SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவலைகள் களைவான் கந்தவேள்

2013-12-11@ 16:00:48

தெய்வானை தவம் செய்ய உறுதிபூண்டு பூலோகத்தில் இறங்கினாள். மதுவனத்தில் நுழைந்தாள். இந்திரனின் மகளாயினும் எளியவளாக மாறினாள். பன்னீர் விருட்சத்தின் கீழ் அமர்ந்தாள். தியானத்திற்குரியவரை மனதில் நிறுத்தினாள். அதேசமயம், வேறொருபுறம் அம்பரன், அம்பன் என்ற இரண்டு அரக்கர்கள் அதே மதுவனத்தின் வெகுதொலைவில் தவமியற்ற எண்ணி அக்னி குண்டங்களின் மத்தியில் அமர்ந்தனர்.

அது தேவர்களை விட அசுரர்கள் கடுந்தவம் இயற்றிய யுகாந்திர காலம். காலம், தேசமெல்லாம் மறந்து தீ சுடினும் தவம் கலையாது கயிலைநாதன் வரும்வரை காத்திருந்தனர். அரனும் மகிழ்ந்து அவர்கள் கோரிய வரம் அளித்தார். ஆனால் கிடைத்த வரத்தை ரத்தினமாக பாதுகாக்காது மகாபாதகச் செயலாக அடாது செய்ய ஆரம்பித்தனர்.

குழந்தை குமரன், குமரப் பருவத்தை எட்டியிருந்தான். அம்பரனுக்கும், அம்பனுக்கும் தந்தையார் அகமகிழ்ந்து, அவர்கள் கேட்ட வரங்களை ஒன்று விடாது அளித்ததை அறிந்து மகிழ்ச்சியுற்றான். ஆனால், அடுத்தடுத்து நிகழ்ந்தவை கந்தனை கோப சிகரத்தில் ஏற்றியது. அசுரர்கள் தேவ குலப் பெண்களின் கற்பை சிதைத்தனர். காமக் கொடூரர்களாக விளங்கி தேவலோகத்தையே நரகலோகமாக்கினர்.

இந்திரன் இடிந்து அமர்ந்தான். தேவர்கள் கூட்டம் கதறியது. கயிலை சென்று ஈசன் முன் கண்ணீர் பெருக்கி அரக்க சகோதரர்கள் செய்யும் அட்டகாசங்களை சொன்னது. உடனிருந்த கந்தன் முதலில் எழுந்தான். தந்தையளித்த வரங்கள் இப்படி அதர்மம் செய்வதற்கா என கர்ஜித்தான். பார்வதிதேவி கந்தனை சமாதானப்படுத்தினாள். ‘ஈசனிருக்க ஏன் கவலைப்படுகிறாய் குமரா... காலம் பார்த்து கயிலைப்பெருமான் செய்வதைப் பார்’ என்றாள். தேவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

அம்பர சகோதரர்கள் நித்திரையின்போது மஞ்சத்திலிருந்து தவறி விழுந்தனர். அசுர சேவகர்கள் ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்று அவர்களை விட்டு விலகினர். அசுரர்களை மரணபயம் கவ்வியது.

கயிலையில் பார்வதிதேவி குமரனை ஆதூரத்தோடு பார்த்தாள். இவனுக்கு எப்போது மணம் செய்விப்பது என மெல்லிய கவலை கொண்டாள். இவனை மணப்பவள் இருக்கும் திசையை மகாதேவன் சுட்டிக் காண்பித்தார். பார்வதி அந்த அடர்ந்த காட்டின் அழகை கண்டு வியந்தாள். இவளா என் மருமகள் என மகிழ்ந்தாள். சிவன் இப்போது பார்வதியை நோக்க, அவள் அசுரர்களை அழிக்கப் புறப்பட்டாள். கந்தனும் பூவுலகம் வரை தாயுடன் வந்தான். பார்வதி, ‘‘இது என்னால் நிகழ்த்தப்பட வேண்டிய வதம். உனக்கானது அடுத்துள்ளது. அதோ அந்த மதுவனத்திற்குச் செல். நான் சொன்னதின் காரணத்தை அறிவாய்” என்றாள்.

தாய் சொன்ன கணத்தில் தன்னை யாரோ அழைப்பது போன்று உணர்ந்த கந்தன், அந்த திசை நோக்கி நகர்ந்தான். தேனடைகளிலிருந்து தேன் தாரையாக வழிந்து கொண்டிருந்ததை ஆச்சரியமாக கண்டான். தேனும், தினைமாவும் உண்பவன் இன்னும் களிப்புற்றான். கிளி ஒன்று இசையாய் கீச்சிட, அந்த ஓசை வந்த திசை நோக்கி நகர்ந்தான். கிளிக் குரல் புறப்பட்ட இடத்தில் தெய்வானை தன் தவம் ஈடேறும் கட்டத்தில் இருந்தாள். தெய்வானையின் தவத் தோற்றம் கந்தனை தன்வயமிழக்க வைத்தது. காற்றில் மிதக்கும் சிறகுபோல நடந்து தெய்வானை முன்பு நின்றான். கிளி, ‘குமரன்.. குமரன்..’  என்று படபடத்தது. கண்கள் திறந்தாள் தெய்வானை. கந்தன் அவளை தேவர் தலைவனான இந்திரனின் மகள்  என்று அடையாளம் கண்டு கொண்டான். தெய்வக் காதல் அரும்பிற்று. உள்ளங்கள் உரையாட... உதடுகள் பேச என்ன இருக்கிறது என்பதாக சிலையாகி நின்றனர். தெய்வானை கந்தனை வணங்கி மகிழ்ந்தாள். பிறகு பிரியா விடைபெற்று, தேவலோகம் சென்றாள்.

வெகுதொலைவில் அம்பர சகோதரர்களின் மரண ஓலம் காட்டிற்குள் எதிரொலித்துத் திரும்பியது. தன் தாய் தன் கடமையை நிறைவேற்றிவிட்டாள் என்ற உண்மை புரிந்தது வேலவனுக்கு. தேவர்கள் தேவியை தோத்திரம் செய்வது இனிய கானமாக காற்றினுள் மிதந்து வந்தது. ஒளிந்து ஒதுங்கியிருந்த தேவர்கள் வானுலகிற்கு சென்றபோது, வனத்தில் நடந்து கொண்டிருந்த கந்தனைக் கண்டனர். அசுரர்கள் கொட்டம் அழிந்ததைச் சொன்னார்கள். வேறொரு விஷயத்தையும் சொன்னார்கள்.

சூரபத்மன் எனும் அரக்கன் வேறொரு பக்கம் அட்டகாசங்கள் செய்வதாகவும் அதை தேவியிடம் தெரிவித்த போது குமரன் வதம் செய்வான் என்று அருளிச் சொன்னதைச் சொன்னார்கள். அந்தக் காட்டின் அமைதி, குமரனை அங்கு வெகுகாலம் குடிகொள்ளச் செய்தது. இரு வதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் தனிமை தவம் போன்ற ஒரு பக்குவத்தை அந்த மதுவனம் அவனுக்குத் தந்தது. கந்தனையே மணம்புரிய விரும்பிய தெய்வானை எனும் கன்னிகையின் தவத்தை காணநேர்ந்ததும் அடுத்ததொரு வதம் இருப்பதை சூட்சுமமாக சுட்டிக்காட்டிய தாயின் திருவடியை மனதுக்குள் தியானித்துக் கொண்டு கானகம் விட்டகன்றார் கந்தன். சூரபத்மனை வதைத்து, தனக்காக தவம் இருந்த தெய்வானையை மணந்து, அடுத்து வள்ளியையும் திருமணம் புரிந்து தான் மிகவும் விரும்பிய இந்த கானகத்திற்கு வந்து கந்தன் குடிகொண்டு அடியார்களுக்கு அருள் மழை பொழிந்தான். அதனால்தான் இன்றும் இத்தலம் கந்தன்குடி என்றே விளங்குகிறது.

தவமிருந்து தெய்வானை பார்த்த அந்த தலத்தை நாமும் காண்போமா? இயற்கை அற்புதத்தின் மத்தியில் அழகுக் குமரன் கோயில் கொண்டிருக்கிறான். கிழக்கு நோக்கிய கோயில். வாயிலிலிருந்து நீண்ட நடுமண்டபம். அதன் மேல் விதானத்தில் அறுபடை வீடுகளையும் அழகிய சித்திரமாக வரைந்துள்ளனர். அதனருகே தெய்வானைக்கு தெற்கு நோக்கிய தனிச்சந்நதி அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் கைகளில் கிளியோடு, தவம் முடித்த அருட்களை முகத்துடன் அருள்கிறாள், தெய்வானை. இவளை தரிசித்தாலே போதும் திருமணம் கைகூடும். மகாமண்டபத்தில் நடராஜர் சபையும் அதனையடுத்து ஸ்நபன மண்டபமும் உள்ளன.

அர்த்தமண்டபத்தை அடுத்து கர்ப்பகிரகத்தில் வள்ளி&தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி ஆனந்தமாக வீற்றிருக்கிறார். கந்தனின் தரிசனம் கண்ட மாத்திரத்தில் துயரங்கள் எல்லாம் தூசாகப் பறந்து போகின்றன. இந்த கந்தவேளை அருணகிரிநாதர்  போற்றித் திருப்புகழ் பாடியுள்ளார்.

 உள்பிராகாரத்தில் தெற்கே விநாயகர் வீற்றிருக்கிறார். ஐராவதம் எனும் தேவேந்திரனின் வெள்ளை யானையை தெய்வானைக்கு துணையாக கந்தன் குடிக்கு இந்திரன் அனுப்பி வைத்தான். அந்த ஐராவதம் திருக்குளத்தில் நீராடி வழிபட்டு ஈசனை அடைந்தது. அந்த லிங்கம் இன்றும் ஐராவதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் தலவிருட்சம் பன்னீர் மரம்.

இதனடியில் தெய்வானை தவமிருந்தாள். இந்த ஆலயத்தில், காசியைப்போல விஸ்வநாதரும், விசாலாட்சியும் தனிச் சந்நதிகளில் வீற்றிருக்கின்றனர். கந்த புஷ்கரணி எனும் திருக்குளம் ஒன்று உள்ளது. இதில் நீராடி கந்தனை வழிபடுவோர் மனதிலிருந்து மாசுகள் கரைந்தோடும் என்பார்கள். இக்கோயிலின் பைரவர் சந்நதிக்கு எதிரேயுள்ள ஜன்னலில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து சொட்டிய தேனைச் சேகரித்து மூலவருக்கு முன்னாளில் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். சிறிய ஆலயமானாலும் கீர்த்தியிலும் கந்தனின் புகழ்பாடுவதிலும் ஈடிணையற்ற கோயில் இது.

இத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம் & காரைக்கால்; மயிலாடுதுறை & காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை அடுத்து கந்தன் குடியை காணலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • singapore-door-robot

  சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

 • uk-lockdown13

  பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!

 • mask_ramadaaa1

  சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!

 • chenaabbb11

  இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!

 • 13-04-2021

  13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்