாம்.

கருவறையில் பெருமாள் தரிசனம் அப்படியே உள்ளத்தைக் கரைக்கிறது. நரசிம்மம் இத்தனை சாந்தமாகக் காட்சியளிப்பது கண்டு பயபக்திக்கு பதிலாகவிநயபக்திதான் மேலோங்குகிறது. இடது மடியில் மஹாலக்ஷ்மியை இருத்திக்கொண்டுசுதர்சன பீடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த தோரணை, கருணை மிகுந்த மாமன்னன்தம் குடிகளைக் காக்கும் பாவனையிலேயே அமைந்திருக்கிறது. ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடித்திருக்கிறது. மேற்கரங்கள் சங்கும், சக்கரமும் ஏந்த, கீழ் இடது கரம் லக்ஷ்மியை அரவணைத்திருக்க, கீழ்வலது கரம் அபய ஹஸ்தமாக அருள் பொழிகிறது. இவர் தரித்திருக்கும் சாளக்கிராம மாலை தனிப்பொலிவுடன் துலங்குகிறது.

இவரது காலடியில் ஆஞ்சநேயர் விநயத்துடன் சிறு வடிவினராகக் காட்சிதருகிறார். உற்சவரான பிரஹலாத வரதனுக்கும் சதுர் புஜங்கள்தான். அவை, சங்கு, சக்கரம், கதை தாங்கி அபய ஹஸ்தமாகவும் திகழ்கின்றன. இவருடன் ஸ்ரீதேவி-பூதேவியையும் காணலாம்.இதே சந்நதியில் பாவன நரசிம்மர், மேல் அஹோபிலம் உக்ர நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், ஆண்டாள், சுதர்ஸனாழ்வார், கிருஷ்ணன், விஷ்வக் சேனர், ராமானுஜர், பலிபேரர், நித்யோத்சவர் ஆகியோரும் உற்சவ மூர்த்திகளாக வாசம் செய்து நமக்குப் பேரானந்த அருள்புரிகிறார்கள். கூடுதல்சந்தோஷமாக ஆழ்வார்கள் உற்சவ மூர்த்திகளையும் நாம் தரிசிக்கலாம். இவர்களோடு ஆதிவண் சடகோபஜீயர் தன் கரத்தில் ஸ்ரீமாலோல நரசிம்மருடன் எழுந்தருளியிருப்பது குறிப்பிடத்தக்கது,பார்த்து நெகிழத்தக்கது.

முக்கியமாகஇந்த கீழ் அஹோபிலக் கோயிலிலேயே, மேல் அஹோபிலத்து உற்சவ மூர்த்திகள் எல்லாம் கோயில் கொண்டிருப்பது, மேல் அஹோபிலப் பயணத்தில் கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருக்காத வசதியை பகவானே ஏற்படுத்தித் தந்திருக்கிறாரோ என்று எண்ண வைக்கிறது. வனப் பிரதேசமான மேல் அஹோபிலத்தில்குறைந்த நேரத்தை செலவிடுவதே நமக்குப் பாதுகாப்பு என்று பெருமாளும், அஹோபில நிர்வாகிகளும் நினைத்தார்கள் போலும்! விவரம் தெரிந்தவர்கள் அல்லது ஏற்கெனவே பலமுறை அஹோபிலம் வந்துபெருமாளை வழிபட்டவர்கள் பார்கவ நரசிம்மரின் உற்சவ மூர்த்தியை மேல், கீழ் இரு அஹோபிலக் கோயில்களிலும் காணோமே என்று யோசிக்கலாம்.

அந்த உற்சவர், வட இந்தியாவில்ஆஜ்மீரை அடுத்த புஷ்கரத்தில் கோயில் கொண்டுள்ளார் என்ற தகவல் அந்த சந்தேகத்துக்குத் தீர்வாக அமைகிறது. அடுத்துதனிச் சந்நதியில் மூலவராக அமிருதவல்லித் தாயாரை சேவிக்கலாம். இதே கருவறையில் தாயார் உற்சவராகவும் தரிசனம் நல்குகிறார். தாயார் சந்நதி நுழைவாயிலில் இரு துவாரபாலகிகள்-குமுதினி, குமுதாக்ஷிணி. மேல் அஹோபில உக்ர நரசிம்மர் சந்நதியின் உற்சவ தாயாரானசெஞ்சு லக்ஷ்மியும் இதே அறையில் கொலுவிருக்கிறார். இந்தத் தாயார் சந்நதியை ‘அம்மவாருசந்நதி’ என்றழைக்கிறார்கள். தாயாருக்கு அடுத்ததாகதனியே ஆண்டாள் மூலவராக எழுந்தருளியிருக்கிறாள்.

இந்தக் கோயிலில் புரட்டாசி-ஐப்பசி மாதங்களில் பவித்ரோற்சவமும், மாசி-பங்குனி மாதங்களில் பிரம்மோற்சவமும் அஹோபில மடத்தினரால் அமோகமாக நடத்தப்படுகின்றன. லக்ஷ்மிநரசிம்மப் பெருமாளின் பாதாரவிந்தங்களில் நம் நமஸ்காரங்களை சமர்ப்பித்துவிட்டு மேல் அஹோபிலம் நோக்கிப் பயணத்தைத் தொடருவோம். மேல் அஹோபிலத்தைஅடைய கீழிருந்து 8 கி.மீ. செல்ல வேண்டும். ‘பெத்த அஹோபிலக்ஷேத்ரம்’ என்றழைக்கப்படும் இந்தத் தலத்திலிருந்து 76 படிகள் நம்மை உக்ர நரசிம்மர் கோயிலுக்கு உயர்த்தி அழைத்துச் செல்கின்றன. ‘ரொம்பவும் களைத்துவிட்டாயே, அப்பா,’ என்று வாஞ்சையுடன் அழைத்து ஆறுதல் அளிக்கிறது மூன்று நிலை ராஜகோபுரம்.

அந்த அன்புக்குத் தலை வணங்கி குனிந்து உள்ளே செல்கிறோம். இதனை குடைவரைக் கோயில் என்கிறார்கள். அதிசயமாகத்தான் இருக்கிறது. உயர்ந்த மதில்கள், மகாமண்டபம், முகமண்டபம்என்று பெரியதாகவே விளங்குகிறது கோயில். உக்ர நரசிம்மர் சுயம்பு மூர்த்தி. இவர் அஹோபிலநரசிம்மர் என்றும் அஹோபிலேசன் என்றும் அழைக்கப்படுகிறார். சக்ராசனத்தில் வீற்றிருக்கும் உக்ர நரசிம்மர் இரு கரங்களுடன் திகழ்கிறார். கிழக்குநோக்கிய தரிசனம். சிறிய மூர்த்திதான்; ஆனால், கீர்த்தி மிக்கது, பேரெழிலும் வாய்ந்தது.ஒரு கரத்தால் ஹிரண்யனின் தலையையும் இன்னொரு கரத்தால் அவனுடைய உடலையும் பிடித்துக் கொண்டிருக்கிறார் இவர்.

ஆனால், ஒரு மகா அசுரனை ஆக்ரோஷம்கொண்டு வதைக்கும் போது அவர் முகத்தில் கோபம் எப்படிக் கொப்புளிக்க வேண்டும்,எத்தனை கடுமை தெரிய வேண்டும்? ஆனால், தன் பெயருக்கேற்றாற் போலவோ, செயலுக்கேற்றாற் போலவோஅவர் கோபாவேசம் கொள்ளாதிருப்பதற்குக் காரணம், பக்கத்திலேயே புன்முறுவலுடன் பிரஹலா தன்நின்றிருப்பதால் தானோ என்றும் எண்ண வைக்கிறது. குகைக்குள்ளேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த சந்நதியில் கருடாழ்வாரும் எழுந்தருளியுள்ளார். லிங்க ரூபமாக சிவபெருமானும், ராம-லட்சுமணரும் தரிசனம் தருகிறார்கள். தூண்களில் கிருஷ்ணர், தாச அனுமனோடு கருடனையும் தரிசிக்கலாம். (உக்ர நரசிம்மரின்உற்சவ மூர்த்தியை நாம் ஏற்கெனவேகீழ் அஹோபிலத்தில் தரிசித்துவிட்டோம்).

சிறியவடிவில் லக்ஷ்மி நரசிம்மர், ஆதிவண் சடகோப ஜீயர், நித்யோத்சவர் ஆகியோரும் நம் மீது கருணைபொழிகிறார்கள். பக்கத்தில் கருடாழ்வாரையும், ஒருசேர தரிசிக்கலாம். உக்ரநரசிம்மர் கருவறைக்கு எதிரே சேஷ வாகனம் இருக்கிறது. இதனடியில் குகை வழி ஒன்று இருந்ததாகவும்,அஹோபில மடத்து 6ம் பட்டத்து ஜீயரான ஷஷ்ட பராங்குச யதீந்திர மஹாதேசிகன், தான் இந்தக்குகைக்குள் புகுந்து கொள்வதாகவும், அதற்குப் பிறகு குகை வாசலை மூடிவிடுமாறு தன் சீடர்களுக்கு உத்தரவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, மூடப்பட்ட இந்தக் குகைக்குள் அவர் இன்றளவும் நரசிம்மரை ஆராதித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

(இச்சமயத்தில் ஷஷ்ட பராங்குச மகாதேசிகனாரைப் பற்றிச் சற்றுத் தெரிந்துகொள்வோம். கரலப்பாக்கம் வங்கீபுரம்வெங்கடாச்சார்யார் என்பது இவருடைய இயற்பெயர். இவர் தன் பக்தியால்,நரசிம்மப் பெருமாளின் அருளால் நீர்வற்றியிருந்த நீர்வளூரை வளம் செழிக்கும் தலமாகமாற்றிய பெருமை கொண்டவர். அரசரவையில் பிரதான அங்கம் வகித்து ராஜரிஷியாக திகழ்ந்தவர். விஜயநகர மன்னரின் மகளுடைய நாள்பட்ட நோயைத்தீர்த்து வைத்து அதற்குச் சன்மானமாகப் பல மானியங்களைப் பெற்றவர். அந்தமானியங்களை வைணவம் தழைக்கவும், வைணவத் தலங்களைப் பராமரிக்கவும் செலவிட்டவர். விஜயநரகமன்னரை அஹோபிலத் திருத்தலத்துக்கு வருகைதரச் செய்தவர்.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், ‘நரசிம்மஸ்தாம்‘,‘ப்ரபத்தி ப்ரயோகம்’ ஆகிய நூல்களை இயற்றியவர்.) கோயில்சந்நதி மண்டபத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த சுதர்சன யந்திரம் உள்ளது. இங்கே ஆழ்வார்களும், ராமானுஜரும் சந்நதிகள் கொண்டுள்ளனர். தூணில் செஞ்சுலட்சுமி தாயாரை வித்தியாசகோலத்தில் காணலாம். வேடுவ குலத்தில் அவதரித்த இவர் அம்புவிடும் தோரணையில் காட்சியளிக்கிறார். இவரையே மூலவராக தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். சதுர்புஜங்களுடன் அமர்ந்த திருக்கோலம். இவரது உற்சவ மூர்த்தியைத்தான் கீழ் அஹோபிலத்தில் அம்ருதவல்லித் தாயார் சந்நதியில் தரிசித்தோம்.

‘வாஸந்திகா பரிணயம்’ என்ற க்ரந்தம், செஞ்சுலக்ஷ்மி தாயாரை, நரசிம்மர் மணந்த வரலாற்றை விவரிக்கிறது. ஹிரண்யனை வதைத்தும், அவனை நார், நாராகக் கிழித்தெறிந்தும் கோபம் தணியாதநரசிம்மரை சாந்தப்படுத்தியவர் செஞ்சுலக்ஷ்மி தாயார்தான். இவரை மணந்த பிறகுதான் தன்கோபம் முற்றிலும் நீங்கப் பெற்றார் நரசிம்ம மூர்த்தி. தன் பிறப்பாலேயே வேடுவ குலத்துக்குப் பெருமை தேடித் தந்த செஞ்சுலக்ஷ்மி தாயார், பகவானின் கோபத்தை அறவே நீக்கி, பக்தர்களுக்குகருணை பூர்வமாக, நரசிம்மப் பெருமாள் அருள் வழங்கக் காரணமாக இருந்திருக்கிறார். இந்தக்கோயிலுக்கு அருகிலேயே பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் படிகள் அமைந்துள்ளன.

சற்றுத் தொலைவில் ஓடும் பவநாசினி ஓடைக்குஅருகில், நூறு தூண்களைக் கொண்டகாலக்ஷேப மண்டபத்தைக் காணலாம். அடுத்து வராஹ நரசிம்மரை தரிசிப்போம்.உக்ர நரசிம்மர் கோயிலுக்கு அருகிலேயே வராஹ நரசிம்மர் கோயிலைக் காணலாம். வராஹ குண்டம் என்ற தீர்த்தமும்,வராஹ மண்டபமும் விளங்கும் இந்தத் தலத்தில் எழுந்தருளியுள்ளார் வராஹ நரசிம்மர். இதுவும் குடவரை குகைக்கோயில்தான். இந்தக் குகையை வராஹ க்ஷேத்ரம் என்று அழைக்கிறார்கள். பொதுவாக வேறெந்த கருவறையிலும் காணவியலாத வராஹரை இங்கே தரிசிக்கலாம். ஆமாம், வராஹ அவதாரம் கொண்ட எம்பெருமான் தன்மூக்கின்மீது பூமிதேவியாரைத் தாங்கியபடி காட்சியளிக்கிறார்.

அவரது நாசி மீது பூமிபிராட்டியார் அமர்ந்திருக்கும் நளினம்பார்த்துப் பார்த்து இன்புறத்தக்கது. இந்த வராஹ நரசிம்மர் இரண்டு கரங்களால் அருள்
பாலிக்கிறார்.இந்தக் கருவறையிலேயே லக்ஷ்மி நரசிம்மரையும் சேவிக்க முடிகிறது. ஒரே கருவறையில் இரு மூலவர்கள்! இதிலும்ஒரு நயம் இருக்கிறது. திருமாலின் வராஹ அவதாரத்துக்கு அடுத்தது, நரசிம்ம அவதாரம். இந்த இரு அவதாரங்களையும் இந்தக் கோயிலில் ஒரே கருவறையில் தரிசனம் காண்பது பெரும் பேறுதானே! வராஹ நரசிம்மரின்அருளைப் பெற்றுக்கொண்டு அடுத்ததாக மாலோல நரசிம்மரை தரிசிப்போம். வராஹ
நரசிம்மர் ஆலயத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில், மலைப்பாதையில் அமைந்திருக்கிறது மாலோல நரசிம்மர் கோயில்.

செல்லும்வழி சற்றுக் கடுமையானதுதான். சில இடங்களில் மலைப் பாதையில் செல்லவேண்டியிருக்கிறது.திடீரென எதிர்ப்படும் படிகளையும் ஏறிக் கடக்க வேண்டியிருக்கிறது! அகலம் குறைவான பாதை. 4 பேர் பக்கத்துப் பக்கமாக சேர்ந்து போக முடியாது. மாலோலநரசிம்மரை தரிசிக்க அவரது சந்நதிக்குப்போகும் வழியில் சிறு வடிவினனாக கபாலிகனைக் காணலாம். பக்கத்திலேயே துர்க்காதேவி சிலையும்,இரு பாத சிற்பத்தையும் காண முடிகிறது. இந்த கபாலிகனுக்கு ஒரு பின்னணிக் கதை உண்டு.ஆதிசங்கரரைத் தாக்கி அவர் உயிரைப்பறிக்க முயன்றான் கபாலிகன். அப்போது சங்கரரின் பிரதான சீடரான பத்மபாதர் அவனைத் தடுக்க முயன்றார்.

குருவைக் காப்பாற்றமுனைந்த இவருடைய முயற்சியைப் பாராட்டும் வகையில் நரசிம்மர் இவரது உடலுக்குள் புகுந்துகொள்ள,பத்மபாதரால் கபாலிகனை எளிதாக வதைக்க முடிந்தது. தன் பொருட்டு நரசிம்மர்மேற்கொண்ட இந்த கருணைச் செயலை வியந்து போற்றிய ஆதிசங்கரர், ‘நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்’ இயற்றி அவரைத் துதித்தார். குருநாதரைக் காத்த பத்மபாதனைச் சித்தரிக்கும் விதமாகத்தான்இரு பாதச் சுவடுகள் இங்கே காணப்படுகின்றன.கபாலிகன் வணங்கிய துர்க்கைதான்அடுத்து இருப்பது. ஆனால்,இந்தப் பாதங்கள் மஹாலக்ஷ்மியுடையவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சிவபெருமான்தான் கபாலிகன் என்றும் அவர் துர்க்கையுடன் சேர்ந்து ‘மந்த்ர ராஜபத ஸ்தோத்திர’த்தை உச்சரித்து நரசிம்மரை வழிபட்டதாகவும், அப்போது நரசிம்மருடன் இணைந்திருந்த மஹாலக்ஷ்மியின் பாதங்கள்தான்அவை என்றும் சொல்கிறார்கள்.

சந்நதியில் மூலவராகத் திகழ்கிறார் மாலோல நரசிம்மர். இடது மடியில் மஹாலக்ஷ்மியை அமர்த்தியதால் லக்ஷ்மிநரசிம்மராகவும் வழிபடப்படுகிறார். மேற்கரங்களில் சங்கு, சக்கரம், கீழ் வலது கரம் அபய ஹஸ்தம், கீழ்இடது கரம் தாயாரை அரவனைக்க, சதுர்புஜ நாயகனாக எழிலுடன் சேவை சாதிக்கிறார். இவர் மாலோலலக்ஷ்மிப்ரியர் என்றும் மாலோல லக்ஷ்மி நரசிம்மர்என்றும் பக்தர்கள் போற்றித் துதிக்கிறார்கள். பகவான் மடியில் அமர்ந்திருக்கும் தாயாரின்பாதங்களை தாமரை மலர் ஒன்று தாங்கியிருக்கிறது. மூலவரின் சிரசுக்கு நிழல் கொடுத்தவாறுசேவை புரிகிறது ஆதிசேஷன். ஆதிசேஷனுக்கும் மேலாக சிம்ம விதானம் அமைந்திருக்கிறது.

திருமங்கையாழ்வாரைதனிச் சந்நதியில் உள்ளம்குளிரக் காணலாம். பத்துப் பாசுரங்களால் அஹோபில நரசிம்மரைப் பாடிப் பணிந்த அந்தப் பெருந்தகைஎளிமை தோற்றம் காட்டுகிறார். கோயில்மேற்புற முகப்பில் லக்ஷ்மி நரசிம் மரும், ஆதிவண் சடகோப ஜீயரும் இடம் பெற்றிருக் கிறார்கள்.மாலோல நரசிம்மரின் உற்சவ மூர்த்தியே அஹோபில மடம் ஜீயரோடு எழுந்தருளியிருக்கிறார். அஹோபிலநவ நரசிம்மர்களில் யாரை முதலில் தரிசிப்பது, அடுத்ததாக எந்த நரசிம்மர் என்ற வரிசையில் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறார்கள். அவரவர் அனுபவப்படி, அவரவர் வசதிப்படி இந்தநரசிம்மர்களை தரிசிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

ஆனால், ‘ஜ்வால ஹோபில மாலோல க்ரோடாகாரஞ்ச பார்கவ யோகநந்தஸ் சித்ரவடு பவநோ நவ மூர்த்தியே’ என்ற ஸ்லோகப்படியான வரிசையில் நவ நரசிம்மர்களை சேவிப்பதே உகந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள். அங்கே உள்ள ஒரு வரைபடத்தில்அந்த நரசிம்மக் கோயில்களைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அடுத்ததாக நாம் சேவிக்கப் போகும் பகவான், காரஞ்ச நரசிம்மர். கீழ் அஹோபிலத்திலிருந்து மேல் அஹோபிலத்துக்குச் செல்லும் வழியில் வலது புறத்தில் இவருக்கான கோயில் உள்ளது. இது சுமார் 1 கி.மீ. தொலைவில்மேல் அஹோபிலத்துக்கு முன்னாலும், கருடாத்ரி மலைத் தொடரின் மேற்கு திசையிலும் அமைந்துள்ளது. இக்கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதால், புதுப் பொலிவுடன் திகழ்கிறது.

தொடரும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்